.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 18 January 2014

அழுத்தமில்லாத மனசு…



உறக்கம் விற்று மெத்தை வாங்கினேன்.
பசியை விற்று உணவு வாங்கினேன்.



என்ற வசனங்களை நாம் பலமுறை கேட்டிருப்போம். இதை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு ஒரே காரணம்தான். பணம், புகழ் என்று கிடைத்தற்கரிய அனைத்தும் இன்று சாத்தியப்பட்டுவிட்டது.


இவற்றிக்கு வெகுமானமாக நாம் வழங்கியிருப்பவை நம் மன அமைதியையும் ஓய்வையும். பரிசாகப் பெற்றிருப்பது மன அழுத்தத்தை. இன்றைய மாணவர்கள் கல்லூரிப் படிப்பு முடித்த கையோடு பட்டத்துடன் சேர்த்து ஏதோ ஒரு நிறுவனத்தின் வேலை நியமன ஆணையையும் வாங்கி விடுகிறார்கள். கை நிறைய சம்பளத்தோடு அவர்களுக்கு மனம் நிறைய அழுத்தமும் இலவசமாக வழங்கப்பட்டு விடுகின்றன. நம்மில் பலருக்கும் இதே நிலைதான். மன அழுத்தம் தீவிரம் அடைகிற போது நம் அலுவலகங்களையும் தாண்டி அவை நம் வீடு வரை பயணித்து விடுகின்றன.


மன அழுத்தத்தை அகற்றி மகிழ்ச்சி காண இதோ சில சக்ஸஸ் டிப்ஸ்:



1. எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தன் கருத்துக்களை பரிமாற இன்று பெரிதும் பயன்படுத்தும் கருவி தொலைபேசி. தொலைபேசியை எடுத்து நீங்கள் அழைக்க வேண்டிய நபரின் எண்ணை அழுத்துகையிலேயே உங்கள் அழுத்தங்களை தளர்த்திக் கொள்ளும் விதமாக, நீளமாக மூச்சை உள்ளிழுத்து மூன்று முறை வெளியேற்றலாம். இது உங்கள் நுரையீரல் அழுத்தத்தைக் குறைக்கும்.


2. இன்று நாகரீகம் வளர்ந்த சூழ்நிலையில் நின்று செய்ய வேண்டிய வேலையை உட்கார்ந்தும் உட்கார்ந்து செய்ய வேண்டிய வேலையை நின்று கொண்டும், நடந்து கொண்டும் செய்கிறார்கள். பெரும்பாலும் உணவு உட்கொள்கிற போது உட்கார்ந்து உணவை அருந்தலாம். மகிழ்ச்சியான சூழ்நிலையில் நிதானமாக உணவருந்துதலும் மனதிற்கு மாற்றத்தையும் ஓய்வையும் அளிக்கும்.


3. அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு அல்லது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு செல்லும் போதும் பலர் ஓடுகிற வாகனத்துக்குள்ளேயே மனத்தளவில் பதட்டமாக ஓடிக் கொண்டிருப்பார்கள். வண்டி இன்னும் வேகமாகப் போகுமென்று முன்சீட்டைத் தள்ளுபவர்களும் உண்டு. ஏனிந்த பதட்டம்? பயணங்களின் போது, நல்ல இசையைக் கேட்கலாம். அல்லது உங்களை உற்சாகப் படுத்தக்கூடிய உரைகளைக் கேட்டு ரசிக்கலாம். மனதிற்கு நிறைவான புத்தகங்களை வாசிக்கலாம்.


4. உங்கள் பரபரப்பான வேலை நாட்களிலும் ஒரு சில நிமிடங்களை கடவுளுக்கு நன்றி செலுத்த செலவிடுங்கள். நீங்கள் கடவுள் நம்பிக்கையில்லாதவராக இருந்தால் நீங்கள் நம்பும் எதுவாக இருந்தாலும் அவற்றிற்காக சில நிமிடங்கள் நன்றி செலுத்துங்கள்.


5. மன அழுத்தத்திற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று மோதல். அந்த நாளில் உங்களை யாரேனும் காயப்படுத்தியிருந்தால் ஒரு நிமிடம் உங்கள் மனதை தளர்த்திக் கொண்டு, ஆழமாக மூச்சையிழுத்து பின் உங்கள் மனம் முழுவதும் அவர்களுக்கான மன்னிப்பை நிரப்பி விடுங்கள். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியும் மகிழ்ச்சியும் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என எண்ணுங்கள்.


6. இன்று உங்கள் வாழ்நாளில் மிக முக்கிய நாள் என்ற நினைப்பில் ஒவ்வொரு நாளையும் உச்சபட்ச மகிழ்ச்சியுடன் வாழுங்கள். இந்த நாள் இணையற்ற நாளாக இருக்க வேண்டும் என்ற முனைப்பை அதிகப்படுத்துங்கள்.


7. நீங்கள் தோற்றுப்போனதாக நினைக்கிற தருணங்களில் நீங்கள் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்திடுங்கள்.


8. உங்களை நீங்களே விரும்பப்படுகிற போதுதான் மற்றவர்களால் நீங்கள் விரும்பப் படுகிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.


9. கடந்து விட்ட கடந்த காலத்தை கணக்கில் கொள்ளாமல், நிகழும் காலத்தில் நீங்கள் உருவாக்குகிற மகிழ்ச்சிதான் உங்கள் எதிர்காலம் என்பதை அறிந்து செயல்படுங்கள்.


10. உங்களிடமுள்ள ஏதேனும் ஒன்றை யாருக்கேனும் தினசரி கொடுக்கலாம். அது உங்கள் நேரமாகவோ, உங்கள் உழைப்பாகவோ உங்கள் அன்பாகவோ, உங்கள் நம்பிக்கையாகவோ கூட இருக்கலாம்.


அழுத்தம், பயம், சந்தேகம் என இன்னும் பல தடைகளை தகர்த்தெறியும் சில உத்திகள்தான் இவை. உங்கள் வெற்றிக்கதவுகளை திறக்கும் மந்திர சாவி உங்கள் மனமன்றி வேறில்லை!!

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top