இந்தியாவில் இன்னமும் சவாலாகவே இருக்கும் வரதட்சிணை....
இந்தியாவில் பெண்ணுக்கு சம உரிமை, எல்லா துறைகளிலும் பெண்களின் பங்கு, அரசியலில் பெண்களின் பங்கு என எவ்வளவோ மாறிவிட்டாலும், இன்னமும் வரதட்சிணை என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளதாக இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி ஒன்று கூறியுள்ளது.
இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெண்களை தரம் தாழ்த்தும் வகையிலான வரதட்சிணை இன்னமும் பல பகுதிகளில் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. வரதட்சிணையும், அதனால் இளம் பெண்கள் சந்திக்கும் கொடுமைகளும், இதற்கெல்லாம் ஆணி வேராக பல வீடுகளில் மாமியாரே இருப்பதும் இன்னமும் 50 சதவீதம் அளவுக்கு நடந்து கொண்டுதான் உள்ளது என்கிறது அந்த ஆய்வு. கேரளாவில் தான் ஆண்களை விட பெண்கள் விகிதம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் இன்னமும் வரதட்சிணை பிரச்னை உள்ளது. ஆனால், இந்த பாதிப்பு 10 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடும் போது குறைவுதான் என்றாலும், பெண்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதில் வரதட்சிணையும் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
வரதட்சிணை தொடர்பாக பல பெண்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
எத்தனை தான் மாறினாலும், இன்னமும் திருமணம் என்ற பேச்சு எழுந்ததும், பெண்ணுக்கு எவ்வளவு போடுவீர்கள் என்றும், பெண்ணுக்கு எவ்வளவு போட்டீர்கள் என்ற கேள்வியும் தானே முன்னிற்கின்றன. இவையும் ஒரு நாள் உடையும் என நம்புவோம்...