.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 27 October 2013

கருணாநிதியின் மூத்த மகன் நடிகர் மு.க. முத்து ஆஸ்பத்திரியில் அனுமதி!

கருணாநிதியின் மூத்த மகன் நடிகர் மு.க. முத்து ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து மூச்சு திணறல் பிரச்சனை காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (65).

மேடைகளில் மெல்லிசை கச்சேரிகள் மற்றம் தி.மு.க. கொள்கை விளக்கப் பாடல்களை பாடி இசை நிகழ்ச்சி நடத்தி வந்த இவர் 1970-ம் ஆண்டு 'பிள்ளையோ பிள்ளை' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகில் கால் பதித்தார்.

அதனை தொடர்ந்து, சமையல்காரன், அணையா விளக்கு, இங்கேயும் மனிதர்கள், பூக்காரி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்து, சொந்த குரலில் பாடியும் உள்ளார். கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டு பவித்ரன் இயக்கிய 'மாட்டுத் தாவணி' படத்திற்காக தேவாவின் இசையமைப்பில் ஒரு பாடலையும் இவர் பாடியுள்ளார்.

கருணாநிதி பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் தற்போது வசித்து வரும் மு.க. முத்துவுக்கு இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிப்பதற்காக அவரை காரில் அழைத்து வந்தனர்.

புதுச்சேரியை கார் நெருங்கும் போது அவரது உடல்நிலை மோசமடைந்தது. விழுப்புரம் சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிற்பகலில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் சென்னைக் கொண்டு வரப்பட்டார். சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Saturday, 26 October 2013

தாயார் பெயரில் தியேட்டர்! ஒரு கோடி தந்த சூர்யா!!

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாட்டிலும் கொண்டாடி கலை உலகமே மகிழ்ந்திருக்கும் நேரம் இது. இதற்கான பெருமை எல்லாம் தமிழக அரசையும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையையுமே சேரும்.மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் அவர்கள் இலவசமாக கொடுத்த நிலத்தில் பிரம்மாண்டமான வானளாவிய புதிய கட்டிடத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இயங்கி வருகிறது. 


இந்த வளாகத்தை கட்ட அனுமதி தந்து அடிக்கல் நாட்டியவர் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர். அந்தக் கட்டிடத்தை திறந்து வைத்தவர் இன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா.

இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் ஒரு பகுதியில் மினி சினிமா தியேட்டர் ஒன்று இருந்தது. அது இடிக்கப்பட்டு அங்கேயும் பிரம்மாண்ட கட்டிடம் இப்போது கட்டப்பட்டு வருகிறது. அதற்குள் ஒரு சினிமா தியேட்டரும் உருவாகிறது. இதை லேட்டஸ்ட் மாடலில், டிஜிட்டல் திரை அரங்கமாக குளுகுளு வசதியோடு வடிவமைத்து இருக்கிறார்கள். வர்த்தக சபை தொடர்பான விழாக்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் இதில் நடத்திக்கொள்ள முடியும்.எதிர்காலத்தில் சினிமா பிரபலங்கள், திரை உலக நட்சத்திரங்கள், அமைச்சர்கள் உள்பட அரசுப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் எல்லாருமே வந்து அமரும் முக்கிய அரங்கமாக இந்தத் தியேட்டர் அமையப்போகிறது.


 இவ்வளவு பெருமையும், முக்கியத்துவமும் வாய்ந்த சினிமா தியேட்டரை கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாயை தன் சொந்தப் பணத்தில் இருந்து நன்கொடையாக வழங்கி இருக்கிறார் நடிகர் சூர்யா.தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை அந்தப் பணத்தை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டிருக்கிறது. திரை அரங்கம் கட்டி முடிக்கப்பட்டதும் அதற்கு நடிகர் சூர்யாவின் தாயார் லட்சுமி அம்மாளின் பெயரை சூட்டவும் வர்த்தக சபை நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள். 


இது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நல்ல செய்திதான். ஆனால் அதிலும் இப்போது பிரச்னையை எழுப்பியிருக்கறார்கள் சிலர். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நடத்திய ""சினிமா -100'' கலை நிகழ்ச்சிகள் அனைத்தையும் பதிவு செய்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் உரிமையை ஒரு பிரபல நடிகையின் "ரா' நிறுவனத்துக்கு 22 கோடி ரூபாய்க்கு ஓசை இல்லாமல் கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்ட வர்த்தக சபை நிர்வாகம், விஷயம் வெளியே கசிந்து, இதை டெண்டருக்கு விடாமல் தனிப்பட்ட ஒருவருக்கு எப்படிக் கொடுக்கலாம் என்ற கேள்வியை எழுப்பியதும் சுதாரித்துக்கொண்டு அந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்துவிட்டதாம். 


அவர்கள் கொடுத்திருந்த அட்வான்ஸ் தொகையை திருப்பித் தந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். விஷயம் இப்படி இருக்க...அதே போன்று கேள்விகள் இந்த சினிமா தியேட்டர் விஷயத்திலும்  எழுந்திருக்கின்றனவாம் இப்போது. எதிர்காலத்தில் அனைவராலும் பேசப்படும் இந்த திரை அரங்கத்தை கட்டுவதற்கு, சத்தம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் நடிகர் சூர்யாவிடம் இருந்து ஒரு கோடி ரூபாயை வர்த்தக சபை நிர்வாகம் வாங்கியது எப்படி?
என்ன நியாயம்? இப்படியோர் திட்டம் இருப்பின் அதை முறையாக வெளிப்படுத்தியிருந்தால் "நீ -நான்' என்று போட்டி போட்டுக்கொண்டு பல கோடி தருவதற்கு எத்தனையோ பேர் முன் வருவார்களே? இப்படி சரமாரி கேள்விக் கணைகளை வீசி இருக்கிறார்களாம் சிலர்.



இது நல்ல விஷயம்தானே? இதிலுமா சிக்கலை உருவாக்குவது? என்று வருத்தப்படுகிறார்கள் சிலர். ""தாயிற் சிறந்த கோவிலும் இல்லை; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை'' என்ற பழமொழிக்கு ஏற்ப, தன் தந்தை சிவகுமாரின் ஆலோசனையைக் கேட்டு, ஆசை ஆசையாய் அம்மாவின் பெயரில் தியேட்டர் கட்ட ஒரு கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த நடிகர் சூர்யாவின் கனவு நிறைவேறுமா?என்ன செய்யப் போகிறது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை? கேள்வியோடு காத்திருக்கிறது கலை உலகம்!

Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் கசிந்தன!

சம்சுங் நிறுவனமனது அண்மையில் Samsung Galaxy S4 ஸ்மார்ட் கைப்பேசியினை வெளியிட்டிருந்தது.

இக்கைப்பேசி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்தும் தற்போது Samsung Galaxy S5 கைப்பேசி உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.


இதன் உற்பத்தி தற்போது முடிவடையும் நிலையில் இருப்பதாக தெரியவருவதுடன், இக்கைப்பேசி பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது இதில் 64-bit Exynos 5430 Processor - இனை கொண்டுள்ளது எனவும், அடுத்த வருட ஆரம்பத்தில் விற்பனைக்கு வரும் எனவும் தெரியவருகின்றது.






ரோஜாவில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படுத்துவது எப்படி?

மலர்களின் அரசி என அழைக்கப்படும் ரோஜா வீட்டுத் தோட்டங்களிலும், பசுமைக்குடில்களிலும் மட்டுமல்லாது கொய் மலராகவும் பணப் பயிராகவும் பயிரிடப்பட்டு வருகிறது.


இத்தகைய ரோஜாவில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்குதலால் மகசூல் இழப்பைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமானது.
ரோஜாவை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்கினாலும் சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவிணி மற்றும் இலைப்பேன் ஆகியவை மட்டுமே மகசூலை குறைப்பதில் முக்கிய காரணியாக உள்ளன.


இலைப் பேன்: இளம் மற்றும் வளர்ச்சியடைந்த இலைப்பேன்கள், இலைகள் மற்றும் பூ மொட்டுகளில் அடியில் இருந்து கொண்டு இலைகளைச் சுரண்டி பின்னர் சாற்றை உறிஞ்சுகின்றன. பாதிக்கப்பட்ட இலைகளின் மேல்பரப்பில் வெண்ணிற கோடுகள் காணப்படும். மேலும், அதிகமான தாக்குதலுக்கு உள்ளான இலைகள் வளர்ச்சி குன்றி காணப்படும். இலைப் பேன்கள் தாக்குதலுக்கான பூவிதழ்களின் ஓரம் காய்ந்தது போன்ற தோற்றமளிக்கும். இப் பூச்சியின் தாக்குதல் அதிகமாகும்போது பூவிதழ்கள் உதிர்ந்து விடும். இளம் பூச்சியானது சிவப்பு நிறத்திலும், வளர்ச்சியடைந்த பூச்சிகள் கருப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் காணப்படும்.


அசுவிணி : இளம் மற்றும் வளர்ச்சியடைந்த பூச்சிகள் இளந்தளிர் மற்றும் பூ மொட்டுகளில் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சும். இதனால் பாதிக்கப்பட்ட இளந்தளிர் மற்றும் இலைகள் சுருண்டும், சிறுத்தும் காணப்படும். பூ மொட்டுகளின் வளர்ச்சி குறைந்து காணப்படும். மேலும், தாக்கப்பட்ட பூக்களின் இதழ்கள் வெளிறிய நிறத்தில் காணப்படும். அதிகமான தாக்குதலுக்கு உள்ளான மொட்டுகள் விரிவடையாமலேயே உதிர்ந்து விடுகின்றன. இளம் பூச்சிகள் வெளிறிய பச்சை நிறத்திலும், வளர்ந்த பூச்சிகள் கருப்பு கலந்த பச்சை நிறத்திலும் காணப்படும்.


சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த தாக்கப்பட்ட இளந்தளிர்கள், இலைகள் மற்றும் பூ மொட்டுகளை வெட்டி அழித்துவிட வேண்டும். தாவர பூச்சிக் கொல்லியான வேப்பெண்ணெய் 3 சதவீத கரைசலைத் தெளித்து இலைப்பேன், அசுவிணியைக் கட்டுப்படுத்தலாம். இல்லையெனில் டைமீத்தோயேட் 30 இசி 2.5 மி.லி அல்லது மீதைல் மெட்டான் 2 மி.லி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.


சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகும்போது இமிடோகுளோபிரிட் 0.3 மி.லி. என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் கு. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

"உண்மையான சம்பளம் என்ன?’’ சினிமா படவிழாவில் கமல்ஹாசன் பேச்சு!
















ரசிகர்களின் கைதட்டல்தான் நடிகர்களின் உண்மையான சம்பளம் என்று கமல்ஹாசன் கூறினார்.


சினிமா படவிழா


தமிழ் குமரன், டாக்டர் வி.ராமதாஸ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து, ஜீவா, திரிஷா, ஆன்ட்ரியா நடித்த என்றென்றும் புன்னகை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில்  இரவு நடந்தது. பாடல்களை நடிகர் கமல்ஹாசன் வெளியிட டைரக்டர் பாலா பெற்றுக் கொண்டார்.


விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:–


அன்புக்காக...


‘‘நான் இந்த விழாவுக்கு வந்தது அன்புக்காக. வர இயலாத அளவுக்கு எல்லா இடையூறுகளும் இருந்தன. விடாபிடியாக வற்புறுத்தி அழைத்ததின் பேரில் இங்கு வந்தேன். படத்தையும் இப்படி அடம்பிடித்து சிறப்பாக எடுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அடம் பிடித்து எடுத்ததால்தான் காலதாமதம் ஏற்பட்டு இருக்கும்.


இந்த காலதாமதம் கூட வெற்றிக்கு வழி வகுக்கும். இதுதான் வேண்டும் என்று நம்புவதே அபூர்வம். என் சொற்ப அனுபவத்தில் கூறுகிறேன். நான் நம்பி எடுத்த படங்கள் 90 சதவீதம் தோற்றதே இல்லை.




வெற்றி


நாம் சிரித்து நாம் அழுது எடுத்த படங்கள் அனைத்தும் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்க்கையும் இப்படி தான். நம்பிக்கை இருந்தால் ஜெயித்து விடலாம்.


அபூர்வ சகோதரர்கள் படம் எடுக்கும் போது, ‘நீங்களே அதிக உயரம் இல்லை குள்ளமாக நடிப்பதில் என்ன இருக்கிறது. அமிதாபச்சன் குள்ள மனிதராக நடிக்கலாம் என்றெல்லாம் பேசினார்கள்’.


மெல்லிய கோடு


பருவத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் நடுவில் மெல்லிய கோடு இருக்கிறது. அதை நம்பி இந்த படத்தை எடுத்து இருக்கிறார்கள்.


நடிகர் வினய் முதன் முதலாக என்னை பார்த்த போது தடுமாற்றத்தால் எனக்கு வாழ்த்து சொன்னதாக தெரிவித்தார். உங்கள் வாழ்த்து நிச்சயமாக எனக்கு வேண்டும். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்.


தன்னம்பிக்கை 

வெற்றி வரும் போது தன்னம்பிக்கையும் வரும். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்றவர்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். கைத்தட்டலுக்கு எப்போதுமே பலம் உண்டு. ரசிகர்களின் கைத்தட்டல்தான் நடிகர்களுக்கு உண்மையான சம்பளம். மற்றதெல்லாம் வரியாக போய்விடும்’’. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.















விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா நடிகர்கள் பார்த்திபன், உதயநிதி, ஜீவா, வினய் நடிகைகள் திரிஷா, ஆன்ட்ரியா இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டைரக்டர்கள் பாலா, சுசீந்திரன் ஆகியோரும் பேசினார்கள்.


பட அதிபர்கள் தமிழ் குமரன், வி.ராமதாஸ் ஆகிய இருவரும் வரவேற்று பேசினார்கள். டைரக்டர் அகமது நன்றி கூறினார்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top