.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 27 October 2013

சினிசிப்ஸ்!

காமெடி  அதிரடி!
நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படம் கமல் படத்தில் இதுவரை வந்திராத புதிய கதைக்களம் என்கிறார்கள். நல்லதுக்காக வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் கமல் நடிக்கிறாராம்.
அப்படியானால் படம் முழுக்க வில்லத்தனம் தான் பிரதானம் என்று எண்ணி விடாதீர்கள். இது காமெடிக்களத்தில் பயணிக்கும் படம்
என்பதால் சிரிக்கவும் வைக்கப் போகிறார், கமல்.
***
அது தான் காரணமா?
தமிழில் விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ படம் இந்தியில் ‘கப்பார்’ என்ற பெயரில் ‘ரீமேக்’காக இருக்கிறது. விஜயகாந்த் நடித்த கேரக்டரில் அக்ஷய்குமார் நடிக்க, சிம்ரன் கேரக்டரில் அமலாபாலும், ஆஷிதா கேரக்டரில் ஸ்ருதி ஹாசனும் நடிக்க தேர்வானார்கள்.
ஆனால் இப்போது படத்தில் அமலாபால் இல்லை. மொத்தமாக கால்ஷீட் கொடுக்க முடியாது என்று சொல்லி விலகிக் கொண்டதாக தகவல்.
***
எல்லாமே நட்பு தான்!
தமிழ் சினிமாவின் பிசி ஹீரோக்களில் ஜெய் முக்கியமானவர். திருமணம் என்னும் நிக்கா, நவீன சரஸ்வதிசபதம், வடகறி, தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், வேட்டை மன்னன், அர்ஜூனன் காதலி என ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித கேரக்டர் என்றவரிடம், ராஜாராணி பட அனுபவம் பற்றி கேட்டபோது...
‘‘படத்தில் நயன்தாரா என்காதலி. அவருடன் ஜோடியாக நடிக்க என் எடையை 6 கிலோ அதிகமாக்கினேன். அதுமாதிரி அவரும் தனது உடல் எடையை கணிசமாக குறைத்தார். இந்தப் படம் நடிப்பில் எனக்கு புது வண்ணம் கொடுத்திருக்கிறது...’’
முகத்தில் உற்சாகம் கொப்பளிக்க சொன்ன ஜெய்யிடம், ‘‘முதலில் அஞ்சலி. இப்போது நஸ்ரியா என உங்களை சுற்றி வரும் கிசுகிசுக்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? ’’
“சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் நட்பு ரீதியில் பழகுவதில்லையா? அது மாதிரி தான் இதுவும். உடன் நடிக்கும் நடிகைகளிடம் நட்பு ரீதியில் பழகப்போக, அதற்கு வேறு அர்த்தம் கொடுத்து விடுகிறார்கள்.’’
***
அடுத்த விளையாட்டு!
சென்னை–28, வெண்ணிலா கபடிகுழு, சுண்டாட்டம் போன்ற விளையாட்டு பின்னணி கதையைக்கொண்ட படங்கள் வெற்றிபெற்றபிறகு அதுமாதிரி படங்கள் கோலிவுட்டில் வரத்தொடங்கி விட்டன. அந்த வரிசையில் இன்டோர் புட்பால் விளையாட்டை மையமாக வைத்து கே.குணா இயக்கி வரும் படமே எதிர்வீச்சு. நாயகனாக ‘சுண்டாட்டம்’ நாயகன் இர்பான் நடிக்கிறார். ‘தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்’ படத்தின் நாயகியான ரஸ்னா தான் இந்தப் படத்திலும் நாயகி.
பயிற்சி மட்டுமே வெற்றி தரும் என்று எண்ணும் ஒரு அணியும், பணத்தை வீசினால் வெற்றி ஓடி வந்து மண்டியிடும் என்று நம்பும் இன்னொரு அணியும் மோத, யார் ஜெயிக்கிறார்கள் என்பது அதிரடி கிளைமாக்ஸ்.
முழுக்க மலேசியாவில் தயாராகும் இந்தப் படத்தில் நாயகன் நடித்திருப்பதும் மலேசிய புட்பால்வீரர் கேரக்டரில் தான்.
***
எல்லாமே தற்செயல்!
இதுவரை நடித்த 15 படங்களில் தாஸ், குமரன் சன்ஆப் மகாலட்சுமி, பேராண்மை என 3 படங்களில் விளையாட்டு வீரராக பட்டை கிளப்பியிருப்பார் ஜெயம் ரவி. இப்போது நடித்து வரும் பூலோகம் படமும் இந்த ரகம் தான். குத்துச்சண்டை வீரராக இந்தப் படத்தில் நடிக்கும் ஜெயம்ரவி, ‘‘விளையாட்டு வீரன் சம்பந்தப்பட்ட படங்களெல்லாமே தற்செயலாக அமைகிறது என்பது தான் இதில் என் சந்தோஷம்’’ என்கிறார்.
‘‘சிறு வயதில் இருந்தே என்னுள் ஒரு விளையாட்டு வீரன் இருப்பதை உணருகிறேன். அந்த மன நிலையில்தான் வெற்றி தோல்வி இரண்டையும் எதிர்கொள்கிறேன். இந்த விளையாட்டு ஆர்வம்தான் நடிப்புக்கு மிகவும் உதவியது. பூலோகம் படத்தைத் தொடர்ந்து விளையாட்டுத்துறைக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் எனது கணிசமான நேரத்தையும் சக்தியையும் செலவிட முடிவு செய்திருக்கிறேன் என்கிறார்.
இது ஒண்ணும் பூலோகம் பட வசனம் இல்லையே..!
***

மாணவர் பிரச்சினை
வியாபார நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்டு வரும்
படங்களுக்கு மத்தியில் எப்போதாவது நல்ல சமூக சிந்தனையுள்ள படங்களும் வந்து ஹிட்டடிக்கின்றன. எங்கள் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிக்க ஜேப்பிஅழகர் இயக்கி வரும் ‘பிரமுகர்’ அப்படியொரு படம் என்கிறார், டி.டி.சுரேஷ்.
‘‘அப்படியென்ன கதை?’’ கேட்டால், ‘‘மாணவர்களின் இன்றைய அத்தியாவசிய பிரச்சினையை மையமாக வைத்து இதுவரை யாரும் சொல்லியிராத திரைக்கதை. கொஞ்சமும் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். தொடர்ந்தும் இம்மாதிரி சமூக அக்கறையுடன் கூடிய படங்களே என் சாய்ஸ்!’’ என்கிறார்.
அப்படீன்னா சமூக சீர்கேட்டை களையும் திரைக்கதை வைத்திருக்கும் இயக்குனர்களுக்கு அதிர்ஷ்டம் அடிச்சாச்சுன்னு சொல்லுங்க!
***
ஆல்பம் பார்த்து...
‘அம்மா அம்மம்மா’ படம் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கும் எம்.வி.ரகு, தொடக்கத்தில் கீபோர்டு பிளேயராகவே வெளிப்பட்டார். இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்–கணேஷ் ஆகியோரிடம் கீபோர்டு வாசித்தவர், அப்படியே கர்நாடக இசை, மேற்கத்தியஇசை இரண்டிலும் தேறி, இசைக்களத்தில் தன்னை இசையமைப்பாளராக அங்கீகரித்துக் கொண்டிருக்கிறார். இந்த காலகட்டத்தில் இவர் இசையில் வெளியான நூற்றுக்கணக்கான இசை ஆல்பங்கள் ‘யார் இவர்?’என்று கேட்க வைக்க, அதேநேரம் ‘அம்மா அம்மம்மா’  படத்தின் தயாரிப்பாளர் பார்வைக்கும் இந்த ஆல்பம் போக, அப்போதே  கைகூடியதுதான் இசையமைப்பாளர் வாய்ப்பு.
இந்தப் படம் முடிவதற்குள் தரிசுநிலம் உள்ளிட்ட 3  படங்களில் வாய்ப்பு கனிய,  உற்சாகமாகி விட்டார், ரகு.
‘அம்மா அம்மம்மா’ படத்தின் இசை அனுபவம் பற்றிக்கேட்டால், ‘‘அது அம்மா–மகன் பாசப்போராட்டக் கதை. அதற்கேற்ற பாசப்பின்னணியில் ‘குக்கூ குயில் பாட்டு’ என்ற மெலடி பாடலுக்கு இசையமைத்தபோது யூனிட்டே ரசித்தது. அப்போதே இந்தப் பாடல் ஹிட் ஆகும். நானும் பேசப்படுவேன் என்ற நம்பிக்கை வந்து விட்டது’’ என்கிறார்.
நல்ல இசை நாடறிய வைக்கும் தானே!
***
சின்னத்திரை சிநேகா!
திருமணத்துக்குப் பிறகு ‘உன் சமையலறையில், பண்ணையாரும் பத்மினியும்’ என 2 படங்களில் நடித்துவரும் சிநேகா, மிக விரைவில் சின்னத்திரை நிகழ்ச்சி  ஒன்றிலும் கலக்கவிருக்கிறார். இதற்காக அவருக்கு பேசப்பட்ட தினசரி சம்பளம் தான் கேட்பவர்களுக்கு தலையை சுற்றும்.
***
மறுபடியும் தமிழ்!
‘அத்திரண்டிக்கு தாராதி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் நடிகை பிரணிதாவுக்கு வாய்ப்புகள் வரிசை கட்டுகின்றன. தமிழில் ‘சகுனி’ படத்தில் நடித்தவர், அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்காததில் நொந்து போய்த்தான் தெலுங்குப் படஉலகம் போனார்.அப்படியே கன்னடத்திலும் நடிக்கத் தொடங்கினார்.
இப்போது மீண்டும் தமிழ்ப்பட வாய்ப்புகளும் எட்டிப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றன.
ஜெயிச்சாத்தான் நம்மவர்கள் அள்ளிக்குவாங்களே!
***
ராசியான ஜோடி!
காஜலுடன் ஜோடி சேர்ந்த ‘நான் மகான் அல்ல’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே ‘ஆல்இன்ஆல் அழகுராஜா’ படத்திலும் சென்டிமென்டாக அவருடன் ஜோடி சேர்ந்தார், கார்த்தி. இப்போது படம் எதிர்பார்த்தபடி திருப்தியாக வந்திருப்பதில், புதிய படத்தில் காஜல் ஜோடி என்றாலும் ஓ.கே. என்கிறாராம்.
ராசியான ஜோடி என்றால் எத்தனை படங்களில் நடித்தாலும் ஜெயித்துக் கொண்டே இருக்கலாமே. நமக்கு வெற்றி தானே முக்கியம்.
***
மறுப்பேனா, நான் மறுப்பேனா..!
காஜல்அகர்வால் தமிழில் முன்னணி நடிகை. விஜய்யுடன் சேர்ந்து ‘துப்பாக்கி’ தூக்கியவர், அவரது அடுத்த படமான ‘ஜில்லா’வுக்கும் ராணியாகி விட்டார். இப்போது கார்த்தியுடன் ‘ஆல்இன்ஆல் அழகுராஜா’வை முடித்தவர், தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கிறார். கூடவே கைகோர்த்துக் கொண்டு ஒரு தெலுங்குப் படமும் வந்திருக்கிறது.
இதற்கிடையே கமல் படத்தில் நடிக்க கேட்டதாகவும், காஜல் மறுத்ததாகவும் ஒரு தகவல். அதுபற்றி காஜலிடம் கேட்டால், ‘‘கமல் படத்தில் நடிக்க என்னிடம் யாரும் பேசவில்லை. அப்படியொரு வாய்ப்பு தேடி வந்தால் அதை எப்படி விடுவேன்’’ என்கிறார்.
இதுவும் நடிப்பு இல்லையே!
***

கடலூர் மாவட்டத்தின் வரலாறு!


கிழக்குக் கடற்கரை சாலையின் உச்சியில் வருகிறது கடலூர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருகிறது. இங்கு நீர்வளம், ஏரிகள், கனிவளம், வேளாண்மை, ஆலைகள், மின்சார தொழில்,கடல் சார்ந்த தொழில்கல்ளும் ,செயிண்ட் டேவிட் கோட்டை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போன்ற பல சுற்றுலா தளங்களும் அமைந்துள்ளது...

சிதம்பரம் :

சிதம்பரத்தை 'தில்லை' என்று அழைப்பார்கள் அதற்குக் காரணம் தில்லை மரங்கள் அதிகமாயிருந்தது என்று சொல்லப்படுகிறது.சிற்றம்பலத்தின் கூரை 21,600 தங்க ஓடுகளால் ஆனது.படியின் இருபுறமும் யானை உருவங்கள் உள்ளன. வானளாவ நிற்கும் நான்கு கோபுரங்களும் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். பல மன்னர்களின் திருப்பணியைக் கண்ட கோயிலாதலால் இங்கு அவரவர் கால கலை நுட்பங்களைக் காணலாம். நடனக் கலையில் அடவுகள் இங்குள்ளது போல அவ்வளவு அழகாக வேறு எங்கும் காண முடியாது. பிரகார மண்டபங்களில் நாயக்கர் கால ஓலியங்களைக் காணலாம். இங்குச் சிவனையும்-திருமாலையும் ஒருங்கே ஓரிடத்தில் நின்று காணலாம்.

பிச்சாவரம் :

சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் பிச்சாவரம் அமைந்துள்ளது. காடுகள் சூழ்ந்த பிச்சாவரம், இம்மாவட்டத்தின் ஓர் அழகு மிக்க சுற்றுலாதுளமாகும்.கல்கத்தாவி லிருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்தபடியாகச் சுர புன்னை மரங்கள் மண்டிக் கிடக்கும் இடம். சுரபுன்னை போன்ற அரிய மரங்களையும், ஏராளமான மூலிகைகளையும் கொண்ட தீவாக காட்சியளிக்கிறது. இயற்கையழகு உள்ள இடமாதலால் வெளிநாட்டினரை வெகுவாக கவர்கிறது. படகில் ஏறி சுற்றிப்பார்க்கத் தொடங்கினால் இரண்டு பக்கங்களிலும் சுரபுன்னை மரங்கள் மண்டிக்கிடக்கும் இயற்கை அழகை காணலாம். காடு முழுவதும் சுற்றிப் பார்க்க கால்வாய் வசதியாக இருக்கிறது. அரசுபடகுகளும், தனியார் படகுகளும் உள்ளன. இவ்விடம் தனித்தனி தீவுப் பிரதேசம் ஆகையால் பயணிகளுக்குப் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தங்குவதற்கு ஏற்ற பயணியர் விடுதிகள் உண்டு. இதன் அருகில் போர்ச்சுக்கீசியர்களால் உண்டாக்கப்பட்ட போர்டோ நோவா கடல் துறைமுகம் அருகில் கடல் ஆய்வு மையம் ஒன்று உள்ளது.

பாடலீஸ்வரர் கோயில்

கடலூர் புது நகரத்தின் ஓர் அங்கமாகத் திருப்பாதிரிப் புலியூர் உள்ளது. திருப்பாதிரிப் புலியூர் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கில் 1 கி.மீ தொலைவில் பாடலீசுவரர் கோவில் என்கிற பெரிய கோவில் உள்ளது.திருப்பாதிரிப் புலியூரில் அமைந்துள்ள தொன்மையான சிவத் தலமிது.இங்குள்ள பிடாரியம்மன் சன்னதியும் பிரபலமானது.பிரம்மோத்ஸவம் சிறப்பாக கொண்டாடபடுகிறது.அப்பரை கற்றுணில் கட்டிக் கடலில் எறிந்த போது, 'சொற்றுணை வேதியன்' என்னும் பதிகம்பாடி,அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறியவூர் 'கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயரில் உள்ளது. வைகாசி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

வடலூர் :

கடலூர்-விருத்தாசலம் சாலையில் வடலூர் அமைந்துள்ளது. வடலூர் என்றாலே இராமலிங்கசுவாமிகளின் நினைவுதான் யாருக்கும் வரும். அங்கே சத்திய ஞான சபை,தாமரை வடிவில் எண்கோண முடையதாய்ப் புதிய முறையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காட்சியளிக்கிறது. அதில் இறைவனை ஏழு திரைகள் விலக்கி ஒளி வடிவாய்க் காணும் 'ஒளி வழிபாடு' நடைபெற்று வருகிறது. இங்கு தைப்பூசத்தில் மிகப் பெரிய விழா நடைபெறுகிறது. வடலூருக்கு அருகில் மேட்டுக்குப்பத்தில் அடிகள் தங்கியிருந்த மனைக்குச் 'சித்திவளாகம்' என்பது பெயர்.

திருவயிந்திரபுரம் :

திருப்பதியில் உறையும் பெருமாளைச் சின்னவர் என்றும், திருவயிந்திரபுரத்தில் உரையும் தேவநாதப் பெருமாளைப் பெரியவர் என்றும் சொல்வர். திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் இந்த வைணவத் தலம் அமைந்துள்ளது. வேதாந்த தேசிகரால் பாடல் பெற்றத் தலம். ஒவ்வொராண்டும் மார்கழி மாதத்தில் நடைபெறும் ' இராப்பத்து பகல்பத்து' உச்சவம், 'சொர்க்க வாசல் திறப்பு விழா' சிறப்பாக நடைபெறும்.

ஸ்ரீமுஷ்ணம்

சுயம்பு வடிவில் உள்ள எட்டு திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு பூவராகசாமி கோயில் இங்குள்ளது. ரதம் போன்ற வடிவிலான புருஷஷ்குத மண்டபத்தில் போர் வீரர்கள், யானைகள், குதிரைகள் மீது அமர்ந்த நிலையில் உள்ள சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இதைக் காணக் கண் கோடி வேண்டும். இந்நகர் கடலூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

பண்ருட்டி:

பலாப்பழம், முந்திரிபழம், முந்திரிக்கொட்டை, முந்திரிப்பயறு, முந்திரி எண்ணெய் போன்றவைகளுக்கு பண்ணுருட்டி பெயர் பெற்றது. மிக முக்கியமான மொத்த சந்தையுள்ள வணிகத்தலம். வடக்குத்துக் கிராமத்தில் பேப்பர் மில் ஒன்று, கங்கா பேப்பர் மில் என இயங்கி வருகிறது.

காட்டு மன்னார்குடி

சிதம்பரம் வட்டத்திலுள்ள சிறு நகரம். இங்குள்ள பெருமாள் கோயில் மிகப் பழமையானது. வைணவத் துறவிகளான நாதமுனிகள், ஆளவந்தார் ஆகியோர் பிறந்த இடம். இதுவே காட்டு மன்னார்குடியின் தனிச்சிறப்பு.

கெடிலத்தின் கழிமுகம் :

கெடிலநதி கடலூருக்கருகில் மூன்று இடங்களில் கடலில் கலக்கிறது. ஆறு கடலோடு கலக்கும் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாகும். கெடிலத்தின் இந்த முகத்துவாரத்தை யொட்டியுள்ள சூழ்நிலை மிகக் கவர்ச்சியும் அழகும் வாய்ந்தது. மாலை வேளையில் மக்கள் இங்கு பொழுது போக்குவதற்கு ஏற்ற சூழல் அமைந்துள்ளது. சென்னை மரினா கடற்கரை போன்று இது நீளமில்லாவிட்டாலும் அகன்ற மணற் பரப்பைக் கொண்டது. சோலைகள் நிறைந்த சூழ்நிலையும், கடலோடு ஆறு கலக்கும் கண்கவர் காட்சியும் இங்கிலாந்து நாட்டில் உள்ள 'கவுண்டி கடற்கரை' போன்றதென்று புகழப்படுகிறது.

நெய்வேலி :

கடலூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் நெய்வேலி அமைந்துள்ளது.நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி போலவே முந்திரியும் விளைகிறது.1961- ஆகஸ்ட் 24ம் நாள் லிக்னைட் படிவமத்தின் முதன் முதல் காட்சி. நிலக்கரியால் லாபமில்லை என்றதனால் அதை எரித்து அந்த வெப்பசக்தி கொண்டு, மின்விசை உற்பத்தி செய்வதால் லாபம் என உணரப்பட்டு மின்விசை நிலையம் அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே அதிக அளவு பழுப்பு நிலக்கரி இங்குதான் வெட்டியெடுக்கப்படுகின்றன. தமிழகத்திற்கு நெய்வேலி மின்சாரம் மூலம் வெளிச்சமும் தருகிறது. உரமும் தயாரிக்கப்படுகிறது.

கடலூர் துறைமுகம் :

கடலூர் முதுநகரில் உள்ளது.கெடில ஆற்றின் முகத்துவாரத்தில் இயற்கையாய் அமைந்த துறைமுகம் ஆகும்.அந்நிய வாணிபத்தில் சென்னைக்குத் துணையாக உள்ளது. தற்காலம் ஒரு நடுத்தரத் துறைமுகமாக மாற்றப்பட்டு உள்ளது. இரும்புக்கனிகள், எரிபடிவங்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதி. கந்தகம், உரம் உணவு தானியம் ஆகியவை முக்கிய இறக்குமதி.இம்மாவட்டத்திலுள்ள மற்றொரு துறைமுகம் பரங்கிப் பேட்டையில் உள்ளது.இன்றும் படகுகள் வந்து போகின்றன.

பரங்கிப்பேட்டை

இங்கு முதலில் காலடி எடுத்து வைத்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். அடுத்து டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானது. போர்ச்சுக்கீசியர் காலத்தில் போர்ட்டோ நோவா என்று அழைக்கப்பட்ட இந்நகர் ஆங்கிலேயர் வசம் வந்த பிறகு பரங்கிப்பேட்டை என மாறியது. இங்கு வாழும் இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் கடல் வணிகம் செய்பவர்கள். மாலுமியார் அரைக்காசு நாச்சியார், ஹபீஸ் மிர் சாஹிப், செய்யது சாஹிப் ஆகிய இறையடியார்களின் பெயரிலான தர்காக்கள் மிக முக்கியமானவை.

தில்லை காளி கோயில்

மிகப் பழமையான கோயில் கடலூர் நகரின் வட திசை எல்லையில் இது அமைந்துள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் ஆண்ட கப்பேருஞ்சன் என்ற மன்னனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. பக்தர்கள் நாடும் நற்கோயில்.

பஞ்ச சபைக் கோயில்கள்

சிவபெருமான் தன் பிரபஞ்ச நடனத்தை திருவாலங்காட்டில் இரத்தின சபையிலும் (சிற்சபை) சிதம்பரத்தில் உள்ள பொற்சபையிலும் மதுரையில் உள்ள வெள்ளியம்பலத்திலும் திருநெல்வேலியில் உள்ள தாமிர சபையிலும் குற்றாலத்தில் உள்ள சித்திர சபையிலும் ஆடினார். இச்சபைகள் உள்ள கோயில்களே பஞ்ச சபைக் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

விருத்தாச்சலம்

மணிமுத்தாறு நதிக்கரையில் அமைந்த நகரம். இங்குள்ள விருத்தகிரிஸ்வரர் ஆலயம் பழமை வாய்ந்தது. மாசிமகத் திருவிழாவில் யாத்ரிகர்கள் மணிமுத்தாறு நதியில் புனித நீராடுவர். கடலூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி

நடனக்கலையின் தலைவன் நடராஜன். அவன் ஆடும் நாட்டியம் பிரபஞ்ச இயக்கம். இதன் அடிப்படையில் நடராஜபெருமானுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடத்தப்படும் விழா இது. இந்த விழா மகா சிவராத்திரி ஐந்து நாட்களும் நடைபெறுகிறது. பல நடனக் கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் நாட்டியத்தின் மூலம் நடனக் கடவுளுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

கடலூர் தீவு :

உப்பனாற்றிற்கும், கடலூக்கும் நடுவில் ஒரு தீவு இருக்கிறது. இந்தத் தீவிற்குக் கிழக்கு எல்லையாகக் கடலூம், வடக்கு எல்லையாகக் கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதியும், மேற்கு-தெற்கு எல்லைகளாகக் உப்பனாறும் அமைந்துள்ளன. இந்தக்கழிமுகத் தீவு 'அக்கரை' என அழைக்கப்படுகிறது. இந்த அக்கரைத் தீவில் சோணங்குப்பம், சிங்காரத் தோப்பு, கோரி என்றும் மூன்று சிற்றுர்கள் உள்ளன. இந்தத் தீவு சென்று காணத்தக்கதாகும்.போக்குவரத்திற்குப் படகு வசதி உண்டு.

பஞ்சபூதத் தலங்கள்

சிவபெருமானின் ஐந்து பண்பு நலன்களை எடுத்துக் காட்டும் ஆலயங்களே பஞ்சபூதத் தலங்கள் எனப் புனிதமாகக் கருதி மக்கள் வழிபடுகிறார்கள். சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவானைக்காவல் மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி ஆகியவையே பஞ்சபூதத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

செயிண்ட் டேவிட் கோட்டை :

கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதிக்கும், அதன் வடகிளைக்கும் நடுவே, தேவனாம்பட்டினம் என்னும் சிற்றுர் உள்ளது. இந்தத் தேவனாம் பட்டினத் தீவில் கடற்கரையையொட்டி கெடிலத்தின் வடகரையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 'செயிண்ட் டேவிட் கோட்டையைப் பாழடைந்த நிலையில் இன்றும் காணலாம். கோட்டை உள்ள தீவின் முக்கியத்துவத்தை டச்சுக்காரர்களே முதலில் உணர்ந்தனர். இக்கோட்டை 1683-ஆம் ஆண்டு கட்டப்பட்டு பின்னர் விரிவுபடுத்தப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் :

1920-ஆம் ஆண்டு மீனாட்சிக் கல்லூரியாக இருந்தது. தமிழரின் மேன்மையை உலகுக்கு எடுத்துக்காட்ட தமிழ்துறை ஏற்படுத்தப்பட்டது.1929-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக உயர்ந்தது. ராஜா சர்.முத்தையாச் செட்டியாரின் தந்தை அண்ணாமலை செட்டியாரால் உண்டாக்கப்ட்டது. அவர் பெயரில் அமைந்த நகரில் கடற்கரைக்கு 5 கி.மீ தொலைவில் அமைதியான, இயற்கையோடு இயைந்த சூழலில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து 2 பர்லாங் தூரத்தில் இருக்கிறது. 1,25,000 மேற்பட்ட நூற்களைக் கொண்ட பெரிய நூலகம் இருக்கிறது. இங்குள்ள தமிழ்துறையில் தமிழகத்தின் சிறந்த தமிழறிஞர்கள் அனைவரும் பணியாற்றியுள்ளனர். எ-கா பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சோமசுந்தர பாரதியார், சதாசிவ பண்டாரத்தார், போன்றோர் தமிழிசை விழிப்புணர்விலும், இந்திப் போராட்டத்திலும் பெரும்பங்கு இப்பல்கலைக் கழகம் வகித்தது.

நெல்லிக்குப்பம் :

முஸ்லீம்கள் நிறைந்த ஊர். இங்கு ஈ.ஐ.டிபாரி நிறுவனத்தாரால் நடத்தப்படும் சர்க்கரை ஆலை ஒன்றும், மிட்டாய் தொழிற்சாலையும் உள்ளன. கரும்பு உற்பத்தி இவ்வட்டத்தில் அதிகம். அதுபோல வெற்றிலை, அகத்திக்கீரை, அவுரிஎண்ணெய் முதலியவை இங்குப் பெயர் பெற்றவை.

பரூர் :

விருத்தாசலத்திற்கு வடமேற்கில் உள்ளது இவ்வூர். இங்குள்ள சர்சில் மாதாவின் சிலையும், கிறிஸ்துவின் சிலையும் மணிலாவிலிருந்து வரவழைக்கப்பட்டவை. இவை மரத்தாலானவை. சிறப்பாக வண்ணம் தீட்டப்பெற்றவை, அதில் இந்திய அணிகலன்கள் இருப்பது சிறப்பு.

சிப்காட் தொழிற்கூடம் :

சிதம்பரம்-கடலூர் சாலையில், கடலூர் புதுநகரிலிருந்து 9கி.மீ தொலைவில், சுமார் 460.33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் புதுநகர் :

சென்னைக்கு நேர் தெற்கே 100 மைல் தொலைவிலுள்ளது. மஞ்சக் குப்பம்,புதுப்பாளையம், தேவனாம்பட்டணம், வில்வராய நத்தம், வன்னியர் பாளையம் முதலிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டது. கெடிலம் ஆறு கடலூர் நகரைச் சுற்றியும், நகருக்கு நடுவேயும் ஓடுகிறது. நகருக்கு அருகில் கடலில் கலக்கிறது. மாவட்டத் தலைநகராக இருப்பதால் நீதிமன்றம், கல்வி, மருத்துவ நிலையங்கள் அரசு அலுவலகங்கள் இங்குள்ளன. வணிகத் தலமாகவும் இது இருந்து வருகிறது.

அஜித்துக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!- விஷ்ணுவர்தன் சிறப்புப் பேட்டி!

இயக்குனர் விஷ்ணுவர்தன்
இயக்குனர் விஷ்ணுவர்தன்
ஆரம்பம் படத்தில் நடிகர் அஜித்
ஆரம்பம் படத்தில் நடிகர் அஜித்
ஆரம்பம் படத்தில் நடிகர் அஜித்
ஆரம்பம் படத்தில் நடிகர் அஜித்
நடிகர் அஜித் உடன் விஷ்ணுவர்தன்
நடிகர் அஜித் உடன் விஷ்ணுவர்தன் 
 
 
31ம் தேதி பட வெளியீடு, மாயாஜாலில் மட்டும் 91 ஷோ, எங்கு பார்த்தாலும் 'ஆரம்பம்' படத்தைப் பற்றி தான் பேச்சாக இருக்கிறது. சரி, 'ஆரம்பம்' பற்றி இயக்குநர் விஷ்ணுவர்தனிடமே பேசலாம் என்று தொடர்பு கொண்டேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் பைனல் மிக்ஸ் போய்க் கொண்டிருக்கிறது. அங்கு வாங்க என்றவுடன் அவசர அவசரமாக சென்று காத்திருந்து எடுத்த மினி பேட்டி... 


'ஆரம்பம்' படத்தை அஜித் பாத்துட்டு என்ன சொன்னார்?

 
ரொம்ப நல்லாயிருக்குனு சொன்னார். இது என்னோட சிறந்த படங்கள்ல ஒண்ணு. ரொம்ப நன்றி விஷ்ணு அப்படினு சொன்னார். சார்.. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்னு சொன்னேன். குடும்பத்தோட படம் பாத்துட்டு, என்கிட்ட ஜாமி (ஆர்யா) பத்தி தான் ரொம்ப பேசினாரு. ரொம்ப நல்லா பண்ணியிருக்கான்னு பாராட்டினாரு. 


இந்தப் படத்தோட சிறப்பம்சமே படத்தோட கதை தான் விஷ்ணு. நான் ஒரு நல்ல கேரக்டர் பண்ணிருக்கேன். மொத்த படமா பார்த்தா, எல்லாருமே அவங்கங்க கேரக்டர்ல ரொம்ப நல்லா, பிரமாதமா நடிச்சுருக்காங்க. எப்போதுமே என்னோட படங்கள்ல என்னோட கேரக்டருக்குத் தான் முக்கியத்துவம் இருக்கும். மத்தவங்களும் நடிச்சிருப்பாங்க. ஆனா இந்த படம் அப்படியில்லைனு ரொம்ப பாராட்டினார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. 


ஆக்‌ஷனுக்கு அஜித், ரொமான்ஸுக்கு ஆர்யாவா..?

 
அப்படியெல்லாம் கிடையாது. படம் பாத்தீங்கன்னா தெரியும். இது ஒரு ஆக்‌ஷன் டிராமா. காமெடிக்காக சந்தானத்தையும், ரொமான்ஸ்க்காக ஆர்யாவையும், ஆக்‌ஷனுக்கு அஜித்தையும் யூஸ் பண்ணா அது தப்பான படம். படத்துல ஆர்யா முக்கியமான கேரக்டர் பண்ணிருக்காரு. அஜித்துக்கு இணையா ஆர்யாவுக்கு நிறைய காட்சிகள் இருக்கு. 


ஸ்டில்ஸ் எல்லாம் பார்க்கும் போது அஜித் போலீஸ் வேடத்துல நடிச்சுருக்காரா..?

 
இப்படிக் கேட்டா நான் என்ன பதில் சொல்ல முடியும். படம் பாத்து தெரிஞ்சுக்கிட்டுமே. இப்பவே அஜித்துக்கு இந்த ரோல் அப்படின்னா, படம் பாக்குற அப்போ அந்த எதிர்பார்ப்பு இருக்காது. அதனால இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பல

.
பெரிய பட்ஜெட், நிறைய நடிகர்கள் கொண்ட படத்தை முடிச்சாச்சு.. அடுத்த ப்ளான் என்ன?

 
எனக்கே தெரியல. என்னோட எல்லா படங்களையும் அப்படித்தான் பண்ணிருக்கேன். மற்ற இயக்குநர்கள் மாதிரி படம் முடியும் முன்பே, அடுத்த படத்துக்காக அட்வான்ஸை வாங்கி வச்சுக்குற ஆள் நான் இல்ல. படம் ரிலீஸான உடனே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, அப்புறமா தான் ப்ளான் பண்ணுவேன். என்ன கதை பண்ணலாம்னு யோசிப்பேன். அடுத்த படத்தை பத்தி எனக்கு யோசிக்க கூட இப்ப டைமில்லை. அந்தளவிற்கு 'ஆரம்பம்' பணிகளுக்காக ஓடிட்டு இருக்கேன்.


'ஆரம்பம்' படத்தின் இந்தி ரீமேக் பண்ணச் சொன்னா பண்ணுவீங்களா?

 
கண்டிப்பா பண்ணுவேன். இதுல என்ன தப்பிருக்கு. இப்பவே நிறைய பேர் பட வெளியீட்டிற்காக காத்துட்டு இருக்காங்க. பாக்கலாம்.. படம் வெளியாகி எல்லாம் நல்லபடியா அமைஞ்ச இயக்க தயாரா இருக்கேன். 


இந்தில பண்ணா அஜித், ஆர்யா ரோல்ல எல்லாம் யார் நடிச்சா நல்லாயிருக்கும்..?

 
தெரியல. எல்லாக் கேள்விக்கும் படம் ரிலீஸான உடனே தான் பதில் கிடைக்கும். இப்பவே படத்தை இந்தி நடிகர் யாருக்காவது போட்டுக் காட்டி, அப்படியே அவரை வெச்சு ஒரு இந்தி படம் பண்ணிரனும் அப்படினு எல்லாம் நான் ப்ளான் பண்ணல. இந்தி படம் பேசிக்கிட்டிருக்கேன். ஆனால் அது 'ஆரம்பம்' ரீமேக் கிடையாது. இப்பவே அஜித், ஆர்யா வேஷத்துல யார் நடிச்சா நல்லாயிருக்கும் கேட்டா எனக்கிட்ட பதில் இல்லை. ஏன்னா யார் நடிச்சா நல்லாயிருக்கு, அஜித் சார் இமேஜ் யாருக்கு செட்டாகும், அப்படினு நிறைய விஷயங்கள் உட்காந்து பேசி முடிவு பண்ணனும். இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு. 


'ஆரம்பம்' படத்தப் பத்தி இணையத்துல இருக்க, முக்கியமா டிவிட்டர்ல இருக்க பரபரப்பை எல்லாம் கவனிக்குறீங்களா?

 
இல்லைங்க.. காரணம், எனக்கு நேரமில்லை. ட்விட்டர் பக்கம் கூட இப்போ நான் போறதில்லை. 2 நாளைக்கு ஒரு தடவை #Arrambam டிரெண்டாவது பத்தி எல்லாம் சொல்லுவாங்க.. பார்ப்பேன். ஆனா அதுக்காக அதுல ரொம்ப கவனம் செலுத்த மாட்டேன். ஏன்னா எனக்கு பயம். 


என்னை ட்விட்டருக்கு கொண்டு வந்ததே யுவன் தான். ஆரம்பிச்சு விட்டுட்டான். அதனால எப்போதாவது எனக்கு தோணுறதா ட்வீட் பண்ணிட்டு வந்துருவேன். என்னையே ரொம்ப கேவலமா திட்டி எல்லாம் அனுப்புவாங்க. ஆனா, என்னோட அசிஸ்டன்ஸ் இருப்பாங்க.. படம் இன்றைக்கு சென்சார் அப்படினு நிறைய ட்வீட் பண்ணுவாங்க. வித்தியாசமான ஏதாவதுன்னா சொல்லுவாங்க.. நானும் பார்ப்பேன். 


எவ்வளவு HYPE இருக்கோ.. அதே மாதிரி SWORD FISH ரீமேக், தீவிரவாதிகளை மையப்படுத்திய படம் தான் 'ஆரம்பம்'னு எதிர்மறையான விமர்சனங்களும் வருதே?

 
இது எந்த படத்தோட ரீமேக்கும் கிடையாது. ஒருத்தன் துப்பாக்கி தூக்கி சண்டை போடுறான்னு எடுத்தா அதே மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கும். அதுக்காக இது அந்தப்படத்தோட காப்பினு சொல்லக்கூடாது. ஊழலை எதிர்த்து போராடுறான், லவ் பண்றான்னு இப்படி எதைப் பத்தி எடுத்தாலும் உடனே காப்பினு சொல்ல முடியாது. அது ஒரு முட்டாள்த்தனம். அப்படி சொல்றவங்க தான் ஒரு புத்திசாலினு காட்டிக்கறதுக்காக இப்படி சொல்லிட்டு இருக்காங்க. 


அப்படினு பாத்தா இந்த படத்துலயும் ஹேக்கிங் (HACKING) இருக்கு. உடனே இது DIE HARD படத்தோட காப்பினு சொல்லடுவீங்களா.. எந்திரன் படத்தை i-Robot படத்தோட காப்பினு எப்படி சொல்ல முடியும்? இந்த படமே ஒரு உண்மை சம்பவம் தான். அதை சுத்தி கதை பண்ணிருக்கேன் அவ்வளவுதான்.


உண்மை சம்பவம்ன்னா மும்பை தீவிரவாதிகள் தாக்குதலா?

 
அப்படிச் சொல்ல முடியாது. தீவிரவாத தாக்குதல், ஊழல், இப்படி நிறைய இருக்கு. டெல்லி, இந்தியா, அமெரிக்கா இப்படி எல்லா இடத்துலயும் ஊழல் இருக்கு. உடனே நான் ஊழலைப் பத்தி படம் எடுக்கிறேன்னு சொன்னா. நான் காலி. கதையே பாம்பேல நடக்குற மாதிரி எடுத்துருக்கேன். குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அங்கே நடக்கற மாதிரி எடுத்தா தான் நல்லாயிருக்கும். நான் சென்னைல நடக்கற மாதிரி எடுத்தேன்னா, அதை மாதிரி முட்டாள் தனம் எதுவுமே கிடையாது. ஏன்னா அதே மாதிரி சம்பவங்கள் இங்க அவ்வளவா நடக்குறதில்லை. இதே நான் பாம்பே நடக்குதுனு சொன்னா நம்புவீங்க. அது தான் முக்கியம். 


பத்து பெண்கள் கற்பழிப்பு பத்தி கதைன்னா அதை எங்கு வேணுமானாலும் நடக்கறதா கதை பண்ணலாம். அது எங்கனாலும் நடக்கும். பாம்பே மாதிரியான நகரங்கள்ல நீங்க எந்த மாதிரியான கதைகளையும் எடுக்கலாம். அங்கே தமிழர்களே இல்லையே அப்படினு நீங்க சொல்ல முடியாது. நான் சொல்லிருக்குற விஷயங்கள் எல்லாமே நம்பற மாதிரி இருக்குற இடம் பாம்பே. அதனால அங்கு வெச்சு எடுத்தேன். 


அஜித் - நயன்தாரா பாடல் காட்சியே இல்லையாமே... நயன் இதுல என்ன ரோல் பண்ணிருக்காங்க?

 
யாரு சொன்னாங்க இதுல அஜித் - நயன் பாட்டு இல்லனு. ஒரு சின்ன பாட்டு இருக்கு. கிளாமர் என்பதெல்லாம் தாண்டி இதுல நயன் ஒரு சூப்பரான கேரக்டர் பண்ணிருக்காங்க. கதை போயிட்டு இருக்குற வேகத்துல கமர்ஷியலுக்காக ரெண்டு பேர வைச்சு பாட்டு பண்ண முடியாது. 


'ஆரம்பம்' முடிஞ்சிருச்சு.. அஜித் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க..

 
படம் பாத்த வரைக்கும் எல்லாருக்குமே படம் பிடிச்சிருக்கு. என்னைப் பொருத்தவரைக்கும் இது ஒரு அஜித் படம். எந்தொரு படமெடுத்தாலும் அதுல நாயகன்னு ஒருத்தர் இருப்பாரு. அஜித்தை சுத்தித்தான் கதை நடக்கும். மொத்தத்துல அஜித்தை வச்சு ஒரு சூப்பரான கதை ஒண்ணு பண்ணிருக்கேன். இது ஒரு கேங்க்ஸ்டர் படம் கிடையாது. எனக்கும் சரி, அஜித்திற்கு சரி இது ஒரு புதுமையான களம். 


ஸ்கிரீன்ல பாக்குற அப்போ ரசிகர்களுக்கு புதுசாயிருக்கும். அதை மட்டும் நீங்க உறுதியா நம்பலாம். கண்டிப்பா எல்லாரும் தியேட்டர்ல போய் படம் பாருங்க. திருட்டு டி.வி.டில, இணையத்துல எல்லாம் பாக்காதீங்க. ரொம்ப கஷ்டப்பட்டு பண்ணியிருக்கோம்.படம் பாத்துட்டு நீங்க சொல்ற பதிலுக்காக, ஒரு இயக்குநரா காத்துட்டு இருக்கேன். அனைவருக்கும் 'ஆரம்பம்' படக்குழுவினரின் 'தல' தீபாவளி வாழ்த்துகள்.

ஷாருக்கானுக்கு 1,800 கோடி சொத்து!

நடிகர் ஷாருக்கான்
 
1,800 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான். 


இந்தியளவில் பணக்காரர்கள் பட்டியலில் 300 மில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்து வைத்திருப்போர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இப்பட்டியலில் இணைந்திருக்கிறார் ஷாருக்கான். 


அவரது பெயரில் மட்டும் 400 மில்லியன் டாலர் சொத்து இருக்கிறது. 400 மில்லியன் டாலர், அதாவது 2460 கோடி ரூபாய்க்கு மேல் அவரது பெயரில் சொத்து இருக்கிறது. அவரது ‘ரெட் சில்லீஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் சொத்துக்கள் இந்த கணக்கில் வராது. 


இப்பட்டியலில் 114வது இடத்தில் இருக்கிறார் ஷாருக்கான். கடந்தாண்டைப் போலவே முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். 


கடந்தாண்டு 300 மில்லியன் டாலருக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் பட்டியலில் 114 பேர் இருந்தனர். அது இந்தாண்டு 141 ஆக அதிகரித்திருக்கிறது.

ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற சூப்பரான வழி.

http _www.coolphototransfer.com_ 


கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் செயலி(அப்) ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு எளிதாக இடமாற்றம் செய்து அசத்துகிறது.இந்த செயலியை பயன்படுத்தும் போது  வழக்கமாக செல்போனில் உள்ள புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் யூஎஸ்பி கேபில் தேவைப்படும் அல்லவா? ஆனால் இந்த செயலி கேபில் எதுவும் இல்லாமலேயே வைபீ மூலமாக புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்றி விடுகிறது.


இது புகைப்படங்களை மாற்றுவதற்கான சுலபமான வழி மட்டும் அல்ல, விரைவான வழியும் கூட என்கிறது இந்த செயலி.


அது மட்டும் அல்ல சும்மா ஜாலியாக புகைப்படங்களை மாற்றலாம் என்கிறது. அதாவது விதவிதமான முறையில் ப‌டங்களை ,அனிமேஷன் பாணியில் படங்களை மாற்றலாம். எப்படி தெரியுமா? செல் போனில் உள்ள புகைப்படத்தின் மீது கையை வைத்து அப்படியே தள்ளிவிட்டால் அது கம்ப்யூட்டருக்குள் போய்விடும். அல்லது போனை கம்ப்யூட்டர் மேலே வைத்து மானிட்டர் மீது வைத்தாலும் புகைப்படம் இடம் மாறிவிடுகிறது.
இதே போல போனை குலுக்கினாலும் புகைப்படல் கம்ப்யூட்டருக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறது. புகைப்படத்தை கைகளால் பெரிதாக்கி அப்படியே தள்ளி விட்டாலும் புகைப்படம் கம்ப்யூட்டருக்கு சென்று விடுகிறது.


உங்களுக்கு விசில் அடிக்க தெரியுமா? அடித்து பாருங்கள். அசந்து போவீர்கள். காரணம் விசில் அடித்தாலும் புகைப்படம் இடம்மாறிவிடுகிறது.
இந்த அனிமேஷன் வசதிகளை தான் புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற கூலான வழி என கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் வர்ணிக்கிறது. இதற்கான விளக்க வீடியோவே சூப்பராக இருக்கிறது.ஆன்ட்ராய்டு போன் இருந்தால் பயன்படுத்தி பாருங்கள்.



டவுண்லோடு செய்ய:http://www.coolphototransfer.com/

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top