டிசம்பர் 20ம் தேதி வெளியான படங்களுள் அஹ்மத் இயக்கத்தில் ஜீவா நடித்த 'என்றென்றும் புன்னகை' மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
ஜீவா, த்ரிஷா, வினய், சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் டிசம்பர் 20ம் தேதி வெளியான படம் 'என்றென்றும் புன்னகை'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, அஹ்மத் இயக்கியிருந்தார். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
டிசம்பர் 20ம் தேதி 'பிரியாணி' மற்றும் 'தலைமுறைகள்' படத்துடன் 'என்றென்றும் புன்னகை' வெளியானது. 'பிரியாணி' படத்திற்கு மிகப்பெரியளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டது. வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் என்பதால் முதல் வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது.
'பிரியாணி' படத்தோடு ஒப்பிடுகையில் 'என்றென்றும் புன்னகை' படத்திற்கு பெரியளவில் விளம்பரங்கள் செய்யப்படவில்லை. படத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக வெற்றி தான் என்று வெளியிட்டார்கள்.
முதல் வாரத்தில் கம்மியான அளவிற்கே கூட்டம் இருந்தது. ஆனால் படம் நன்றாக இருக்கிறது என்று விமர்சனங்கள் வர ஆரம்பித்ததால், கூட்டம் அதிகரித்தது.
இரண்டாம் வாரத்தை பொருத்தவரை, 'பிரியாணி' படத்தை விட மக்கள் கூட்டம் 'என்றென்றும் புன்னகை' படத்திற்கு அதிகரித்து இருக்கிறது. தற்போது பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. சென்னை மாயாஜால் திரையரங்கில், முதல் வாரத்தில் 14 காட்சிகள் திரையிடப்பட்ட 'என்றென்றும் புன்னகை', இரண்டாவது வாரத்தில் 28 காட்சிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளலான இசை, சந்தானத்தின் காமெடி, ஜீவா, த்ரிஷா இடையேயான காதல் காட்சிகள் என இளைஞர்களின் புன்னகையாக மாறியிருக்கிறது 'என்றென்றும் புன்னகை'