
தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து மூச்சு திணறல் பிரச்சனை காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (65).
மேடைகளில் மெல்லிசை கச்சேரிகள் மற்றம் தி.மு.க. கொள்கை விளக்கப் பாடல்களை பாடி இசை நிகழ்ச்சி நடத்தி வந்த இவர் 1970-ம் ஆண்டு 'பிள்ளையோ பிள்ளை' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகில் கால் பதித்தார்.
அதனை தொடர்ந்து, சமையல்காரன், அணையா விளக்கு, இங்கேயும் மனிதர்கள், பூக்காரி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்து, சொந்த குரலில் பாடியும் உள்ளார். கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டு பவித்ரன் இயக்கிய 'மாட்டுத் தாவணி' படத்திற்காக தேவாவின் இசையமைப்பில் ஒரு பாடலையும் இவர் பாடியுள்ளார்.
கருணாநிதி பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் தற்போது வசித்து வரும் மு.க. முத்துவுக்கு இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிப்பதற்காக அவரை காரில் அழைத்து வந்தனர்.
புதுச்சேரியை கார் நெருங்கும் போது அவரது உடல்நிலை மோசமடைந்தது. விழுப்புரம் சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிற்பகலில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் சென்னைக் கொண்டு வரப்பட்டார். சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.