புத்தாண்டு என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காலண்டர். அடுத்தது டைரி.. டைரி எழுதும் பழக்கம் இருப்போரும், சில வரவு செலவு கணக்குகளை எழுதுவோரும் டைரியை வாங்கி வைத்துக் கொள்வார்கள். இல்லை என்றால், அலுவலகத்திலோ, நண்பர்களோ டயரியை கொடுப்பார்கள் என்று காத்திருப்பார்கள்.
எல்லோரும் டைரி எழுதினால், இங்கே நகைச்சுவை எழுத்தாளர் கடுகு, டைரி பற்றி ஒரு நகைச்சுவை கட்டுரையே எழுதிவிட்டார்.
டைரியை பற்றி “கமலாவும்… நானும்’ என்ற நூலில் “டைரியும் நானும்’ என்ற கட்டுரையில் நகைச்சுவை எழுத்தாளர் “கடுகு’ எழுதிய ஒரு சிலவற்றை காணலாம்.
எனக்கு டயரி எழுதும் பழக்கம் கிடையாது. அதற்கு முதல் காரணம் சோம்பேறித்தனம். இரண்டாவது, நாம் மறக்க விரும்பும் விஷயங்களை எழுதித் தொலைப்போம். எப்போதாவது டைரியைப் புரட்டினால் அதுதான் முதலில் கண்ணில் படும்! அந்த விஷயத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடி பாடாய்ப்படுத்தும்!
என்னைக் கேட்டால் டைரிகளில் 80 சதவீதம் புதுக்கருக்கு அழியாமல் இன்னும் பல வருஷங்கள் பலர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும். பத்து சதவீத டைரிகள் முதல் இரண்டு பக்கம் மட்டும் எழுதப்பட்டு (இன்று புத்தாண்டு. புது வருஷம் பிறந்தது!) இருக்கும். மீதி பத்து சதவீத டைரிகள் பால் கணக்கு, தயிர்க் கணக்கு, நோட்டுப் புத்தகமாக உபயோகப்படுத்தப்படும். எல்லாருமா அனந்தரங்கம் பிள்ளை மாதிரியோ, சாமுவேல் பீப்ஸ் மாதிரியோ டைரி எழுத முடியும்?
சாமுவேல் பீப்ஸ் டைரி சுமார் ஒன்பதரை வருடக் குறிப்புகள். கிட்டத்தட்ட 15 லட்சம் வார்த்தைகள்! தனது தனிப்பட்ட எண்ணங்களை யாரும் படித்துவிடக் கூடாது என்று கருதி “டேக்கி கிராஃபி’ என்ற ஏறக்குறைய உலகமே மறந்துவிட்ட சுருக்கெழுத்து முறையில் எழுதியிருந்தார். அப்படியும் 100 வருஷங்களுக்குப் பிறகு பெரும் முயற்சி எடுத்து அதையும் படித்துவிட்டார்கள். எனக்கு டேக்கி கிராஃபி தெரியாது. நான் டைரி எழுதாததற்கு அதுவும் ஒரு காரணம்.
இன்னொரு அல்ப காரணமும் உண்டு. உதாரணமாக டைரியில் குப்புசாமிக்கு இன்று 5 ரூபாய் கடன் கொடுத்தேன் என்று எழுதியிருந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பத்து வருஷம் கழித்து இதைப் பார்த்தால் யார் இந்தக் குப்புசாமி? அவருக்கு எதற்கு 5 ரூபாய் கடன் கொடுத்தேன்? உண்மையிலேயே வெறும் 5 ரூபாய்தானா அல்லது ஐயாயிரம் என்பதைச் சுருக்கி “ஐந்து’ என்று எழுதினேனா? என்பது போன்ற பல கேள்விகளால் தலையைப் பிய்த்துக் கொள்ள நேரிடும்!
இவையெல்லாம் போகட்டும் என்று விட்டுவிட்டால்கூட, கொடுத்த பணத்தை குப்புசாமி திருப்பிக் கொடுத்தானா, மறந்து விட்டோமா? பணம் கோவிந்தாதானா? என்று பல கேள்விகள் மண்டையைக் குடையும்! எதற்கு இத்தனை தொல்லை? டைரி எழுதாவிட்டால் ஒரு வம்பும் இல்லையே! அதனால்தான் நான் டைரி எழுதுவதில்லை! இது ஒரு சமூக சேவை என்று உங்களில் சிலர் சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும்! என முடித்திருந்தார்.