.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 23 September 2013

6 மெழுகுவர்த்திகள்! திரைவிமர்சனம்!


நீண்ட இடைவெளிக்குப் பிறகு எப்படியாவது தமிழ் சினிமாவில் வெற்றி நாயகர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் '6 மெழுகுவர்த்தி' படத்தை தயாரித்து, நடித்துள்ளார் ஷாம்.
ஷாம்- பூனம் தம்பதியர் தங்களின் ஒரே மகனின் 6வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மகனை தவற விடுகிறார்கள்.

தொலைந்து போன மகனை தேடி அலைகிறார்கள். கிடைக்காத சூழ்நிலையில் காவல் துறையில் தகவல் தெரிவிக்கிறார்கள்.
காவல்துறையினர் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்காததால், குழந்தைகளை கடத்தும் கும்பல்களிடம் அழைத்துச் செல்லும்படி ஒரு கான்ஸ்டபிளிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார் காவல்துறை ஆய்வாளர்.
அங்கு சென்று விசாரித்தபோது ஷாமின் மகனை கடத்தல் கும்பல் கடத்தியிருப்பது தெரிய வருகிறது.

இதற்கு பொலிஸ் எந்த உதவியும் செய்ய முடியாத சூழலில் தன் மகனைத் தேடி ஷாமே அலைகிறார்.

குழந்தையை மாநிலம் மாநிலமாக மாற்றி மாற்றி கொண்டு செல்கிறது கடத்தல் கும்பல். அந்த கும்பலில் உள்ள ஒவ்வொருவரையும் பிடித்து பின்தொடர்கிறார் ஷாம்.
கடைசியில் தன் மகனை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தாரா? என்பது மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முழுப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ஷாம்.
இந்த படத்திற்காக பல்வேறு தோற்றங்களில் தோன்றுகிறார். இதற்காக இவர் கடினமாக உழைத்திருப்பது ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. மகனை இழந்த தந்தை படும் வேதனைகளை தன் நடிப்பால் கண்முன் நிறுத்தியிருக்கிறார் ஷாம்.

மகனை இழந்து தாய் படும் வேதனையையும், வலியையும் தன் நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திருக்கிறார் பூனம்.
குறிப்பாக தன் மகனை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஒரு பிச்சைக்காரன் காலைப் பிடித்து கெஞ்சும் காட்சி திரையரங்குகளில் உள்ளவர்களின் கண்களை கலங்க வைக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் படியாக உள்ளது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.
கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமல்ல, இப்படிபட்ட படங்களுக்கும் இசையமைக்க தெரியும் என நிரூபித்திருக்கிறார்.
கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் ஒரு பலம்.

கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் வி.இசட். துரை. வித்தியாசமான கதைக் களத்தோடு ஷாமோடு இணைந்திருக்கிறார்.
இந்த படத்திற்காக நீண்ட நாட்கள் உழைத்திருப்பது தெரிகிறது. தன் மகனுக்காக தன் வாழ்கையையே தொலைக்கும் தந்தை, நல்ல மனிதனுக்கு தவறு செய்துவிட்டோமே என்று வருந்தி கடைசி வரை கூடவே இருந்து உயிரை விடும் டிரைவர் என படம் முழுக்க அழுத்தமான கதாபாத்திரங்களை அருமையாக கையாண்டிருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

ஆக மொத்தத்தில் ‘6 மெழுகுவர்த்திகள்’ உருகவில்‌லையே! நம்மை உருக்கிவிடுகின்றது!
நடிகர் : ஷாம்
நடிகை : பூனம்
இயக்குனர் : வி.இசட்.துரை
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஓளிப்பதிவு : கிருஷ்ணசாமி

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top