.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 24 September 2013

ஆப்பிளின் கதை!



பரவாயில்லை. கடன் வாங்கியாவது இந்த ‘ஜாப்ஸ்’ (Jobs) ஹாலிவுட் படத்தை பார்த்துவிடுங்கள்.


தெரிந்த கதைதான். ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரும், கம்ப்யூட்டர் உலகின் ஜாம்பவானும், சில வருடங்களுக்கு முன் மறைந்தவருமான ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றை அடியொற்றித்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். நண்பர்களுடன் இணைந்து ஓர் இளைஞன் ஒரு நிறுவனத்தை உருவாக்குகிறான். அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். மீண்டும் அந்த நிறுவனத்தை அடைகிறான். வெற்றிகரமாக நடத்துகிறான்.


அவ்வளவுதான் விஷயம்.


 

அவ்வளவுதானா விஷயம்?


இல்லை. அதனால்தான் எப்பாடுபட்டாவது இந்தப் படத்தை பார்த்துவிடச் சொல்லி உலகம் முழுக்க பரிந்துரை செய்கிறார்கள். சமகால வரலாற்றுப் படம் என்பதால் மட்டுமல்ல. இன்றைய தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சாதனத்தின் சாதனையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணமும்தான் காரணம். ஒரு தோல்வி எந்தளவுக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்ததோ அந்தளவுக்கு ஒரு வெற்றி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.



ஏற்கனவே ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றை நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள். தமிழ், ஆங்கில இதழ்களிலும் கட்டுரைகளாக அவை வந்திருக்கின்றன. போதும் போதாததற்கு மைக்ரோ சாஃப்ட் அதிபரான பில் கேட்ஸுக்கும், ஆப்பிள் நிறுவனத்துக்கும் நடந்த சண்டையை மையமாக வைத்து 1999ல் ‘பைரேட்ஸ் ஆஃப் சிலிக்கான் வேலி’ (Pirates of Silicon Valley) என்ற ஹாலிவுட் படமும் வந்திருக்கிறது.



எனவே, எதையும் புதிதாக இந்த ‘ஜாப்ஸில்’ அவர்கள் சொல்லிவிடப் போவதில்லை. ஆனால், ஒரே படத்தில் முழுமையாக ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையை சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள்... அது முக்கியம். ‘நெவர்வாஸ்’, ‘ஸ்விங் ஓட்’ ஆகிய படங்களை இதற்கு முன் இயக்கியிருக்கும் ஜோஷுவா மைக்கேல் ஸ்டர்ன் (Joshua Michael Stern) இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். Ashton Kutcher மற்றும் Josh Gad ஆகியோர், நண்பர்களாகவும் ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர்களாகவும் நடித்திருக்கிறார்கள்.



2009ல் ‘மில்க்’, 2011ல் ‘ஜெ எட்கர்’, ‘த அயர்ன் லேடி’, ‘மை வீக் வித் மர்லின்’, 2012ல் ‘லிங்கன்’... என கடந்த சில வருடங்களாகவே ஹாலிவுட்டில் தனி மனிதர்களின் வாழ்க்கையை படமாக்கி வருகிறார்கள். இந்தப் போக்கும் அமெரிக்காவில் வெடித்த பொருளாதார மந்தத்துக்கு பிறகே அதிகரித்திருக்கின்றன. ஒவ்வொரு சாதனையும் வேதனையும் எந்தவொரு சமூகத்தின் விளைவும் அல்ல.



அவை அனைத்துமே தனி மனிதர்களின் பலம், பலவீனங்களை சார்ந்ததுதான் என்பதை பதட்டத்துடன் வெவ்வேறு வகையில் வலியுறுத்த
ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாகத்தான் ‘ஜாப்ஸ்’ வெளியாகிறது.



மேக்கின்டோஷ் வரிசை மேஜை கம்ப்யூட்டர்கள், ஐ மேக் லேப்டாப்புகள், ஐ பாட், ஐ ஃபோன், ஐ பேட் கையடக்க கம்ப்யூட்டர்... என ரவுண்டு கட்டி ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு கூகுளையும், மைக்ரோ சாஃப்டையும் சேர்த்தால் வரும் மதிப்பை விட பல மடங்கு அதிகம் என்கிறது புள்ளிவிவரம். இதைக் கணக்கில் கொண்டால் ஆப்பிள் சாம்ராஜ்ஜியத்தின் அசுர பலம் புரியும்.



அப்படிப்பட்ட பேரரசை நிறுவியவர்களுள் ஒருவரின் வாழ்க்கைதான் இந்தப் படம் என்பதால், கடன் வாங்கியாவது இந்தப் படத்தை பார்த்துவிடுங்கள். கூட்டு உழைப்பு அல்ல, தனிப்பட்ட ஒருவரின் மூளைதான் ஒரு சாம்ராஜ்ஜியம் உருவாகக் காரணம் என அமெரிக்கா உணர்த்த வருவது அப்போதுதான் புரியும். 

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top