வறட்டு கவுரவமும் பிடிவாத மும் ஊறிப்போன மனிதர் கள். அவற்றுக்காக ரத்தம் சிந்தவும் சிந்தவைக்கவும் தயங்காதவர்கள். இவர்களது கதைதான் மதயானைக் கூட்டம்.
சாவு வீட்டின் சடங்குகளைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியபடி தொடங்குகிறது படம். நடனமாடிக் கொண்டிருக்கும் திருநங்கைள் பேசும் வசனங்களினூடே பாத்திரங்களும் பின்னணியும் சொல்லப்படுகின்றன.
ஊர்ப் பெரிய மனிதருக்கு இரண்டு மனைவிகள். இரு குடும் பங்களுக்கிடையே இதனால் ஏற்படும் பகைமையும் வன்முறை வெறியாட்டமும்தான் கதையின் மையம்.
சாவு வீட்டிலிருந்து படத்தைத் தொடங்கும் புது இயக்குநர் விக்ரம் சுகுமாரன் கவனத்தைக் கவர்கிறார். பாத்திரப் படைப்பிலும் நிகழ்ச்சிகளைக் கட்டமைத்த விதத்திலும் முத்திரை பதிக்கிறார். வறட்டு கவுரவம், வீம்பு, சாவுச் சடங்குகளின்போது ஏற்படும் கடுமையான மனத்தாங்கல்கள், வன்முறையை அந்தச் சமூகம் அணுகும் விதம் ஆகியவை வலுவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. நாயகனின் அம்மா கொல்லப்படும் காட்சியில் தெறிக்கும் வன்மம் அச்சமூட்டக்கூடியது. வசனங்கள் இயல்பாக உள்ளன. கறுப்பு நிறத்தைக் கேவலப்படுத்தியே பழக்கப்பட்ட தமிழ் சினிமாவில் அதற்கு எதிரான குரலை நாயகன் எழுப்புவது ஆறுதல் அளிக்கிறது.
படத்தின் தொடக்கம் ஆவணப் படத்தின் தன்மை கொண்டதாக உள்ளது. இரண்டாம் பாதியில் தொய்வு ஏற்படுகிறது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசை ரகுநந்தன். பின்னணி இசையிலும் பாடல்களிலும் மண் வாசனை நிறைவாக உள்ளது.
நாயகன் கதிர் நன்றாக நடித்தி ருக்கிறார். முதல் மனைவியாக வரும் விஜி சந்திரசேகரின் நடிப்பு அற்புதம். அவர் அண்ணனாக வரும் வேல ராமமூர்த்தி மிடுக்கான தோற்றமும் சிறப்பான நடிப்புமாக மனதில் நிற்கிறார். கோழைத் தனமாகக் கொலை செய்த பிறகும் தன் நோக்கம் நிறைவேறிய திருப்தியில் அவர் கை, மீசையை முறுக்கும் காட்சி அபாரம்.
ஓவியா பாத்திரம் கொலை வெறிக்கு நடுவே மென்மையான இளைப்பாறலுக்குப் பயன்பட்டி ருக்கிறது. பொலிவான தோற்றத்தா லும் பளிச்சிடும் புன்னகையாலும் ஓவியா கவர்கிறார்.
ரகு தருமனின் ஒளிப்பதிவு குறிப் பிடத்தக்கது. இரவுக் காட்சிகள் இயல்பான வெளிச்சத்தில் தெளிவாகப் படமாக்கப்பட்டுள்ளன.
பிற்போக்குத்தனங்களை விமர்சனப் பார்வை இல்லாமல் அணுகுவதுதான் படத்தின் மிகப் பெரிய பலவீனம். ஒரு சமூகத்தை அதன் நிறை குறைகளோடு சித்தரிப்பதில் தவறில்லை. ஆனால் சிக்கலான சாதி அமைப்பும் வெவ்வேறு சாதியினருக்கிடையே கவலைக்குரிய உறவுகளும் உள்ள தமிழ்ச் சமூகத்தில் இது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைப் பற்றிக் கவலை ஏற்படுகிறது. சாதிப் பெருமிதத்தை மட்டுமின்றி ‘வீரத்தையும்’ பறைசாற்றுகிறது இப்படம். இது இந்தச் சாதியினரிடமும் பிற சாதியினரிடமும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.
பண்பாட்டுக் கூறுகளின் யதார்த்தமான சித்தரிப்பு, வலுவான பாத்திரப் படைப்புகள், வசனங்கள், நேர்த்தியான நடிப்பு ஆகியவை படத்தின் வலுவான அம்சங்கள். சாதியக் கூறுகளை அப்பட்டமாக முன்வைப்பது, திரைக்கதையின் தொய்வு ஆகியவை பலவீனங்கள்.
மதயானைக் கூட்டம் அதன் குறைகளை மீறி, மண் சார்ந்த வலுவான படமாக அமைந்துள்ளது.