.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 10 December 2013

ஆசிரியரும் நானும்!


  ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆசிரியரின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறியாமலில்லை.   தன் ஆசிரியரை போலவே தானும் ஆசிரியன் ஆகவேண்டும் என்று  ஈர்க்கப்பட்டு தாங்களும் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்து செம்மையாக பணியாற்றிவரும் மாணவர்கள் இப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.


    ஆனாலும்  நான் என்றுமே ஒரு ஆசிரியனாக ஆகவேண்டும் என்று நினைத்ததே இல்லை. என் அண்ணன் என்னை ஆசிரியருக்கான படிப்பு படி, நீ விரைவில் வேலைக்கு சேர்ந்துவிடலாம்  என்று என்னை எவ்வளவோ கட்டாயப்படுத்தியும்  நான் ஆசிரியராகிவிடக் கூடாது  என்பதில் மட்டும் பிடிவாதமாக இருந்துவிட்டேன்.  இவ்வளவிற்கும்,   மற்றவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதிலும் அவர்களின் வினாவிற்கு விடை அளிப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம்.  இப்படி கற்பித்தலில் ஆர்வம் இருந்தும் ஆசிரியர் பணி ஏன் என்னை ஈர்க்கவில்லை?.  இவை எல்லாவற்றிற்கும்  ஆசிரியர்களில் மேல் எனக்கிருந்த வெறுப்புதான் காரணம். என்னுடைய பள்ளி வாழ்க்கையிலும் சரி, கல்லூரி வாழ்க்கையிலும் சரி ஒரு உண்மையான ஆசிரியருக்கான குணங்களைக் கொண்ட ஆசிரியர் ஒருவரைக்கூட நான் சந்திக்கவே   இல்லை என்பதுதான்  இந்த சொல்லொண்ணா வெறுப்பிற்கான காரணம்.


     என் பள்ளி நாட்களில் ஆசிரியர் என்றாலே அவர் கையில் வைத்திருக்கும்  பிரம்பும் அவர் கொடுக்கும் அடிகளும் தான் என் நினைவிற்கு வரும்.  பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலையாக எனக்கு காட்சியளித்தது. பள்ளிக்கூடம் போகக்கூடாது  என்பதற்காக நான் சுடுகாட்டில் பதுங்கிக்கொண்ட அனுபவம் எனக்கு நிறையவே உண்டு.  சுடுகாட்டைவிட பள்ளிக்கூடம் எனக்கு அதிக பயத்தை அளித்தது.  ஏன் இப்படி? இவை எல்லாவற்றிற்கும் முதன்மையான காரணம் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து துன்புறுத்தும் அவலம்  என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த கட்டுரையை நான் எழுதுவதன்   நோக்கம் ஆசிரியர்களை குறைக்கூறுவதற்க்கன்று. மாறாக, ஆசிரியர்களிடம் என்னை போன்ற மாணவர்கள் எப்பண்புகளை எதிர்பார்கிறார்கள் என்பதை தெரியப்படுத்தத்தான்.


     ஒரு நல்ல ஆசிரியருக்கு கையில் பிரம்பு தேவையே இல்லை.  ஒரு மாணவனை அடிப்பதன் மூலம் அவனை படிக்க வைத்துவிடமுடியும் என்று நினைப்பது அறிவீனம்.  ஒரு மாணவனை அடிப்பதால் அவனுக்கு படிப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத சில ஆசிரியர்களை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். தன் இசையாலும், பாட்டாலும், சிரிப்பாலும், விளையாட்டாலும், ஆர்விமிக்க தகவல்களாலும் மாணவர்களை கவரத்தெரியாத ஆசிரியர்களே பிரம்பின் உதவியை நாடுகிறார்கள்.  மாணவரைக்கவரும்  இவ்வுத்திகளை  தெரியாதவர்களை ஆசிரியர் பணியில் அமர்த்துவது அபத்தம்.


     ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடம்  மாணவனுக்கு   புரியாமல் போனால் அது    மாணவனின் குறையில்லை.  மாறாக, அது ஆசிரியரின் குறை. எந்த மாணவனுக்கு எந்த முறையில் விளக்கினால் அவனுக்கு  விளங்கும் என்பதை கண்டறிந்து அம்முறையில் கற்பிப்பதுதான்  கைதேர்ந்த ஆசிரியரின் கடமை. அதை விட்டுவிட்டு அடியாள் மாதிரி கம்பை கையில் எடுப்பது ஒரு சிறந்த ஆசிரியருக்கு அழகல்ல.


     ஒரு மாணவன் ஒழுக்கக் குறைவான செயல்களை செய்யும்போதும், பல முறை சொல்லியும் கேட்காமல் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யும்போதும் கண்டித்து தண்டிக்கபட வேண்டியவனாகிறான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.  ஆயினும்,  "இம்மாணவன்  நான்  சொல்லிக்கொடுப்பதை விளங்கிக்கொள்வதே இல்லை",  "இவன் குறைவான மதிப்பெண் வாங்குகிறான்", "இவன் படிப்பில் மந்தம்"  என்ற இதுபோன்ற சில காரணங்களுக்காக மாணவர்கள் அடிக்கப்படுவதை  என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.  இக்காரணங்களை நானாக கண்டுபிடித்து எழுதவில்லை. இவை எல்லாமும்  என் பள்ளி வாழ்க்கையில் நான் கண்ணால் கண்டதும் காதால் கேட்டவையும் தான் .


     ஒரு நல்ல ஆசிரியரானவர்  மாணவரோடு  மாணவராக சேர்ந்து  தானும் ஒரு மாணவனாகவே மாறி அவர்களுக்கு பாடம் கற்பிக்கிறார்.  மாணவர்களுக்கு அவர் ஒரு முன் மாதிரியாக நடந்து மாணவர்களையும் அவ்வழியில் நடக்க அறிவுரை வழங்குகிறார். பாடப்புத்தகத்தில் இருப்பதை மட்டுமல்லாமல் வாழ்கைக்குவேண்டிய நெறிகளையும்  வேறு சில இன்றியமையாத செய்திகளையும்   சேகரித்து மாணவர்களுக்கு போதிக்கிறார்.  மாணவர்களிடம் எப்போதும் அன்பாகவே நடக்கிறார். இதை ஆசிரியர்கள் கவனிப்பார்களா?

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top