.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 8 December 2013

உடல் உறுப்புகள் சண்டையிட்டால்?-ஒரு கற்பனை!



ஒரு நாள் உடல் உறுப்புகளுக்குள் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவைகளுக்குள் நடந்த உரையாடல்.


ஆள் காட்டி விரல்: நான் இல்லன்னா ஒரு மனிதனால் ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ சுட்டிக் காட்ட முடியுமா?


மோதிர விரல்: இது என்ன பெரிய விஷயம்! மனிதன் என்மேல்தான் மோதிரம் போடுகிறான். அதனால் நான் அவனுக்கு அழகைக் கூட்டுகிறேன். மனிதனுக்கே தெரிகிறது, யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று. அதனால் எனக்கு தங்க மோதிரம் மாட்டி அழகு பார்க்கிறான். ஏன் உங்களில் ஒருவருக்கு மோதிர விரல் என்று பெயர் இல்லை?


சுண்டு விரல்: டேய்! மோதிரம் போடுவதெல்லாம் ஒரு பெரிய விஷயமாடா? மனிதனை படைத்தவர் கடவுள். அவரை கை கூப்பி வணங்கும்போது நான்தான் முதலில் இருக்கிறேன். எனவே நான்தான் பெரியவன்.


நடு விரல்: டேய் பொடிப் பசங்களா! விரல்களில் நான்தான் மிக உயரமானவன். அதனால் மனிதன் எந்த செயல் செய்தாலும் நான்தான் உயர தெரிவேன். எனவே உங்களில் உயர்ந்த மனிதன் நான்தான்.


கட்டை விரல்: டேய்! சும்மா வாய மூடுங்கடா! என்னமோ நீங்கதான் பெரியவங்கன்னு அலட்டிக்கிறீங்க? நான் இல்லாம நீங்க நாலுபேரும் வீண். எந்த ஒரு மனிதானாலும் நான் இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்யமுடியாது. ஒரு பொருளை பிடித்து எடுக்கக் கூட முடியாது. மேலும் மனிதர்கள் ஒரு போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால் என்னை நிமிர்த்தி மற்ற விரல்களை மடக்கி வெற்றிபெற்றதை குறிக்கிறார்கள். தோல்விபெற்றால் இதேபோன்று தலைகீழாக காட்டுகிறார்கள். மனித வாழ்கையில் வெற்றி தோல்வியைக் குறிக்கப் பயன்படும் நானே பெரியவன்.


கைகள்: உங்களில் யாரும் பெரியவர்கள் அல்ல. நாங்கள் இருவர்தான் பெரியவர்கள். ஐந்து விரல்களையும் எப்படி உபயோகிக்க வேண்டுமோ அப்படி உபயோகித்து மனிதனுக்கு பயன்படுகிறோம். நாங்கள் இல்லாமல் நீங்கள் எப்படி இயங்க முடியும். மனிதன் சாப்பிட மற்றும் பொருட்களை தூக்க உதவுவது நாங்கள்தான்.


கால்கள்: நாங்கள் இல்லையென்றால் மனிதன் ஒரு அசைவற்றை பொருள்போன்றுதான். எங்கும் எழுந்து செல்ல இயலாது. மனிதன் வேலை செய்து சம்பாரிக்க உதவுவதே நாங்கள்தான். எனவே நாங்களே பெரியவர்கள்.


முதுகு: நான்தான் மனிதனுக்கு பிடிப்பைத் தருகிறேன். நான் இல்லையென்றால் மனிதனை எப்படி நடக்க வைப்பாய்? முதுகெலும்புகள் ஒரு மனிதனுக்கு உயிர் நாடி போன்றவை.


கண்கள்: நாங்கள் இல்லையென்றால் மனிதன் எந்த பொருளையும் பார்க்கமுடியாது. வேலை செய்வதும் கடினம். இயற்கை அழகையும் ரசிக்க முடியாது. எனவே நாங்கள்தான் பெரியவர்கள்.


காதுகள்: நாங்கள் மனிதர்களுக்கு கேட்கும் திறனை கொடுக்கவில்லையென்றால் மற்றவர்கள் பேசுவதை கேட்கவே முடியாது.


வாய்: மனிதன் பேசினால்தானே கேட்கமுடியும். நான்தான் பேச உதவுகிறேன். மேலும் மனிதன் உயிர் வாழ தேவை உணவு. அந்த உணவை சாப்பிட உதவுவது நான்தான். எனவே பெரியவனும் நான்தான்.


பற்கள்: நீ என்ன உணவு சாப்பிட ஒரு நுழைவு வாயில் போன்றுதான். அந்த உணவை அரைத்து அவனுக்கு ஆயுளைக் கொடுப்பது நான்தான். ஏனெனில் “நொறுங்கத்தின்றால் நூறு வயது” என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்களே.


நாக்கு: நீ உணவை அரைக்கிறாய், ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்த உணவை சரிவர உனக்கு தள்ளிவிடுவது நான்தான். மேலும் “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த உப்பு போன்ற சுவைகளை மனிதனுக்கு புரிய வைப்பது நான்தான். எனவே நான்தான் பெரியவன் என்பதில் துளி கூட சந்தேகமில்லை.


வயிறு: நீங்கள் அனைவரும் உணவு சாப்பிட மட்டுமே பயன்படுகிறீர்கள். ஆனால் அந்த உணவை செரிக்க வைத்து மனிதனுக்குத் தேவையான சக்தியை கொடுப்பது நான்தான். அதனால்தான் மனிதன் உயிர் வாழ்கிறான். எனவே நான்தான் பெரியவன்.


மூக்கு: மனிதன் சாப்பிடவில்லையென்றால் கூட சில நாட்கள் உயிர் வாழ்வான். ஆனால், மூச்சி விடாமல் உயிர் வாழ்வது கடினம். மேலும் நல்ல உணவு அல்லது கெட்டுப்போன உணவு என்பதை என்னை வைத்து முகர்ந்து கண்டுபிடிக்கின்றனர். எனவே நான்தான் பெரியவன்.


தலை: என்னங்கடா அறிவு இல்லாம பேசுகிறீர்கள்? நான் இல்லையென்றால் நீங்கள் வெறும் முண்டம். அதை புரிந்துகொண்டு பேசுங்கள்.


மூளை: நான் உன்னுள் இல்லையென்றால் நீ வெறும் மண்ணுதான். அத தெறிஞ்சிக்கிட்டு பேசு. ஒரு மனிதன் வாழ்கையில் வெற்றி பெற அவன் திறமைசாலியாக இருக்கவேண்டும். அந்த திறமை என்னால்தான் கிடைக்கிறது. ஆறாவது அறிவு இருப்பதால்தான் அவன் மனிதன். நான் இல்லையென்றால் மனிதன் வெறும் மிருகம்தான். உடல் உறுப்புகள் அனைத்தையும் இயக்குவதே நான்தான். எனவே நீங்கள் என் பக்கத்தில் கூட நிற்க முடியாது.


இப்படியாக உடலின் அனைத்து உறுப்புகளும் சண்டையிட்டுக்கொண்டு இருந்தன. இடையில் இதயம் குறுக்கிட்டது.


இதயம்: எல்லாம் ஆளு ஆளுக்கு ஏதேதோ சொன்னீங்க. ஆனா உங்களை உயிரோடு வத்திருப்பதே நான்தான். நான் உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை தூய்மைப்படுத்தி கொடுக்கவில்லையென்றால் நீங்கள் இறந்துவிடுவீர்கள். பிறகு மனிதனும் இருக்கமாட்டான். மேலும் மனிதர்களின் குணம் அவன் இதயம் சம்பந்தப்பட்டது. ஒரு நல்லவனாக இருந்தால் “அவனுக்கு நல்ல மனம் இருக்கிறது” என்று என்னைத்தான் கூறுவார்கள். ஆக மனித வாழ்க்கை என்பது இதயம் சார்ந்தது. நான் துடிப்பதை நிறுத்திவிட்டால் மனிதன் இறந்துவிடுவான்.


இதயம் கூறியது மெய்யான உண்மை என்பதால் “அண்ணே! நீங்கதான் மனித உடம்பில் பெரியவர். நாங்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொள்கிறோம்.” என்று அனைத்து உறுப்புகளும் கூறின.


இதயம்: அப்படியல்ல. நான் மட்டும் இருந்தால் மனிதன் உயிர் வாழ முடியாது. அனைவரும் முக்கியம்தான். தலையில் அடிபட்டு இறந்தவன் கூட இருக்கிறான், வயிற்றில் கத்தியால் குத்துபட்டு இறந்தவனும் இருக்கிறான் மற்றும் தண்டுவடத்தில் அடிபட்டு இறந்தவன் கூட இருக்கிறான். எனவே நம்மில் நான் பெரியவன் நீ பெரியவன் என்று இருக்கக்கூடாது.


இந்திய மனிதர்களைப் பாருங்கள். தங்களுக்குள் சாதி, மதம், இனம் மற்றும் மொழியால் பிரிந்து கிடக்கிறார்கள். ஆனாலும் எல்லாரும் ஒரே இனம் போன்று வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறார்கள். அப்படிபட்ட மனிதர்களுக்குள் இருக்கும் நாம் சண்டையிட்டுக்கொள்ளலாமா? நாமும் ஒற்றுமையாக இருந்தால்தான் மனிதன் நன்கு வாழ முடியும்?


அனைத்து உறுப்புகள்: ஆமாம் அண்ணே! நாங்கள் செய்தது தவறுதான். இனிமேல் நாங்கள் சண்டையிட்டுக்கொள்ளமாட்டோம்.


இப்போது அனைத்து உறுப்புகளும் ஒற்றுமையாக இருப்போம் என்று சபதம் எடுத்துக்கொண்டுவிட்டன. அவைகளின் சபதத்தை நாமும் ஏற்போம்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top