புதிய உலகத்தில்
பெரியமனுசியாய்
கடமைகளுடன்
கால்தடம் பதிக்கிறாய்.
வா.
பெருமையுடனும்
மரியாதையுடனும்
வலிமை பொங்க
நடந்து வா.
இன்று முதல்
நீ -
நம் மக்களின் தாய்.
நம் தேசத்தின் தாய்.
பெண்ணின் பூப்படைதலைப் பெருமையுடன் பாடும் அப்பச்சி (Apache) இனக்குழு மக்களின் பாடல் இது.
பெண் பூப்படைதல் என்பது பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய சடங்காகவே இருந்து வந்துள்ளது. பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தாகதது என்று எதிர்மறையாக நோக்கப்படவில்லை. பூப்பு என்ற சொல் தொடர்ச்சியாக வண்டு நுகர்தல், பிஞ்சு, காய், கனி, என்ற பிம்பங்களை மட்டுமே உருவாக்கி அதன் வழி இனவிருத்திக்கு காரணமான நேர்மறைச் செயலாகவே கருதப்பட்டது. ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும் வைதீகமும் ஆண் சமுதாயமும் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்தில் தான் பூப்பு என்ற செயல் "தீட்டாகிப்" போனது.
மனித வரலாற்றில் இனவிருத்தியின் நிலமாக இருந்தப் பெண்ணின் ஆளுமையைக் கண்டு வியந்து அச்சம் கொண்டு அவள் தலைமையை ஏற்றுக்கொண்ட இனக்குழு வாழ்க்கையில் பெண் தெய்வ வழிபாடே இருந்தது என்பதும் இன்றும் சிவப்பு நிறமும் நெற்றியில் இடப்படும் குங்குமச் சிவப்பும் ரத்தப் பலியிடலும் ஆகிய சடங்குகளின் காரணத்தை ஆராயப் புகுந்தால் பூப்பு என்ற சடங்கின் வேர்களை அடையாளம் காண முடியும். நிலமும் நிலம் சார்ந்த மருதமும் இனக்குழு வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது.
பெண் -இல்லாள் என்றும் மனைமாட்சி என்றும் மாற்றம் பெற்ற காலம். பூப்பு பெண்ணின் ஆளுமையாக இருந்தது மறைந்து இனவிருத்திக்கான அடையாளமாக மட்டுமே சுருங்கிய காலம்.
ஆண் -பூப்படைதல் சடங்கு
ஆணுக்கான சடங்குகள் அனைத்தும் போர், வேளாண்மை, அரசாட்சி என்று சமூக ஆள்வினைக்கான சடங்குகளாகவும் பெண்ணுக்கான சடங்குகள் அனைத்தும் பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் பாலுறவு, மகப்பேறு என்று இனவிருத்தி சார்ந்தும் அமைந்ததாக காணப்படுகின்றன. அருந்தா இனக்குழு வாழ்க்கையில் ஆண் பூப்படைதல் சடங்கு கொண்டாடப்பட்டதைக் காணலாம். அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண்மகன் வயதுக்கு வந்துவிட்டான் என்பதை அறிவிக்கவும் கொண்டாடவும் அவன் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் சடங்கு இது. அக்குழுவின் வயதான முதியவர் இச்சடங்கை நிகழ்த்துவார்.
தன் தலையால் ஆண்மகனின் தலையை மோதி ரத்தம் சிந்த வைப்பார். எறும்பு கடிக்கும் குழிக்குள் அவனை தள்ளி உணவின்றி சில நாட்கள் வைப்பார்கள். வீரமும் வலி பொறுத்தலும் போர் வாழ்க்கையில் ஆணுக்கான அம்சங்களாக இருப்பதால் இச்சடங்கை ஆணின் "மறுபிறப்பு" என்று சொல்கிறார்கள்.
ஆண் பூப்படைதல் சடங்கை "பிணை அறுத்தல்" - க்யா மோட்டு டி செலி (kia motu te sele - to snap the tie) என்றும் பெண் பூப்படைதல் சடங்கை "பாவாடை அணிதல்" ( hakatiti - titi skirt) என்றும் மேற்கத்திய நாடுகளின் இனக்குழு மக்களின் சடங்குகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:
பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்துவிட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம் உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள் என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும். பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்துவிடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.
நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகிவிட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.
ஆப்பிரிக்கா சுலு (Zulu) இனத்தில் பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவள் ஒத்தப் பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்தப் பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்படைந்தப் பெண்களும் பூப்படைந்தப் பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்
ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்தப் பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.
இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. "பூப்பு நன்னீராட்டல்" என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றுள்ளது. இச்சடங்கு குறித்த பதிவுகளை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது! தாய்மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பாலியல் உணர்வு ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகள் வரை உண்மை, பொய் அனைத்தையும் பூப்பு நன்னீராட்டில் கலந்து காட்டிய பெருமை நம் தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.