கிழக்குக் கடற்கரை சாலையின் உச்சியில் வருகிறது கடலூர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருகிறது. இங்கு நீர்வளம், ஏரிகள், கனிவளம், வேளாண்மை, ஆலைகள், மின்சார தொழில்,கடல் சார்ந்த தொழில்கல்ளும் ,செயிண்ட் டேவிட் கோட்டை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போன்ற பல சுற்றுலா தளங்களும் அமைந்துள்ளது...
சிதம்பரம் :
சிதம்பரத்தை 'தில்லை' என்று அழைப்பார்கள் அதற்குக் காரணம் தில்லை மரங்கள் அதிகமாயிருந்தது என்று சொல்லப்படுகிறது.சிற்றம்பலத்தின் கூரை 21,600 தங்க ஓடுகளால் ஆனது.படியின் இருபுறமும் யானை உருவங்கள் உள்ளன. வானளாவ நிற்கும் நான்கு கோபுரங்களும் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். பல மன்னர்களின் திருப்பணியைக் கண்ட கோயிலாதலால் இங்கு அவரவர் கால கலை நுட்பங்களைக் காணலாம். நடனக் கலையில் அடவுகள் இங்குள்ளது போல அவ்வளவு அழகாக வேறு எங்கும் காண முடியாது. பிரகார மண்டபங்களில் நாயக்கர் கால ஓலியங்களைக் காணலாம். இங்குச் சிவனையும்-திருமாலையும் ஒருங்கே ஓரிடத்தில் நின்று காணலாம்.
பிச்சாவரம் :
சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் பிச்சாவரம் அமைந்துள்ளது. காடுகள் சூழ்ந்த பிச்சாவரம், இம்மாவட்டத்தின் ஓர் அழகு மிக்க சுற்றுலாதுளமாகும்.கல்கத்தாவி லிருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்தபடியாகச் சுர புன்னை மரங்கள் மண்டிக் கிடக்கும் இடம். சுரபுன்னை போன்ற அரிய மரங்களையும், ஏராளமான மூலிகைகளையும் கொண்ட தீவாக காட்சியளிக்கிறது. இயற்கையழகு உள்ள இடமாதலால் வெளிநாட்டினரை வெகுவாக கவர்கிறது. படகில் ஏறி சுற்றிப்பார்க்கத் தொடங்கினால் இரண்டு பக்கங்களிலும் சுரபுன்னை மரங்கள் மண்டிக்கிடக்கும் இயற்கை அழகை காணலாம். காடு முழுவதும் சுற்றிப் பார்க்க கால்வாய் வசதியாக இருக்கிறது. அரசுபடகுகளும், தனியார் படகுகளும் உள்ளன. இவ்விடம் தனித்தனி தீவுப் பிரதேசம் ஆகையால் பயணிகளுக்குப் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தங்குவதற்கு ஏற்ற பயணியர் விடுதிகள் உண்டு. இதன் அருகில் போர்ச்சுக்கீசியர்களால் உண்டாக்கப்பட்ட போர்டோ நோவா கடல் துறைமுகம் அருகில் கடல் ஆய்வு மையம் ஒன்று உள்ளது.
பாடலீஸ்வரர் கோயில்
கடலூர் புது நகரத்தின் ஓர் அங்கமாகத் திருப்பாதிரிப் புலியூர் உள்ளது. திருப்பாதிரிப் புலியூர் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கில் 1 கி.மீ தொலைவில் பாடலீசுவரர் கோவில் என்கிற பெரிய கோவில் உள்ளது.திருப்பாதிரிப் புலியூரில் அமைந்துள்ள தொன்மையான சிவத் தலமிது.இங்குள்ள பிடாரியம்மன் சன்னதியும் பிரபலமானது.பிரம்மோத்ஸவம் சிறப்பாக கொண்டாடபடுகிறது.அப்பரை கற்றுணில் கட்டிக் கடலில் எறிந்த போது, 'சொற்றுணை வேதியன்' என்னும் பதிகம்பாடி,அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறியவூர் 'கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயரில் உள்ளது. வைகாசி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
வடலூர் :
கடலூர்-விருத்தாசலம் சாலையில் வடலூர் அமைந்துள்ளது. வடலூர் என்றாலே இராமலிங்கசுவாமிகளின் நினைவுதான் யாருக்கும் வரும். அங்கே சத்திய ஞான சபை,தாமரை வடிவில் எண்கோண முடையதாய்ப் புதிய முறையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காட்சியளிக்கிறது. அதில் இறைவனை ஏழு திரைகள் விலக்கி ஒளி வடிவாய்க் காணும் 'ஒளி வழிபாடு' நடைபெற்று வருகிறது. இங்கு தைப்பூசத்தில் மிகப் பெரிய விழா நடைபெறுகிறது. வடலூருக்கு அருகில் மேட்டுக்குப்பத்தில் அடிகள் தங்கியிருந்த மனைக்குச் 'சித்திவளாகம்' என்பது பெயர்.
திருவயிந்திரபுரம் :
திருப்பதியில் உறையும் பெருமாளைச் சின்னவர் என்றும், திருவயிந்திரபுரத்தில் உரையும் தேவநாதப் பெருமாளைப் பெரியவர் என்றும் சொல்வர். திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் இந்த வைணவத் தலம் அமைந்துள்ளது. வேதாந்த தேசிகரால் பாடல் பெற்றத் தலம். ஒவ்வொராண்டும் மார்கழி மாதத்தில் நடைபெறும் ' இராப்பத்து பகல்பத்து' உச்சவம், 'சொர்க்க வாசல் திறப்பு விழா' சிறப்பாக நடைபெறும்.
ஸ்ரீமுஷ்ணம்
சுயம்பு வடிவில் உள்ள எட்டு திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு பூவராகசாமி கோயில் இங்குள்ளது. ரதம் போன்ற வடிவிலான புருஷஷ்குத மண்டபத்தில் போர் வீரர்கள், யானைகள், குதிரைகள் மீது அமர்ந்த நிலையில் உள்ள சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இதைக் காணக் கண் கோடி வேண்டும். இந்நகர் கடலூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
பண்ருட்டி:
பலாப்பழம், முந்திரிபழம், முந்திரிக்கொட்டை, முந்திரிப்பயறு, முந்திரி எண்ணெய் போன்றவைகளுக்கு பண்ணுருட்டி பெயர் பெற்றது. மிக முக்கியமான மொத்த சந்தையுள்ள வணிகத்தலம். வடக்குத்துக் கிராமத்தில் பேப்பர் மில் ஒன்று, கங்கா பேப்பர் மில் என இயங்கி வருகிறது.
காட்டு மன்னார்குடி
சிதம்பரம் வட்டத்திலுள்ள சிறு நகரம். இங்குள்ள பெருமாள் கோயில் மிகப் பழமையானது. வைணவத் துறவிகளான நாதமுனிகள், ஆளவந்தார் ஆகியோர் பிறந்த இடம். இதுவே காட்டு மன்னார்குடியின் தனிச்சிறப்பு.
கெடிலத்தின் கழிமுகம் :
கெடிலநதி கடலூருக்கருகில் மூன்று இடங்களில் கடலில் கலக்கிறது. ஆறு கடலோடு கலக்கும் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாகும். கெடிலத்தின் இந்த முகத்துவாரத்தை யொட்டியுள்ள சூழ்நிலை மிகக் கவர்ச்சியும் அழகும் வாய்ந்தது. மாலை வேளையில் மக்கள் இங்கு பொழுது போக்குவதற்கு ஏற்ற சூழல் அமைந்துள்ளது. சென்னை மரினா கடற்கரை போன்று இது நீளமில்லாவிட்டாலும் அகன்ற மணற் பரப்பைக் கொண்டது. சோலைகள் நிறைந்த சூழ்நிலையும், கடலோடு ஆறு கலக்கும் கண்கவர் காட்சியும் இங்கிலாந்து நாட்டில் உள்ள 'கவுண்டி கடற்கரை' போன்றதென்று புகழப்படுகிறது.
நெய்வேலி :
கடலூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் நெய்வேலி அமைந்துள்ளது.நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி போலவே முந்திரியும் விளைகிறது.1961- ஆகஸ்ட் 24ம் நாள் லிக்னைட் படிவமத்தின் முதன் முதல் காட்சி. நிலக்கரியால் லாபமில்லை என்றதனால் அதை எரித்து அந்த வெப்பசக்தி கொண்டு, மின்விசை உற்பத்தி செய்வதால் லாபம் என உணரப்பட்டு மின்விசை நிலையம் அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே அதிக அளவு பழுப்பு நிலக்கரி இங்குதான் வெட்டியெடுக்கப்படுகின்றன. தமிழகத்திற்கு நெய்வேலி மின்சாரம் மூலம் வெளிச்சமும் தருகிறது. உரமும் தயாரிக்கப்படுகிறது.
கடலூர் துறைமுகம் :
கடலூர் முதுநகரில் உள்ளது.கெடில ஆற்றின் முகத்துவாரத்தில் இயற்கையாய் அமைந்த துறைமுகம் ஆகும்.அந்நிய வாணிபத்தில் சென்னைக்குத் துணையாக உள்ளது. தற்காலம் ஒரு நடுத்தரத் துறைமுகமாக மாற்றப்பட்டு உள்ளது. இரும்புக்கனிகள், எரிபடிவங்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதி. கந்தகம், உரம் உணவு தானியம் ஆகியவை முக்கிய இறக்குமதி.இம்மாவட்டத்திலுள்ள மற்றொரு துறைமுகம் பரங்கிப் பேட்டையில் உள்ளது.இன்றும் படகுகள் வந்து போகின்றன.
பரங்கிப்பேட்டை
இங்கு முதலில் காலடி எடுத்து வைத்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். அடுத்து டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானது. போர்ச்சுக்கீசியர் காலத்தில் போர்ட்டோ நோவா என்று அழைக்கப்பட்ட இந்நகர் ஆங்கிலேயர் வசம் வந்த பிறகு பரங்கிப்பேட்டை என மாறியது. இங்கு வாழும் இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் கடல் வணிகம் செய்பவர்கள். மாலுமியார் அரைக்காசு நாச்சியார், ஹபீஸ் மிர் சாஹிப், செய்யது சாஹிப் ஆகிய இறையடியார்களின் பெயரிலான தர்காக்கள் மிக முக்கியமானவை.
தில்லை காளி கோயில்
மிகப் பழமையான கோயில் கடலூர் நகரின் வட திசை எல்லையில் இது அமைந்துள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் ஆண்ட கப்பேருஞ்சன் என்ற மன்னனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. பக்தர்கள் நாடும் நற்கோயில்.
பஞ்ச சபைக் கோயில்கள்
சிவபெருமான் தன் பிரபஞ்ச நடனத்தை திருவாலங்காட்டில் இரத்தின சபையிலும் (சிற்சபை) சிதம்பரத்தில் உள்ள பொற்சபையிலும் மதுரையில் உள்ள வெள்ளியம்பலத்திலும் திருநெல்வேலியில் உள்ள தாமிர சபையிலும் குற்றாலத்தில் உள்ள சித்திர சபையிலும் ஆடினார். இச்சபைகள் உள்ள கோயில்களே பஞ்ச சபைக் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன.
விருத்தாச்சலம்
மணிமுத்தாறு நதிக்கரையில் அமைந்த நகரம். இங்குள்ள விருத்தகிரிஸ்வரர் ஆலயம் பழமை வாய்ந்தது. மாசிமகத் திருவிழாவில் யாத்ரிகர்கள் மணிமுத்தாறு நதியில் புனித நீராடுவர். கடலூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது.
சிதம்பரம் நாட்டியாஞ்சலி
நடனக்கலையின் தலைவன் நடராஜன். அவன் ஆடும் நாட்டியம் பிரபஞ்ச இயக்கம். இதன் அடிப்படையில் நடராஜபெருமானுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடத்தப்படும் விழா இது. இந்த விழா மகா சிவராத்திரி ஐந்து நாட்களும் நடைபெறுகிறது. பல நடனக் கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் நாட்டியத்தின் மூலம் நடனக் கடவுளுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
கடலூர் தீவு :
உப்பனாற்றிற்கும், கடலூக்கும் நடுவில் ஒரு தீவு இருக்கிறது. இந்தத் தீவிற்குக் கிழக்கு எல்லையாகக் கடலூம், வடக்கு எல்லையாகக் கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதியும், மேற்கு-தெற்கு எல்லைகளாகக் உப்பனாறும் அமைந்துள்ளன. இந்தக்கழிமுகத் தீவு 'அக்கரை' என அழைக்கப்படுகிறது. இந்த அக்கரைத் தீவில் சோணங்குப்பம், சிங்காரத் தோப்பு, கோரி என்றும் மூன்று சிற்றுர்கள் உள்ளன. இந்தத் தீவு சென்று காணத்தக்கதாகும்.போக்குவரத்திற்குப் படகு வசதி உண்டு.
பஞ்சபூதத் தலங்கள்
சிவபெருமானின் ஐந்து பண்பு நலன்களை எடுத்துக் காட்டும் ஆலயங்களே பஞ்சபூதத் தலங்கள் எனப் புனிதமாகக் கருதி மக்கள் வழிபடுகிறார்கள். சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவானைக்காவல் மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி ஆகியவையே பஞ்சபூதத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
செயிண்ட் டேவிட் கோட்டை :
கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதிக்கும், அதன் வடகிளைக்கும் நடுவே, தேவனாம்பட்டினம் என்னும் சிற்றுர் உள்ளது. இந்தத் தேவனாம் பட்டினத் தீவில் கடற்கரையையொட்டி கெடிலத்தின் வடகரையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 'செயிண்ட் டேவிட் கோட்டையைப் பாழடைந்த நிலையில் இன்றும் காணலாம். கோட்டை உள்ள தீவின் முக்கியத்துவத்தை டச்சுக்காரர்களே முதலில் உணர்ந்தனர். இக்கோட்டை 1683-ஆம் ஆண்டு கட்டப்பட்டு பின்னர் விரிவுபடுத்தப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் :
1920-ஆம் ஆண்டு மீனாட்சிக் கல்லூரியாக இருந்தது. தமிழரின் மேன்மையை உலகுக்கு எடுத்துக்காட்ட தமிழ்துறை ஏற்படுத்தப்பட்டது.1929-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக உயர்ந்தது. ராஜா சர்.முத்தையாச் செட்டியாரின் தந்தை அண்ணாமலை செட்டியாரால் உண்டாக்கப்ட்டது. அவர் பெயரில் அமைந்த நகரில் கடற்கரைக்கு 5 கி.மீ தொலைவில் அமைதியான, இயற்கையோடு இயைந்த சூழலில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து 2 பர்லாங் தூரத்தில் இருக்கிறது. 1,25,000 மேற்பட்ட நூற்களைக் கொண்ட பெரிய நூலகம் இருக்கிறது. இங்குள்ள தமிழ்துறையில் தமிழகத்தின் சிறந்த தமிழறிஞர்கள் அனைவரும் பணியாற்றியுள்ளனர். எ-கா பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சோமசுந்தர பாரதியார், சதாசிவ பண்டாரத்தார், போன்றோர் தமிழிசை விழிப்புணர்விலும், இந்திப் போராட்டத்திலும் பெரும்பங்கு இப்பல்கலைக் கழகம் வகித்தது.
நெல்லிக்குப்பம் :
முஸ்லீம்கள் நிறைந்த ஊர். இங்கு ஈ.ஐ.டிபாரி நிறுவனத்தாரால் நடத்தப்படும் சர்க்கரை ஆலை ஒன்றும், மிட்டாய் தொழிற்சாலையும் உள்ளன. கரும்பு உற்பத்தி இவ்வட்டத்தில் அதிகம். அதுபோல வெற்றிலை, அகத்திக்கீரை, அவுரிஎண்ணெய் முதலியவை இங்குப் பெயர் பெற்றவை.
பரூர் :
விருத்தாசலத்திற்கு வடமேற்கில் உள்ளது இவ்வூர். இங்குள்ள சர்சில் மாதாவின் சிலையும், கிறிஸ்துவின் சிலையும் மணிலாவிலிருந்து வரவழைக்கப்பட்டவை. இவை மரத்தாலானவை. சிறப்பாக வண்ணம் தீட்டப்பெற்றவை, அதில் இந்திய அணிகலன்கள் இருப்பது சிறப்பு.
சிப்காட் தொழிற்கூடம் :
சிதம்பரம்-கடலூர் சாலையில், கடலூர் புதுநகரிலிருந்து 9கி.மீ தொலைவில், சுமார் 460.33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
கடலூர் புதுநகர் :
சென்னைக்கு நேர் தெற்கே 100 மைல் தொலைவிலுள்ளது. மஞ்சக் குப்பம்,புதுப்பாளையம், தேவனாம்பட்டணம், வில்வராய நத்தம், வன்னியர் பாளையம் முதலிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டது. கெடிலம் ஆறு கடலூர் நகரைச் சுற்றியும், நகருக்கு நடுவேயும் ஓடுகிறது. நகருக்கு அருகில் கடலில் கலக்கிறது. மாவட்டத் தலைநகராக இருப்பதால் நீதிமன்றம், கல்வி, மருத்துவ நிலையங்கள் அரசு அலுவலகங்கள் இங்குள்ளன. வணிகத் தலமாகவும் இது இருந்து வருகிறது.