ஜனவரி 15ஆம் தேதிக்குள் சென்னையில் இயங்கும் வாடகை கார் டிரைவர்கள், புகைப்படம் மற்றும் விவரங்களை போலீஸ் நிலையத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
வாடகை கார் மற்றும் கால்டாக்சி டிரைவர்கள் குற்றப்பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும், அதற்காக வாடகை கார் மற்றும் கால் டாக்சி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கமிஷனர் ஜார்ஜ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன்பேரில், நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், ''வாடகைகார் மற்றும் கால்டாக்சி டிரைவர்கள் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் போலீஸ் நிலையங்களில் தங்களது புகைப்படம் மற்றும் விவரங்களை தாக்கல் செய்து போலீஸ் நன்னடத்தை சான்றிதழை பெற வேண்டும். புதிதாக வேலைக்கு சேரும் டிரைவர்கள் போலீஸ் சான்றிதழ் கொடுத்தால்தான் வேலைக்கு சேர்க்க வேண்டும். வெளி மாநில டிரைவர்களாக இருந்தாலும் அவர்களது மாநில போலீசில் பெற்ற உரிய சான்றிதழுடன் வந்தால்தான், வேலை கொடுக்க வேண்டும்'' என போலீஸ் தரப்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து வாடகை கார் உரிமையாளர்கள் தரப்பில், ''இந்த திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், சான்றிதழ்களை போலீஸ் நிலையங்களில் காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். வாடகை கார் டிரைவர் மட்டும் அல்லாது, சொந்தமாக கார் வைத்திருப்பவர்களிடம் டிரைவர்களாக இருப்பவர்களும், போலீஸ் சான்றிதழ் பெறும் திட்டத்தையும் கொண்டு வரவேண்டும்'' என கோரிக்கை விடுக்கப்பட்டது.