.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 31 December 2013

தமிழ் சினிமா 2013 : மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த படங்கள்



 தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, விமர்சகர்களாலும் மக்களாலும் 10 படங்கள் நிராகரிப்பட்டது. மணிரத்னம், அமீர், பாரதிராஜா, செல்வராகவன், ராஜேஷ் போன்ற முக்கியமான இயக்குநர்களே 2013ல் சறுக்கியது தான் அதிர்ச்சி.

'கடல்', 'ஆதிபகவன்', 'அன்னக்கொடி', 'நாகராஜ சோழன்', 'அலெக்ஸ் பாண்டியன்', 'மரியான்', 'தலைவா', 'நய்யாண்டி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'இரண்டாம் உலகம்' ஆகிய படங்கள் 2013ல் படுதோல்வியை சந்தித்தன.

மக்களை மூழ்கடித்த 'கடல்'

'நெஞ்சுக்குள்ளே' பாடல் மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டினார் மணிரத்னம். படத்தின் நாயகன், நாயகி உள்ளிட்டோரின் லுக்கை போஸ்டராக வைத்து INTRODUCING GAUTAM KARTHIK, INTRODUCING THULASI என ஒவ்வொன்றாக வெளியிட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.

மணிரத்னத்தின் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, கார்த்திக்கின் மகன் ஹீரோ, ராதாவின் மகள் ஹீரோயின், மீண்டும் அரவிந்த்சாமி, வில்லனாக அர்ஜுன் என படத்தின் முதல் காட்சிக்கு ஞாயிற்று கிழமை மாலை மெரினாவில் இருக்கும் கூட்டம் போல அலை மோதியது. தியேட்டருக்குள் வந்த அனைவரையும் மூழ்கடித்து, 'இனிமேல் என்னை நம்பி வருவியா' என்று திணறடித்தார். முத்து கிடைக்கும் என நம்பி வந்தவர்களுக்கு கிளிஞ்சல்கள் அளித்து அனுப்பினார்கள்.

சுனாமி வந்த அடுத்த நாள் மெரினா பீச் எப்படி இருந்ததோ அப்படி தான் படத்திற்கு இரண்டாம் நாள் கூட்டம் இருந்தது. அந்தளவிற்கு மக்களால் முற்றிலும் நிராகரிப்பட்டது. இப்படத்தினை வாங்கி பாதிப்படைந்தது ஜெமினி நிறுவனம். அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை.

'பருத்தி வீரன்' இயக்குநரா 'ஆதிபகவனை இயக்கினார்?

இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் யுவன் என அனைத்து முன்னணி கலைஞர்களும் இணைந்து ரசிர்களை ஏமாற்றிய படம் 'ஆதிபகவன்'. நீண்ட மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் ஒரு புகைப்படத்தைக் கூட வெளியிடாமல் படத்திற்கு எதிர்பார்ப்பை கூட்டினார்கள். பத்தாக்குறைக்கு பவளக்கொடியாய் நீதுசந்திரா வேறு அவ்வப்போது பேட்டிகளில் ‘ஆதிபகவன்’ படம் குறித்து சிலாகித்தார்.

படத்தின் போஸ்டர்களில் கூட ’வில்லன் ’ஜெயம் ரவியின் படத்தை வெளியிடவில்லை. 2007ல் 'பருத்தி வீரன்' இயக்கிய அமீர் இயக்கத்தில் 6 ஆண்டுகள் கழித்து வெளிவந்தது 'ஆதிபகவன்'. படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே கேட்ட கேள்வி 'நிஜமாவே அமீர் இயக்கிய படமா இது?' என்பது தான்.

இமயத்தை கொடியில் தொங்க வைத்த 'அன்னக்கொடி'

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் 'அன்னக்கொடி'. தேனியில் படப்பூஜை போடப்பட்ட போது அமீர் நடிப்பதாக இருந்தது. ஆனால், அதற்கு பிறகு நடைபெற்ற பிரச்சினையால் கார்த்திகா, மனோஜ் நடிப்பில் வெளியானது.

மாமனாரின் காமவெறி, ஆண்மையற்ற கணவன் என சொதப்பலான கதையை 'அன்னக்கொடி'யாக எடுத்திருந்தார். நாம எதை படமாக எடுத்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று பாரதிராஜா நினைத்து விட்டார் போல.

'அன்னக்கொடி' வெளியான முதல் நாள் மாலையே கொடியில் ஒரு துணி கூட இல்லை. தப்பாக

அல்வா கிண்டிய மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணி

மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணியில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்ற 'அமைதிப்படை' படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்தது 'நாகராஜ சோழன்'. 'அமைதிப்படை' படத்தில் இருந்த சுவாரசியமான காட்சிகள் எதுவுமே 'நாகராஜ சோழன்' படத்தில் இல்லாதது பெரிய குறை. ‘அமைதிப்படை’யில் கிண்டிய அல்வாவை மறுபடி கிளறி மக்களுக்கு கொடுத்தார்கள்.. பழைய அல்வா அல்லவா.. புளித்துவிட்டது.

விளம்பரத்தை நம்பி களமிறங்கிய அலெக்ஸ் பாண்டியன்

பட்டித் தொட்டி எங்கும் விளம்பரப்படுத்தி, பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி விட வேண்டும் என்ற நினைப்புடன் ஸ்டூடியோ க்ரின் 'அலெஸ் பாண்டியன்' படத்தினை வெளியிட்டது.

கார்த்தி, அனுஷ்கா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்தனர். அரிவாளால் சுமோ டயரை வெட்டுவது, சுமோ வானுயர்விற்கு பறப்பது, டிரெய்னின் மீது வில்லன் ஆட்கள் துரத்துவது, சந்தானத்தின் டபுள் மீனிங் வசனங்கள் என படம் பார்க்கும் அனைவரையும் ரத்தக்களரியாக்கி ஒட வைத்தது.

பாட்டெல்லாம் ஹிட்டு.. படம்..? கடலோடு கூட்டு சேர்ந்த 'மரியான்'

ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'மரியான்' வெளியானது. 'நீ வரணும் பனி', 'காசா இல்லடா...' என கலங்கடித்த தனுஷின் நடிப்பு, 'மரியான்.. உனக்காக காத்துட்டுருப்பேன்டா', 'வந்துரு வந்துரு' என்று அசத்தலான பார்வதி நடிப்பு, 'இன்னும் கொஞ்சம் நேரம்', 'எங்கே போன ராசா', 'கடல் ராசா நான்' என ஏ.ஆர்.ராஹ்மானின் துள்ளலான இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருந்தாலும் சொதப்பலான திரைக்கதை அமைப்பால் தோல்வியடைந்தது மரியான்.

2013ல் ஆப்பிள், ஐ-டியூன்ஸ் தளத்தில் சிறந்த தமிழ் இசை ஆல்பமாக தேர்வானது 'மரியான்'

நமக்கும் எதிரிகள் இருக்கிறார்கள் என்று விஜய் உணர்ந்த 'தலைவா'

இயக்குநர் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம். 'நாயகன்' கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து, 'தலைவா' என்று படமாக்கினார்கள். விஜய்யின் போஸ்டர்கள் வெளியான போது, அரசியல் சார்ந்த படம் என்று பேச்சு நிலவியது.

'தலைவா' திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்று பெரும் சர்ச்சையில் கிளம்பியது. படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க போதிய போலீசார் இல்லை என்று தமிழக அரசு கூறியது. இறுதியாக தயாரிப்பாளர் செய்தியாளர்கள் மத்தியில் அழுதது, படத்தினை வெளியிட தமிழக அரசு உதவிட வேண்டும் என்று விஜய் வீடியோ மூலம் பேசியது உள்ளிட்ட பலதரப்பட்ட முயற்சிகளுக்கு பிறகு தான் ‘தலைவா’ வெளியானது.

படம் போதிய வரவேற்பையும் பெறவில்லை, வசூலையும் பெறவில்லை. தயாரிப்பாளருக்கு மட்டுமன்றி, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு நஷ்டத்தினை ஏற்படுத்தியது 'தலைவா'

தனுஷை பதற வைத்த 'நய்யாண்டி'


'வாகை சூட வா' இயக்குநர் சற்குணம் - தனுஷ் - நஸ்ரியா இணைப்பில் வெளியான படம் 'நய்யாண்டி'. நஸ்ரியாவின் சர்ச்சையால் படம் பரபரப்பானது. தேசிய விருது இயக்குநர் + தேசிய விருது நடிகர் கூட்டணி என்று நம்பி படத்திற்கு சென்றவர்களை நையாண்டி செய்தது நய்யாண்டி’

“சற்குணம் - தனுஷிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை” என்று ரசிகர்கள் நொந்தார்கள்.

இப்படத்தின் உச்சப்பட்ச காமெடியாக, ஓடாததால், படத்தை திரையரங்குகளிலிருந்து எடுத்த பிறகு, மலையாளத் தயாரிப்பாளர் ஒருவர் எனது கதையை திருடி படமாக எடுத்து விட்டார்கள் என்று போலீசில் புகார் அளித்தார்!

கோவம் வர்ற மாதிரி காமெடி செய்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா'


ராஜேஷ் - கார்த்தி - சந்தானம் இணைப்பில் வெளியான படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. தனது காமெடி படங்கள் மூலம், தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் ராஜேஷ். அவரே அந்த வட்டத்தை சுருக்கிக் கொண்ட படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'.

காமெடி என்கிற பெயரில் சந்தானத்தின் பேச்சு, 3 மணி நேர படம் என பல வகையில் பார்ப்பவர்களை இடைவேளையின் போதே கடுப்பேற்றியது படம்.

இருண்ட 'இரண்டாம் உலகம்'

செல்வராகவன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட 'இரண்டாம் உலகம்'. ஆர்யா, அனுஷ்கா நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். படம் தயாரிப்பிலேயே பல நாட்கள் இருந்ததால், ஹாரிஸ் ஜெயராஜ் மற்ற படங்களில் பிஸியாக, இறுதியில் அனிருத் பின்னணி இசையில் வெளியானது ‘இரண்டாம் உலகம்’.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, சொதப்பலான திரைக்கதையால் ஏமாற்றிய படம். கிராபிக்ஸ் காட்சிகளில் காட்டிய அக்கறையை திரைக்கதை அமைப்பில் காட்டியிருக்கலாம்.

ஹாரிஸ் ஜெயராஜ் மற்றொரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், "ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு பின்னணி இசையமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், பிரம்மாண்ட படம் எனக்கு பிடிக்கவில்லை. ஆகையால் தான் இந்த படத்திற்கு இசையமைத்தேன்" என்று பொறி வைத்து பேசி வியக்க வைத்தார்.

படம் பார்க்க வந்தவர்களை எல்லாம் இரண்டாம் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன் பேர்வழி என்று முட்டுச் சந்துக்குள் தான் கூட்டிச் சென்றார் செல்வராகவன். மூன்றாம் உலகம் விரைவில் என படத்தை முடித்து, "அய்யோ... மறுபடியும் முதல்ல இருந்தா..." என்று கேட்க வைத்தார்.

தமிழ் சினிமா 2013 : விளம்பரத்தை விரிவாக்கிய ட்விட்டர்...!!!



 தமிழ் திரையுலகை பொருத்தவரை 2013ல் படங்களை பிரபலப்படுத்தும் யுக்தியில் ட்விட்டர், யு-டியூப் மற்றும் ஃபேஸ்புக் தளங்கள் முக்கிய பங்காற்றி இருக்கிறன.


2012ல் ஆண்டை விட 2013ல் வெளியான பல்வேறு படங்களுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தனியாக கணக்கு தொடங்கப்பட்டது. அதில் படத்தைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன. இந்த முயற்சி பெரிய தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.


'ராஜா ராணி' படத்திற்கு என்று ஆரம்பிக்கப்பட்ட ட்விட்டர் கணக்கில், படம் வெளியாவதற்கு முந்தைய தினம், படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதனால் நயன்தாரா பெயர் இந்திய அளவில் முதல் இடத்தில் டிரெண்ட்டானது. இப்போட்டிகளால் நல்ல விளம்பரமும், படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங்கும் கிடைத்தது என்றால் மிகையல்ல.


'இரண்டாம் உலகம்', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'விஸ்வரூபம்', 'சேட்டை', 'நேரம்', 'சிங்கம் 2', 'தங்க மீன்கள்' உள்ளிட்ட பல படங்களுக்கு தனியாக ட்விட்டர் தளம் ஆரம்பிக்கப்பட்டது. ஃபேஸ்புக் தளத்தில் தனியாக ஆரம்பித்து, படத்தினை விளம்பரப்படுத்தினார்கள். 2013-ல் திரைப்படங்களுக்கு சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகரித்தது.


ட்விட்டர் தளத்தில் 'விஸ்வரூபம்' பட சர்ச்சையின் போது #ISupportKamal,


'தலைவா' பட சர்ச்சையின் போது #Thalaivaa மற்றும் டீஸர், டிரெய்லர் வெளியான போது உருவாக்கப்பட்ட டேக்குகள்,


'ஆரம்பம்' வெளியான போது #Arrambam, #BiggestBlockbusteroftheyearArrambam, #ArrambamCensorDay


 உள்ளிட்ட பல டேக்குகள் இந்திய அளவில் டிரெண்ட்டானது.


இவ்வாறு சமூக வலைத்தளங்கள் படங்களை பிரபலப்படுத்தும் விதத்தில் பல விஷயங்களில் உதவியது. அஜித்தை விமர்சித்து விஜய் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட டேக்குகள், விஜய்யை விமர்சித்து அஜித் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட டேக்குகள் என அவப்பெயரும் சமூக வலைத்தளங்களால் வாரி வாரி வழங்கப்பட்டன.


2014ல் பெரியளவில் படங்களை பிரபலப்படுத்த சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

தமிழ் சினிமா 2013 : நெஞ்சுக்குள்ள குடியேறிய ரஹ்மான்



 2013ம் ஆண்டை பொருத்தவரை ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களே ஜொலித்திருக்கிறார்கள். மற்றவர்கள் மக்களின் மனதை வருடும் இசையை அளிக்கவில்லை.


மிகவும் குறைவான படங்களுக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், 2013ல் 'கடல்', 'மரியான்' ஆகிய இரண்டு படங்களின் பாடல்கள் மூலம் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இரண்டு படங்களுமே தோல்வியடைந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அப்பாடல்கள் மக்களால் இப்போதும் விரும்பிக் கேட்கப்பட்டு வருகிறது.


அதிலும், 'மரியான்' படத்தின் பாடல்கள் 'சிறந்த தமிழ் ஆல்பம்' என்று ஐ-டியூன்ஸ் தளத்தில் தேர்வாகி இருக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் தளத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார்.


ஏ.ஆர்.ரஹ்மானைத் தொடர்ந்து அனிருத் இசைக்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. 'எதிர்நீச்சல்', 'வணக்கம் சென்னை' ஆகிய இரண்டு படங்களின் இசை இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. 'எதிர்நீச்சல்' படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், "படத்திற்கு மிகப்பெரிய ஒப்பனிங் கிடைத்ததிற்கு அனிருத் இசை முக்கியமான காரணம்" என்று உளமாற பாராட்டினார். உண்மை நிலவரமும் அதுவே.


அது போலவே, 'வணக்கம் சென்னை' படத்திற்கும் பெரிய பலமாக அமைந்தது அனிருத் துள்ளல் மிகுந்த இசை. ஒரு டி.வி நிகழ்ச்சியில் “இசைக்கு இறையருள் தேவை என்பார்கள். என்னை பொருத்தவரை பாடலுக்கான களத்தினை கேட்டு விட்டு நான் அந்த மூடுற்கு போய் விடுவேன். அதான் இசை அதற்கு ஏற்றார் போல் இருக்கிறது” என்று அனிருத் கூறினார்.


'எதிர் நீச்சல்' படத்தில் இடம்பெற்ற "பூமி என்னை சுத்துதே" என்ற பாடல் எஃப்.எம்களில் அதிக முறை ஒலிபரப்பப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றது. 4000 முறைக்கும் மேல் அப்பாடல் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.


'தங்கமீன்கள்' படத்தின் 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்', 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தின் 'மெல்ல சிரித்தால்' உள்ளிட்ட சில பாடல்கள் மட்டுமே யுவன் இசையில் வரவேற்பை பெற்றன. 'தலைவா' படத்தில் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா', 'உதயம் NH4' படத்தின் 'யாரோ இவன்' உள்ளிட்ட சில பாடல்கள் மட்டுமே ஜி.வி.பிரகாஷ் இசையில் வரவேற்பை பெற்றன. படத்தின் மொத்த பாடல்களுக்கும் வரவேற்பு கிடைக்கும் வாய்ப்பு இருவருக்குமே அமையவில்லை. 'என்றென்றும் புன்னகை' படத்தின் இசை மூலம் ஹாரிஸ் ஜெயராஜ் இளைஞர்கள் மத்தியில் பேசப்பட்டார்.


சந்தோஷ் நாராயணன் இசையில் 'சூது கவ்வும்' படத்தின் 'காசு பணம் துட்டு மணி மணி' பாடல் வரவேற்பை பெற்றது. அவரது பின்னணி இசை பலரது கவனத்தை ஈர்த்தாலும், பாடல்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு இன்னும் அவர் இசையமைக்கவில்லை.


2013ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் ஆகியோருக்கு முக்கியமான ஆண்டாகவும், யுவன், ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட மற்ற இசையமைப்பாளர்களுக்கு பேர் சொல்லும் ஆண்டாக அமையவில்லை.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அழைப்பிதழ்...?




என்னுடைய கே. எம் இசைப் பள்ளியில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளார்இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மான்.


கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.


அப்போது பேசிய அவர், கேரளத்தினரும் என்னுடைய இசைப் பள்ளியில் சேரலாம். ஏ.ஆர். ரஹ்மான் இசை என்பது உலகளாவிய ஒரு மொழியாகும்.


எனவே, அதை தழுவிக்கொள்ள ஒவ்வொரு இசைப் பிரியர்களுக்கும் உரிமை உண்டு.


இந்த பள்ளியின் சர்வதேச நிர்வாகிகளிடம் கலந்துபேசி ஆலோசித்து, இங்கு கல்வி பயிலும் மாணவிகள் சென்னையில் உள்ள கே.எம்.இசைப் பள்ளியில் சேர்ந்து இசையினை பயில தேவையான அனைத்தையும் செய்வேன் என்று கூறியுள்ளார்.

‘ஜில்லா’வில் கலக்கும் ஜீவா...!!!



ஜில்லா படத்தில் விஜய்யுடன் ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடிக்கிறாராம் ஜீவா.

விஜய், மோகன்லால் நடித்திருக்கும், ‘ஜில்லா’ இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் ஜெட் வேகம் பிடித்திருக்கிறது.

சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படத்தை நேசன் இயக்கியிருக்க, டி.இமான் இசை அமைத்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, படத்தின் டிரெய்லர் ஜனவரி 1ம் தேதி  ரிலிசாகவிருக்கிறது.

அத்துடன் இந்தப் படத்தில் ஒரு ஹைலைட் விஷயமாக விஜய்-யுடன் ஜீவா-வும் ஒரு பாடல் காட்சியில் தோன்றி ஆடியிருக்கிறாராம்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top