.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 3 September 2013

விக்கல் பிரச்சனைக்கான தீர்வுகள்!

ஜீரண மண்டலத்தில் பிரச்னை உருவாகியுள்ளது என்பதன் அறிகுறிதான் அடிக்கடி வந்து போகும் விக்கல். விக்கலை சமாளிக்க ஆலோசனை சொல்கின்றனர் மருத்துவர்கள். தற்போது இருக்கும் வாழ்க்கை முறை உடலில் பல நோய்களுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி விடுகிறது.
உணவுகளில் பயன்படுத்தப்படும் அதிக எண்ணெய், சுவை கூட்டும் பொருட்கள் மற்றும் செயற்கை வண்ணம் ஆகியவற்றால் குடல் மற்றும் வயிற்றில் நாளடைவில் பல பிரச்னைகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. சின்னப் பிரச்னை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம். விக்கலும் அது போன்றதுதான்.

விக்கல் எப்படி வருகிறது? வயிற்றுக்கும், மார்புப் பகுதிக்கும் இடையில் உதரவிதானம் உள்ளது. நாம் மூச்சை இழுக்கும் போது நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்வதற்கு வசதியாக, இந்த உதரவிதானம் மேலும் கீழும் இயங்குகிறது.

இதனால் நுரையீரலுக்குள் ஆக்சிஜன் எளிதில் நுழைகிறது. இது நம் உடலில் இயல்பாக நடக்கும் ஒரு செயல்பாடு. மூச்சு விடும் போது உதரவிதானம் தானாகத் துடிக்கும் சமயத்தில் நம் குரல் வளை மூடியிருந்தால் விக்கல் ஏற்படுகிறது.

விக்கல் ஏற்பட சில காரணங்கள் உள்ளன. காரம் அதிகம் உள்ள உணவு சாப்பிடும்போது வருகிறது. வயிறு முட்ட சாப்பிடும்போது மற்றும் வயிறு நிறைய தண்ணீர் குடிக்கும்போதும் விக்கல் ஏற்படுகிறது.

அதிகமாக சிரிப்பவர்களுக்கும் விக்கல் வரலாம். விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை. விக்கல் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் நீடிக்கும் பட்சத்தில் பிரச்னை உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உடலில் அபாயமான நோயின் அறிகுறியாகவும் இந்தத் தொடர் விக்கல் இருக்கலாம். காசநோய், புற்றுநோய் ஆகியவற்றால் நுரையீரலின் வேர்ப்பகுதியில் நெறிகட்டியோ, நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலோ, மார்பு வழியாக உதரவிதானம் செல்லும் பெரினிக் நரம்பு பாதிக்கப்பட்டிருந்தாலோ விக்கல் வர வாய்ப்புள்ளது. மனரீதியான பிரச்னை அல்லது உணர்வுகள் காரணமாக தொடர்ந்து விக்கல் ஏற்படலாம். இந்த வகை விக்கல் விழித்திருக்கும்போது மட்டும் வரும்.

சிறுநீரகம் பழுதடைந்த காரணத்தால் ரத்தத்தில் யூரியா அதிகம் சேரும்போது விக்கல் வரும். இத்துடன் கல்லீரல், இரைப்பை பகுதியில் புற்றுநோய், உதரவிதானத்தில் ஓட்டை போன்ற அபாயகரமான காரணங்களாலும் விக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

விக்கல் வந்த உடன் தண்ணீர் குடித்தால் நின்று விடும் என்பதும் தவறான கருத்தே. தண்ணீர் நிறைய குடித்தால் பிரச்னை மேலும் பெரிதாக வாய்ப்புள்ளது.

இதனால் விக்கல் வராமல் காத்துக் கொள்வது அவசியம். பாதுகாப்பு முறை விக்கல் வராமல் தடுக்க தண்ணீரை ஒரே சமயத்தில் நிறைய குடிப்பதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம்.

வயிறு முட்ட சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கலாம். இதே போல் மது, புகை பிடித்தல் மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களை கைவிடுவதும் நல்லது. அதிக காரம் மற்றும் மசாலா சேர்ப்பதையும் தவிர்க்கலாம்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top