.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 15 December 2013

பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி!



 கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே…

* ‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!

* கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். ‘பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்!


* பாரதிராஜாதான் ‘கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். ’16 வயதினிலே’தான் அறிமுகப் படம்!

* அம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!


* கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது ‘மிஸ்டர் பெல்’ என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!


* மிகப் பிரபலமான கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!


* இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

* கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட ‘சரி’ என்பார். ‘இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!

* உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. ‘பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!


* திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!

* சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!



* கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!

* புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!

* ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!


* கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

* கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. ‘என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!’ என்பார்.



* ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!

* ஷூட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!


* கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். ‘நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது… ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்’ என்பார்!

* எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!


* டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். ‘மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!

* கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நடிகன்’. ‘அட… என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

* ‘மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!



 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top