.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 9 December 2013

எங்கே இருக்கிறது மகிழ்ச்சி?


 மகிழ்ச்சியை வளருங்கள்

        நன்கு மனம் விட்டுப் பலமாகச் சிரியுங்கள். உலகம் உங்களுடைய சிரிப்பில் பங்கு எடுத்துக் கொள்ளும். நீங்கள் அழுது பாருங்கள், உங்களுடைய அழுகையில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் ஒருவர்தான் அழுது கொண்டிருப்பீர்கள். உங்களுடைய அறிவின்மையும், வருத்தமும் இந்த உலகத்திற்குத் தேவையில்லாதவைகள். உங்களுடைய வருத்தத்தின் பளுவைச் சுமக்காமலேயே மற்றவர்கள் தாங்க முடியாத வருத்தத்தில் ஆழ்ந்து போயிருக்கிறார்கள். ஆகையால் மகிழ்ச்சியைப் பற்றிப் பேசி அதை மற்றவர்களிடம் பரப்ப முயற்சி செய்யுங்கள். உலக மக்களின் சந்தோசத்தை வளர்ச்சியில் ஈடுபடுங்கள்.

-வில்காய்


மகிழ்ச்சியைக் கொடுங்கள்

       மகிழ்ச்சியை பற்றி நினையுங்கள். மகிழ்ச்சியாக இருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியை நம்புங்கள். பழக்கத்தின் மூலம் மகிழ்ச்சியை நிலை நிறுத்துங்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுங்கள்.

-நார்மன் வின்சென்ட் பீல்



மகிழ்ச்சியை அடைய

      மகிழ்ச்சியை நாடிச் செல்வதில் பாதி மக்கள் தவறான பாதையில் செல்கின்றனர். எதையும் தன் சொந்தமாக்கிக் கொள்வது, பிறர் உழைப்பை அடைவது இவைதான் மகிழ்ச்சி என்று கருதுகின்றனர். மகிழ்ச்சி என்பது பிறருக்குத் தருவதில், பிறருக்காக உழைப்பதில்தான் இருக்கிறது. பெறுவதை விட தருவதுதான் மகிழ்ச்சி அடைவதற்குள்ள ஒரே வழி. அது ஒன்றேதான் அகலமான சீரான வெற்றிப்பாதை.

-ஹென்றி டிரம்மண்ட்


மகிழ்ச்சியை அனுபவிக்க

       பெரிய பணக்காரனாக வரவேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறு கிடையாது. வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழவேண்டும் என்று ஆசைப்படுவதிலும் சிறிது கூட தவறு கிடையாது. ஆனால் ஒருவன் சேர்க்கும் செல்வம், அனுபவிக்கும் மகிழ்ச்சி மற்ற யாருக்கும் சிறிது கூட துன்பம் தராமலிருக்கும்படி  பார்த்துக் கொள்ள வேண்டும்.

-ஆண்ட்ரூ கார்னீஜி

 
   வெற்றி என்பது நம்முடைய திறமை, வாய்ப்பு முதலியவற்றைப் பொறுத்து அமைவதல்ல...நாம் எதிர்பார்க்கிறபடி அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும் என்று தொண்ணூறு சதவிகிதம் ஆக்கப்பூர்வமான மனோபாவத்துடன் செயல்படுகிறவர்களுக்கே வெற்றி கிடைக்கும். நல்லதே நடக்கும் என்ற உறுதியான மனோபாவம்தான் உண்மையில் ஒவ்வொருவரும் வெற்றி பெற அடிப்படை ஆதாரமாக இருக்கிறது.

- ஜார்ஜ் வெயின் பர்க்

      சோம்பல் ஒரு வீட்டின் உள்ளே நுழையும்போதே மற்ற எல்லாக் கெட்ட குணங்களுக்கும், துன்பங்களுக்கும் கதவைத் திறந்து வைக்கின்றன.

-அலெக்ஸாண்டர் டூமாஸ்

 
      மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர்களாக இருங்கள். பிறர் நம்பும்படியாக உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.

 -எஸ்.சர்மா


      தீமைகள் உங்களை அணுகாமலிருக்க, உங்கள் எண்ணங்களில் தீமைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

-சாக்ரடீஸ்

      மற்றவர்களுக்கு கெடுதல் செய்வதை ஒரு பொழுது போக்காக வைத்துக் கொள்ளாதீர்கள்.

 -வாலியா

 

      உங்கள் அம்மாவிடம் சொல்லிப் பெருமைப்பட முடியாத எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள்.

-எஸ். சர்மா

      நாம் நினைப்பதை விட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி நம்மிடம் அதிகமாகவே இருக்கிறது.

-ஸ்டேபிள்ஸ்


      திட்டவட்டமான இலட்சியமில்லாதவர்கள்தான், இலக்குகள் உள்ளவர்களுக்காக என்றென்றும் வேலை செய்பவர்களாக வாழ்கின்றனர்.

- பிரையன் டிரேசி


      நீங்கள் செயல்படுகிறவர்கள் என்றால், அறிவைத் தேடிப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்கிறவராக இருக்க வேண்டும். ஆர்வமாக வாழ வெண்டும்.

 -ஹெச்.ஹில்


      நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்குத் தொடர்ந்து கெடுதல் செய்வதன் மூலம், மன்ப்பூர்வமான வாழ்க்கை அமையாது. சேவை செய்வதன் மூலம்தான் மனப்பூர்வமான வாழ்க்கை அமைய முடியும்.

-எஸ். சர்மா

Sunday, 8 December 2013

உண்ணும் உணவு : ரமண மகரிஷி


முன்பொருமுறை திருமதி பிக்காட் என்கிற ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் ரமணாசரமம் வந்திருந்தார். அங்கு ரமண மகரிஷி சந்தித்து அவரிடம் உணவு முறைகளை பற்றி சில கேள்விகளை எழுப்பினார். அப்போது நடந்த சுவையான உரையாடல் இங்கே, தமிழில்:

பிக்காட்: ஆன்ம ஞானம் பெற விழையும் சாதகனுக்கு எந்த வகையான உணவினை பரிந்துரைக்கிறீர்கள்?

ரமணர்: சாத்வீக உணவு – அதுவும் குறைந்த அளவில்.

பிக்காட்: சாத்வீக உணவு என்றால் என்ன சொல்ல முடியுமா?

ரமணர்: ரொட்டி, பழம், காய், பால் போன்றவை…

பிக்காட்: வட இந்தியாவில் சிலர் மீன்களை உண்கிறார்களே, அது சரியா?
(இந்த கேள்விக்கு பதிலேதும் இல்லை)


பிக்காட்: ஐரோப்பியர்களான எங்களுக்கு எங்கள் ஒருவித உணவு பழகிவிட்டது. அதை மாற்றினால், உடலும் அதனால்
மனமும் சக்தியிழந்து விடுகிறது. உடல் நலம் பேணுவது அவசியம் அல்லவா?

ரமணர்: நிச்சயமாக. உடல் சக்தியிழக்கையில், வைராக்கியம் என்னும் சக்தியை மனம் பெறுகிறதே!

பிக்காட்: ஆனால், நாங்கள் மனவலிமை இழக்கிறோமே?

ரமணர்: மனவலிமை என்று எதைச் சொல்கிறீர்கள்?

பிக்காட்: உலகத்தின் பந்தங்களில் இருந்து விடுபடும் சக்தியினை சொல்கிறேன்.

ரமணர்: உண்ணும் உணவைக் கொண்டே மனம் வளர்கிறது. அதனால் உணவு சாத்வீகமாக இல்லாவிட்டால் அதனால்
மனமும் பாதிக்கப்படுகிறது.

பிக்காட்: நிஜமாகவா, அப்படியென்றால், நாங்கள் எப்படி சாத்வீக உணவுக்கு வழக்கப்படுத்திக்குள்ளது.

ரமணர்: ( அருகில் இருக்கும் இவான்ஸ்-வெண்ட்ஸ் என்பவரைக் காட்டி ) நீங்கள் எங்கள் உணவை உண்ணுவதால், ஏதேனும் சங்கடம் இருக்கிறதா?
இவான்ஸ்-வெண்ட்ஸ்: இல்லை, ஏனெனில் அது எனக்கு பழகிவிட்டது.

பிக்காட்: பழக்கம் இல்லாதவர்களுக்கு என்ன சொல்வீர்கள்?

ரமணர்: பழக்கம் என்பது சூழ்நிலைக்கேற்ப தன்னை தயார் செய்து கொள்வதுதான். இங்கே மனம் தான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது. மனம் சில வகையான உணவுகளை சுவையானதாகவும், நல்ல உணவாகவும் நினைத்துக்
கொண்டு இருக்கிறது.

பிக்காட்: புலால் உணவுக்காக உயிர்கள் கொல்லப்படுகிறதல்லவா?

ரமணர்: யோகிகளுக்கு அஹிம்சையே தலையாய கொள்கை.

பிக்காட்: செடிகளுக்கும், அதில் காய்க்கும் காய், பழங்களுக்கும் உயிர் இருக்கிறது அல்லவா?

ரமணர்: நீங்கள் உட்கார்ந்திருக்கும் மேடைக்கும்தான் உயிர் இருக்கிறது!

பிக்காட்: நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புலால் அற்ற உணவுக்கு பழகிக் கொள்ளலாமா?

ரமணர்: அதுவே வழி.

புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான்.........



ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.


முதல் கைதியின் ஆசை:நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.


இரண்டாவது கைதியின் ஆசைகள் ;நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.


மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.


ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு,பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.


மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,''என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,''என்ன சொல்கிறாய்,நீ?அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்! ''கைதி அமைதியாகச் சொன்னான்,''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.

அவசர கால முதலுதவி முறைகள்...!




வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.


மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :



உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.


வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.


தலைவலி :


கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.


வயிற்றுப் பிரச்னைகள் :



தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.


கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.


வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.

பாரதி இதைப் பார்த்திருந்தால்..... கவிதை!


பாரதி இதைப் பார்த்திருந்தால்
 தலைப்பாகையை கழற்றிவிட்டு
 தண்டவாளத்தில் படுத்திருப்பான் !


கோவா கடற்கரை
 அலைகளில் இருக்கும் கேவலம்
மெரினா கடற்கரை
 அலைகளிலும் கலக்கிறதா ?


காதலர் என்ற பெயரில்
 இந்த சதைப் பிராணிகள் சிலது
 தற்கொலை செய்து கொள்கின்றன.
மரணம் இவர்களால்
 அசிங்கப்பட்டுப் போகிறது.


அலைகள் விளையாடி
 ஆனந்தம் நிறைந்த
 மெரினா கடற்கரையா ?
காம விளையாட்டுச்
 சிற்பங்கள் நிறைந்த
 கஜுராஹோ கோயிலா ?


 ' காதாலாகி... கசிந்துருகி...
கண்ணீர் மல்கி'
என்று எழுதியவன்
 எழுதிய விரல்களை
 வெட்டிக் கொள்வான்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top