.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 9 December 2013

உங்கள் சந்தோஷம் மற்றவரின் அமைதி!



குடும்பத்தில் தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம்.


"ஒரு குடும்பத்தின் மொத்த ஆரோக்கியம் மிகவும் நல்லபடியாய் அமைய, அந்த வீட்டு தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம்" என்று லக்னோவில் உள்ள மனநல மருத்துவர் கூறியதாக ஒரு ஆங்கில மாத இதழில் வெளியாகி உள்ளது. இந்த மருத்துவரின் கூற்று எந்த அளவு உண்மை என்பது, ஒவ்வொரு வீட்டின் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும், மற்ற பெண்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்.


திருமணத்திற்குத் தயாராகும் பெண்கள், மனதளவில் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நினைத்தே "டென்ஷனாகி" விடுகின்றனர். புகுந்த வீட்டில் கணவனின் மனநிலையை அறிந்து கொள்வது முதல் தொடங்கி, அனைவறிடமும் நன்மதிப்பு பெற வேண்டும் என்ற கவலை; தனது எண்ணங்களுக்கு அவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற கவலை; இதில் சிக்கல் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்ற மன உளைச்சல்... இப்படி கவலைப்பட்டே தனது முதல் 10 ஆண்டு மணவாழ்க்கையை பாழடித்து விடும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.


இடையே ஒன்றோ, இரண்டோ குழந்தைகளும் பிறந்து விடுகின்றன. அவற்றை சரியான முறையில், நோய் நொடி இல்லாமல் வளர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, வீட்டில் உள்ள வேலைகளே முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொள்ள, வேலைக்குச் செல்லும் பெண்களின் பாடு, "கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு..." என்று மற்றவர் பரிதாபப்படும் நிலைதான்.


தினமும் ஒரே மாதிரியான பிரச்னைகள்; அவற்றை தனி ஒருத்தியாக தீர்க்க முடியாத சூழ்நிலை. தானாகவே முடிவெடுத்துச் செயல்படுத்த முடியாத நிலையில், வேதனைக்கு ஆளாகி, தன் சுய சிந்தனையை இழந்து, வீட்டிலும், அலுவலகத்திலும் தனது முழுத்திறனை வெளிக்காட்ட முடியாமல் தவியாய் தவிக்கிறாள்.


இப்படிப்பட்டவர்களிடம் நல்ல மனநிலையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் எங்கே எதிர்பார்ப்பது?

ஆனால், அது தான் முக்கியம். வேகமாக ஓடிப் போய்விட்ட 10 ஆண்டு கால இடைவெளியில், அவளையும் அறியாமல், அவளது உடல் ஆரோக்கியத்தை முற்றிலுமாய் தொலைத்து விட்டு, மெதுவாய் தன் நிலைக்கு திரும்ப வரும் நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு, அதற்காகவே கவலைப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இதிலிருந்தெல்லாம் மீள்வது எப்படி? எப்போதும் சந்தோஷமும், ஆரோக்கியமுமாய் இருப்பது எப்படி? உங்கள் முடிவுகள் மீது மற்றவர் கருத்துக்களைத் திணிக்க இடம் கொடுக்காதீர்கள்.


இந்த அறிவுரையுடன், வேறு சில விஷயங்களை நீங்கள் நனைவில் கொள்ள வேண்டும். பிறந்த வீட்டின் மரியாதையைக் காப்பாற்றுவது, புகுந்த வீட்டின் அன்பைப் பெறுதல், சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நிலைநிறுத்திக் கொள்ளுதல், சிறந்த நிர்வாகத் திறனுடன் செயல்படுதல், குழந்தைப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் என்பதுவரை திருமணத்தின் போதே தீர்மானித்து வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் வளரும்போது, மணவாழ்க்கையின் வேறு பரிணாமத்தைப் பார்க்கும் காலம் துவங்கி விடும்.


இந்த கால கட்டத்தில் அதிக பொறுப்புகள் சேரும். அவற்றோடு சேர்ந்து நம் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் நாம் ஆரோக்கியத்தைக் கோட்டை விட்டால், மீளவே முடியாத நிலை ஏற்படும்.


ஆரோக்கியமான மனநிலையை வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியது:


* நன்றாக, திருப்தியாகச் சாப்பிடுங்கள். காலை உணவு தொடங்கி, இரவு சாப்பாடு வரை அனைத்தும் திருப்தியாய் அமைவதாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.


* சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுவது அவசியம்.


* மனதுக்கு தெம்பும், தைரியமும் அளிக்கும் நில்ல புத்தகங்களை, இதிகாசங்களை, பிரச்சனையிலிருந்து உங்களை மீட்டும் தன்னம்பிக்கைத் தொடர்கள் கொண்ட புத்தகங்களைப் படியுங்கள்.


* சுய பச்சாதாபத்தைத் தூக்கி எறிந்து விட்டு, உங்களை நம்பி உங்கள் குடும்பத்தினர் உள்ளனர் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.


* உங்கள் உணர்வுக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை என்ற வீணான கற்பனைகளுக்கெல்லாம் மூட்டை கட்டிவிடுங்கள். ஏனெனில், உங்கள் முகத்தில் ஓடும் சந்தோஷம் தான் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அமைதியாக வாழ வைக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top