குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே நய்யாண்டி வெளியாகலாம் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை அடுத்து சற்குணம் இயக்கும் நய்யாண்டி. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். இவர்கள் தவிர சரண்யா பொன்வண்ணன், சூரி, சத்யன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் சற்குனத்தின் நண்பரான ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே இவர் ”களவாணி”, ”வாகை சூட வா” ஆகிய படங்களில் சற்குனத்துடன் இணைந்து பணியாற்றியவர்.
இந்தப் படத்துக்கு முதலில் சொட்ட வாளக்குடி என்றுதான் பெயர் வைத்திருந்தனர். படத்தின் பெயரை உச்சரித்த பலரின் நாக்கு சுளுக்கிக் கொண்டதால் பொதுமக்களின் நலன் கருதி பெயர் நய்யாண்டியாக மாற்றப்பட்டது. குத்துவிளக்கு செய்யும் கடை வைத்திருக்கும் ஹீரோவிற்கும், பல் மருத்துவம் படிக்கும் ஹீரோயினுக்கும் இடையில் ஏற்படும் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படம்தான் ‘நய்யாண்டி’. பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
அக்டோபர் 11-ம் தேதி நய்யாண்டி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே படம் வெளியாகலாம் என்று நடிகர் தனுஷ் தனது இணையதளத் தகவலில் தெரிவித்துள்ளார். படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 Posted in:  சினிமா விமர்சனம்..!
Email This
BlogThis!
Share to X
Share to Facebook



20:29
ram