கல்வியின் பயன்
கற்பதும் கேட்பதும் இறைவனை அடைவதற்கே. கல்வியின் பயனும் அதுவே. பட்டம் பெறுவதற்கென்றும், சிறந்த அறிவாளி என்று பிறர் மெச்சுவதற்கென்றும், கூட்டத்தில் மொழிக்கு மொழி தித்திக்க இனிமையாகவும் சதுரப்பாடாகவும் பேசுவதற்கென்றும் படிக்காதே. கல்வியின் பயன் கடவுளை அறிதலே என்பதை உணர்ந்து படிக்க வேண்டும்
உண்பதன் நோக்கம்
உண்பது பசியை நீக்குவதற்கு மட்டுமன்று, பசியாறுவதுடன் அந்த உணவினால் உடம்புக்கு வலிமையும், உள்ளத்திற்கு நற்பண்பும், நற்குணமும் உண்டாக வேண்டும். உணவினால்தான் நற்குணங்கள் உருவாகின்றன. ஆகார நியமம் மிக அவசியமானது. அறிவையும், அன்பையும் கெடுக்கக் கூடிய ஆகாரத்தை அருந்தாதே. தூய உணவை உண்டு, தூய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வளர்க்க வேண்டியவை
நாம் நாளும் நாளும் உடம்பை வளர்க்கிறோம். தொழிலை வளர்க்கிறோம். வீடு நில புலன்களைப் பெருக்கிக் கொள்கிறோம். ஆனால் நமது குணங்களை வளர்க்கிறோமா? என்றால் இல்லை. முதலில் அதை வளர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்
பேரின்பம்
உலகில் சிறந்த பொருள்கள் ஒன்றோடு ஒன்று கூடுவதனால் இனிமை, சுகம் உண்டாகிறது. பாலும் தேனும் கூடுவதனால் சுவை அதிகப்படுகிறது. உணவுப் பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கூடிச் சுவையாகின்றன. அதுபோல் கணவனும் மனைவியும் கூடி இன்புறுகின்றனர். அந்த இன்பம் அணுத்துணையாயது. இனி பரம்பொருளாகிய பதியுடன் ஆன்மா கூடுவதனால் வரும் இன்பமே பேரின்பம். அந்த இன்பத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.
தியானம் செய்
மனத்தை ஒருமுகப்படுத்த முடியாத நிலையிலும் நாம் அவ்வப்போது ஈசனைத் தியானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்த முயற்சிகளுக்குக் கூட ஓரளவு பயன் இருக்கத்தான் செய்யும். காலப் போக்கில் நம் மனம் அடங்கிவிடும். தியானநிலை மனத்திற்கு அமைதியைத் தரும்.
சத்தியம்
சத்தியத்திலும் உயர்ந்த தர்மமில்லை. அசத்தியத்திலும் தாழ்ந்த அதர்மமில்லை. பூகம்பத்தால் உலகம் அசையினும் சத்தியம் அசையாது. அதை மேற்கொண்டவன், எக்காலத்திலும் தாமரைத் தடாகத்தில் இருப்பது போல் இன்பமுற்றிருப்பான். ஆதலால் எக்காலத்திலும் யாவரிடத்தும் சத்தியத்தையே பேச வேண்டும். அவ்வாறின்றி உண்மையை ஒழிப்பதனால் பற்பல கேடுகள் உண்டாகும். உண்மையை ஒழிப்பவனுடைய தனம், தானம், தர்மம், கல்வி முதலியவை தேய்பிறைச் சந்திரனைப் போல் தேயும்.
கடன் பட்டவர்கள்
துன்பத்திற்கெல்லாம் பெருந்துன்பம் கடன் பட்டவனுடைய துன்பமே. அதனாலன்றோ "கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்றார் கம்பர். நமக்கு அருமையான உடல், நல்ல மனம், புத்தி முதலிய கரணங்களையும், நன்கு இருப்பதற்கும் உலவுவதற்கும் இந்த உலகத்தையும், இதன் கண்ணே வாழ்ந்து அனுபவிப்பதற்குப் போகத்தையும் ஆண்டவன் கொடுத்திருக்கிறார். அவரிடத்தில் நாம் கடன் பட்டவர்களே. மனம், மொழி, மெய்களால் அந்த ஆண்டவனை வழிபடுவது தான் நம் கடனைத் தீர்க்கும் வழியாகும். அந்தத் தனிப்பெரும் தலைவனை வாயார வாழ்த்தி வணங்க வேண்டும். நெஞ்சார நினைக்க வேண்டும். தலையாரக் கும்பிட வேண்டும்.