.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 23 August 2013

பழமொழிகளின் பழம்பொருண்மைகள்!

பழமொழிகளின் பழம்பொருண்மைகள்

 முன்னுரை
நாட்டுப்புறவியலின் சிறப்புக் கூறுகளுள் பழமொழிகளும் அடங்கும். நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் உணர்வின் வெளிப்பாடுகளாக விளங்கும். பழமொழிகள் சிலவற்றின் பொருண்மைகள் இன்று மாற்றமடைந்துள்ளன. பழமொழிகளுக்கு வழங்கும் தற்காலப் பொருண்மைகளின் தகுதிப்பாட்டையும், முற்காலப் பொருண்மைகளின் உறுதிப்பாட்டையும் விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

பழமொழிகளின் தற்கால, முற்காலப் பொருண்மைகள்


1.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமட்டான்
இப்பழமொழியைச் சொல்லிக்கொண்டே தவறு செய்யும் தம் குழந்தைகளை அடித்து நொறுக்கும் அம்மாக்களைப் பல இடங்களிலும் காணலாம். இப்பழமொழியைத் தவறாக உணர்ந்து கொண்டதன் விளைவு. உண்மையில் இங்கு "அடி" என்பது இறைவனுடைய திருவடியைக் குறிக்கிறது. இறையடி, திருவடி அருள் உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார் எனும் பொருண்மை இதன் முற்கால பொருண்மை எனலாம். அல்லது பெரியவர்களின் வாழ்த்தை வேண்டி அவர்களுடைய திருவடிகளில் விழுந்து வணங்குவதை இது குறிக்கிறது எனலாம்.

2. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
ஆற்றைக் கடக்க வேண்டியவன் மண் குதிரையிலா கடப்பான்? மனிதனுக்கு அறிவில்லையா? அதுவும் பண்டைத் தமிழருக்கு அறிவில்லை எனல் பொருந்துமா? அறிவில்லாமலா சொல்லி வைத்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதில் வரும் குதிர் - மண்மேட்டைக் குறிக்கிறது ஆற்றில் மண்/மணல் மேடுகள் இருக்கும். ஆற்றைக் கடப்பவன் அதில் நின்று தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் ஆற்று வெள்ளம் அவனை அடித்துக் கொண்டு போய்விடும். குதிரில் கால் வைத்தால் திடீரென்று கால் உள்ளே போய்விடும். எனவே ஆற்றைக் கடக்க நினைப்பவன் மண் குதிர் - ஐ நம்பக்கூடாது. எனவே இப்பழமொழியின் மூலவடிவம் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா என்று இருந்திருக்க வேண்டும்.

3. வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை.
நல்ல மனிதர்களை உருவாக்குவது ஆசிரியர் பணி. நல்ல மனிதர்களைக் காக்கத் தீயவர்களைச் சிறைபடுத்துதல் "போலீஸ்" என்கிற காவலர்களின் கடமை. நிலைமை இவ்வாறிருக்க, அவர்களை வக்கற்றவர் போக்கற்றவர் என எவ்வாறு கூறல் இயலும்?
"வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை:
போக்குக் கற்றவனுக்கு போலீஸ் வேலை"
வாக்குக் கற்றல் - அறிந்து கொண்ட செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் திறம் போக்குக் கற்றல் - திருடன் தன்னைத் தேடி வந்த காவலர் போய் விட்டார் என நினைத்து வெளியில் வரும்போது, அவனைப் பிடிப்பதற்கு ஏதுவாக போய் விட்டது போல் போக்கு காட்டி, சிறிது தூரம் சென்று மீண்டும் வந்து திருடனைப் பிடிப்பார் என்று சொல்லிப் பார்த்தாலே பழமொழியின் பழம்பொருள் விளங்குகிறது. நம் முன்னோர்களின் முதிர்ந்த அறிவு புலனாகிறது.

4. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
கேட்பதற்கே வேடிக்கையாய் இருக்கிறது. கல்லையும் புல்லையும் மணம் செய்து கொண்டு பெண்கள் என்ன செய்யமுடியும்?
"கல்லான் ஆனாலும் கணவன்
புல்லான் ஆனாலும் புருஷன்"
கல்வி அறிவு அற்ற படிக்காதவராக இருந்தாலும் புல்லாதவராக அன்பற்றவராக இருந்தாலும் கணவன் என்று ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் எனும் வாழ்க்கையறிவை விளக்குகிறது இப்பழமொழி.

5. களவும் கற்று மற.
திருடக் கற்றுக்கொள்; பிறகு மறந்து விடு என்ற பொருளில் இன்று இப்பழமொழி வழங்கப்படுகிறது.
"களவும் அகற்று; மற"
சொல்லிப் பார்த்தால் பண்டை மக்களின் பழம்பெருமை விளங்கும்; தமிழர்கள் திருடச் சொல்லிப் பழமொழி கூறியிருக்க வாய்ப்பில்லை.

6. "சேலை கட்டிய மாதரை நம்பாதே"
இப்பழமொழி மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் சேலை கட்டிய மாதரை நம்பக்கூடாது. சுடிதார், ஜீன்ஸ், பாவாடை, தாவணி போட்டிருக்கும் பெண்களை நம்பலாம் என்பது போல் தோன்றும்; உண்மை அதுவன்று.
சேல் அகட்டிய மாதரை நம்பாதே சேல் போன்ற கண்களை அகட்டி, அகட்டி ஆடவரைத் தேடும் இழிகுணம் உடைய பெண்களை நம்பாதே என்பதுதான் இதன் உண்மைப்பொருள்.

7. "சிவபூசையில் கரடி நுழைந்தாற் போல்"
சிவபூசை வீட்டிலோ, கோயிலிலோ நடைபெறும். அப்பொழுது எப்படி கரடி நுழைய வாய்ப்பிருக்கும்? சிவபூசை பொருத்தமான இன்னிசை அருள் பாடல்களோடு இன்னியம் முழங்க நடைபெறுவது; அப்போது ஒலிச்சீர்மை அற்ற ஓசை சத்தம் கேட்டால் பூசையில் ஈடுபாடு வருமா? கரடியை எனும் ஒலிக்கும் கருவி அதைத்தான் செய்யும்.
சிவபூசையில் கரடிகை ஒலித்தாற் போல என்ற பழமொழியே சிவபூசையில் கரடி  நுழைந்தாற்போல என மாறி வழங்குகிறது.

8. "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்."
இதன் பொருள் முரண்பாடாகத் தோன்றுகிறது. பண்டைத் தமிழர் ஆயிரமாயிரம் மூலிகை, அதன் வேர்கள் பற்றி அறிந்தவர்கள். மூலிகை மருந்துகள் தயாரித்தளித்து நோய்களை நீக்கினர் மருத்துவர்கள் அதற்கு அதிக எண்ணிக்கையில் வேர்களைப் பயன்படுத்தினார்கள்.
"ஆயிரம் வேரைக் கொன்றவன்
அரை வைத்தியவன்"
என்று பழமொழியின் பொருளைப் புதுமைப்படுத்தினால் பழம்பொருள் விளங்கும்.

9. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது
இது கூட தெரியாதவர்களா தமிழர்கள்? இது தெரியாமலா இப்படிச் சொல்லி வைத்திருப்பார்கள்?
ஓட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
சதைப்பகுதி, ஓடு எனப் பிரித்தறியக்கூடிய முற்றிய சுரைக்காய் ஓட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது அவர்கள் சொல்லி வைத்த உண்மை. ஓட்டுச் சுரைக்காய் குடுவைக்கு ஆகும்; கறிக்கு அகாது.

10. கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
கன்னத்தில் கை வைக்காமல் வேறு எங்க வைப்பது? பழமொழி எதைக் கூறுகிறது?
கன்னம் - கன்னம் வைத்துத் திருடுதல்; சுவரில் ஓட்டையிட்டு உள்ளே புகுந்து திருடுதல் கப்பம் கவிழ்ந்தாலும் திருடக்கூடாது என்பது அதன் பொருள்.

11. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்
எப்படி வளரும்? ஊர்ப்பிள்ளைத் தானே வளரும்? இதன் பொருளை இப்படிப் பாருங்கள் ஊரான் பிள்ளை மனைவி; தன் பிள்ளை - மனைவியின் வயிற்றில் வளரும் தன் குழந்தை. தன் பிள்ளை வளர - தானே வளர- ஊரான் பிள்ளையாகிய மனைவியை ஊட்டி வளருங்கள்.

12. கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்
கண்டதைக் கற்க எப்படி பண்டிதன் ஆக முடியும்? மாணவர்கள் கண்டதைக் கற்கிறார்களே! பண்டிதர் ஆகவில்லையே!
"கண்டு அதைக் கற்கப் பண்டிதன் ஆவான்." இன்ன நூல்களைக் கற்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கற்றால் பண்டிதன் ஆக முடியும் என்று கருத்துரைக்கிறது இப்பழமொழி.

13. மார்கழி பீடை மாதம்
இப்படி சொல்லியிருப்பார்களா? இப்படி இருக்க முடியுமா? மாதங்களில் கண்ணன் மார்கழியாக இருப்பதாக பெருமையாக இம்மாதம் பேசப்படுகிறது. இறை அன்பர்களுக்கு இம்மாதம் உயர்ந்த மாதம்! கோயில்கள் எங்கும் இறையின்பத் திருவிளையாடல்கள் பெருமைக்குரிய மாதமாக இம்மாதம் திகழ்வதால், பெருமை எனப்பொருள்தரும் வகையில் மார்கழி பீடுடை மாதம் என்று பழமொழி அமைத்திருப்பர் நம் முன்னோர் என்பது பொருந்தும்.

14. தை பிறந்தால் வழி பிறக்கும்
இறை நிலையில் பீடுடை மாதமாக மார்கழி விளங்கினாலும் வேளாண் அடிப்படையிலான பொருளாதாரம் விளங்கும் நம் நாட்டில் தை மாதம் நெற்பயிர் அறுவடைக்கு வரும். அதன் காரணமாக வறுமை நீங்கி, வளமை உண்டாகும். வாடிய மக்கள், தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள தை மாதப்பிறப்பு வழி வகுக்கும். இவ்வெண்ணத்தில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி ஏற்பட்டுள்ளது. இதை உறுதி செய்வதாக நம் மக்கள் கூறும் "மார்கழிப் பஞ்சம் மக்களை விற்கும்" என்னும் பழமொழி அமைந்துள்ளது. இவ்விரண்டையும் தொடர்புபடுத்திப் பார்த்தால் பழமொழிகளின் பொருள் நன்கு விளங்கும்.

முடிவுரை
 பழமொழிகள் பாமரர்களின் பல்கலைக்கழகமாக விளங்குபவை. பழமொழிகளை ஆராய்ந்து பொருள் கொள்ளும்போது பொதுவாக அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்றை அறிவுத் தெளிவு பெற்ற நம் ஆன்றோர்கள் பழமொழியாகக் கூறி இருக்க மாட்டார்கள். நுட்பமான அறிவுடைய அவர்கள் ஆழமான கருத்துகளைக் கூறவே பழமொழிகளை உருவாக்கிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என அறியலாம்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top