

’விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்.
‘விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் படத்தினை யார் தயாரிக்கிறார், இயக்குநர் யார் என்ற கேள்வி நிலவி வந்தது. தற்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்கள்.
‘விஸ்வரூபம் 2’ படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிந்துவிட்டன. 2 பாடல்களை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும். ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு ’வாகை சூட வா’ கிப்ரான் இசையமைத்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.
இந்நிலையில், ‘விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து கமல், லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுத ஒப்பந்தமாகி இருக்கிறார்.
‘சதிலீவாவதி’, ’பஞ்ச தந்திரம்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘மன்மதன் அம்பு’ போன்ற படங்களில் கமலுடன் இணைந்து நடித்த, கமலுக்கு நெருங்கிய நண்பரான ரமேஷ் அரவிந்த் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். கன்னடத்தில் ‘சதிலீலாவதி’ படத்தின் ரீமேக்கை இவர் தான் இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு ‘விஸ்வரூபம் 2’ படம் வெளியானவுடன் தொடங்கவிருக்கிறது.
’உத்தம வில்லன்’ படம் சமூகத்தில் தற்போது நடைபெறும் பிரச்சினையை, காமெடி கலந்து சொல்ல இருக்கிறார்களாம். விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.