சாதனைகளும் சோதனைகளும் நிறைந்ததே வாழ்க்கை. 2013ஆம் ஆண்டில் பெண்ணுலகம் எத்தனையோ இன்னல்களைச் சந்தித்தாலும் கல்லிடைப் பூக்களாகச் சில சாதனைகளும் மலரத்தான் செய்தன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.
நான் மலாலா பாகிஸ்தானில் பெண் கல்விக்காக சாவின் விளிம்பு வரை சென்று வந்த மலாலா யூசப் ஸாய் என்ற சிறுமி நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். தலிபானின் கோரப் பிடிகளில் தத்தளித்த ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து வருபவள் இச்சிறுமி. அப்பகுதியில் இருக்கும் பெண்களுக்குக் கல்வி வேண்டி பிரச்சாரத்தை மேற்கொண்டதற்காக தலிபானால் சுடப்பட்டார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.
பொறுப்பான மாணவி சிலி நாட்டின் மாணவப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய கமிலா வல்லேஜோ, அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர்கள் பேருந்துகளில் தொங்கிக்கொண்டு பொறுப்பற்றுச் சுற்றி திரிபவர்கள் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ள நேரத்தில், சிலியின் மாணவ சமுதாயப் பெண் பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெண்களுக்கும் மாணவர் களுக்கும் பெருமையான விஷயம்.
வாய்மை வென்றது டெல்லி மாணவி பாலியல் வன்முறைக் குள்ளாக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தது. 2012ஆம் ஆண்டு டெல்லி யில் நடந்த 634ஆவது பாலியல் வன்முறையைத் தொடர்ந்து நாடெங்கும் எழுந்த போராட்ட அலைகளும் அதன் பின் நடந்த விரிவான முற்போக்கான விவாதங்களும் வரவேற்கத்தக்கவை. பாதிக்கப்பட்ட பெண்ணையே பாலியல் குற்றத்துக்குப் பொறுப்பாக்கும் போக்கி லிருந்து விலக, இந்த விவாதங்கள் உதவின. இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை சரியா, தவறா என்ற விவாதம் ஒரு புறமி ருக்க இத்தனை விரைவாகத் தீர்ப்பு கிடைத்தது பாலியல் வன்முறையைத் தீவிரமாகக் கையாள வேண்டும் என்ற அணுகுமுறையை உணர்த்துவதாக உள்ளது.
வலுவான சட்டம் 16 ஆண்டுகளுக் காலப் போராட் டத்திற்குப் பிறகு பணியிடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டம் பிப்ரவரி 26ஆம் தேதி இயற்றப்பட்டது. ராஜஸ்தானில் பன்வாரி தேவி என்றப் பெண் குழந்தை திருமணத்துக்கு, எதிராகப் பிரச்சாரம் செய்தவர். வேலை பார்த்த இடத்தில் அவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இதன் விளைவாக ஏற்பட்ட போராட்டங் களின் முடிவில் கிடைத்துதான் விசாகா தீர்ப்பு. அந்தத் தீர்ப்பில் உள்ள விதிமுறைகளின்படி சட்டம் இயற்றப்பட்டது.
பெண்களுக்கான வங்கி முதல் முறையாகப் பெண்களுக்கு தனி வங்கி திறக்கப்பட்டது. பெண்களுக்குப் பிரத்யேகமான திட்டங்கள் கொண்ட மத்திய அரசின் மஹிளா வங்கியின் கிளைகள் சென்னை உட்பட ஏழு நகரங்களில் திறக்கப்பட்டன. பெண்கள் கடனுக்காக வங்கியை அணுகும்போது அவர்களின் தேவையையும் நிலையையும் புரிந்துகொள்ளும் வகையில் இந்த வங்கிகள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரும் வேலைவாய்ப்பு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் அதிக அளவில் பெண்களைப் பணியமர்த்திய இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. ஆண்கள் குடிப்பது அல்லது வேலை தேடி நகரத்தை நோக்கிச் செல்வது போன்றவை இதற்க்கு காரணங்களாகக் கூறப்பட்டாலும் வேலைக்குச் சென்று தங்கள் வருமானத்தைத் தாங்களே ஈட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது.
நோபல் பெண் கனடாவைச் சேர்ந்த 82 வயதான ஆலி மன்ரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அவர், இளம் வயதிலிருந்தே எழுதி வருகிறார். அவரது கதைகள் சாதாரண மனிதனின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவு செய்பவை.
எழுத்துக்கு மரியாதை தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாகவும் பின்காலனிய எழுத்தாளராகவும் இருக்கும் 80 வயதான காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவக், பத்ம பூஷன் விருதைப் பெற்றார். இவரது, ‘ஒடுக்கப்பட்டவரால் (subaltern) பேச முடியுமா?’ என்ற கட்டுரையும் பிரெஞ்சு எழுத்தாளர் தெரிதாவின் ‘ஆப் கிராமட்டாலஜி’ நூலின் மொழியாக்கமும் மிகவும் பிரபலமானவை.
விளையாட்டிலும் முன்னணி இந்த ஆண்டு விளையாட்டுத் துறையில் பல பெண்கள் சாதனை படைத்துள்ளனர். பலரின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. ஆண்களுக்கு என்று கருதக்கூடிய விளையாட்டுகளிலும் பெண்கள் சாதித்திருப்பது பெருமைக்குரியதாக அமைகிறது. ஹாக்கியில் முதல் முறையாகப் பெண்கள் ஜூனியர் அணி ஜெர்மனியில் நடந்த உலகக் கோப்பையில் பதக்கம் வென்றது. இங்கிலாந்தை எதிர்த்து வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர் சுஷிலா சானு. பிகன் சாய், பூனம் ராணி, நவ்னீத் கௌர் உள்ளிட்டோர் அந்த அணியில் இடம் பெற்றிருந்தனர்.
ஒலிம்பிக் குத்துச் சண்டையில் பதக்கம் வென்ற ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையைக் கொண்ட மேரி கோமுக்கு இந்தியாவின் மூன்றாவது பெரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் வழங்கப்பட்டது.
வளர்ந்துவரும் பாட்மின்டன் வீராங்கனையான பி.வி. சிந்து உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண். விளையாட்டு துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருது ஆகஸ்ட் மாதம் இவருக்கு வழங்கப்பட்டது.
அர்ஜுனா விருது இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை கவிதா சஹல், மூத்த ஸ்குவாஷ் வீரரும், ஸ்குவாஷ் விளையாட்டை ஒலிம்பிக்கில் இணைக்கப் பிரச்சாரம் செய்தவருமான ஜோஷ்னா சின்னப்பா, தேசிய துப்பாக்கிச் சூடுதல் சாம்பியன் பட்டத்தை எட்டு முறையும், ஜூனியர் பட்டத்தை ஏழு முறையும் வென்ற துப்பாக்கி சுடும் வீராங்கனை ராஜ்குமாரி ரத்தோர், காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை நேஹா ரதி உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டது.
முதல் பெண் இயக்குநர் தென் இந்திய சினிமா துறையின் முதல் பெண் இயக்குநர் டி.பி. ராஜலட்சுமியின் நினைவைப் போற்றும் விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் கொண்டாடப்பட்டது.
அவர் 1936ஆம் ஆண்டில் ‘மிஸ் கமலா’ என்ற படத்தை இயக்கி, திரைக்கதை எழுதி, நடித்தும் இருக்கிறார். பெண்கள் நடிப்பதையே அங்கீகரிக்காத காலகட்டத்தில் தைரியமாகப் படத்தை இயக்கிய ராஜலட்சுமியின் துணிச்சல் பாராட்டத்தக்கது.
பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை இன்றுகூடக் கணிசமான அளவில் இல்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது, ராஜலட்சுமியின் சாதனையை உணர்ந்துகொள்ளலாம்.