


தரணி, கெளதம் மேனன், ஹரி என தான் அடுத்து நடிக்கவிருக்கும் படங்களின் இயக்குநர்களை தேர்வு செய்திருக்கிறார் விக்ரம்.
ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ படத்திற்காக தீவிரமாக உழைத்து வருகிறார் விக்ரம். ஏமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி, ராம்குமார் (நடிகர் பிரபுவின் அண்ணன்) என பலரும் நடித்துவரும் இப்படத்தினை தயாரிக்கிறது ஆஸ்கர் நிறுவனம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் வளர்கிறது ‘ஐ’.
இந்த படத்திற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டதால், தனது அடுத்தடுத்த படங்கள் யாவுமே குறுகிய காலத்தில், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கமர்ஷியல் பாதையை தேர்வு செய்திருக்கிறார் விக்ரம்.
‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக நடக்க இருக்கிறது. அடுத்தாண்டு பிப்ரவரி முதல் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்களின் படப்பிடிப்பினை தொடங்கவிருக்கிறார் விக்ரம்.
முதலில் தரணி இயக்கத்தில் ‘ராஸ்கல்’ என்னும் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐங்கரன் கருணாமூர்த்தி தயாரிக்கவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். அப்படம் சூர்யா நடிப்பதாக இருந்து விலகிய ‘துருவ நட்சத்திரம்’ என்கிறது கோலிவுட். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து ஹரி இயக்கும் படத்தில் நடிப்பதற்கும் விக்ரம் தான் முதலிடத்தில் நிற்கிறார்.
தரணி, ஹரி இருவரின் படங்களுமே மாஸ் கமர்ஷியல் படங்களே. இருவருமே படங்களை விரைவில் முடித்துவிடுவார்கள் என்பதால் இதில் நடித்துக் கொண்டே கெளதம் மேனன் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் விக்ரம்.
2014ம் ஆண்டில் ஷங்கரின் ‘ஐ’, தரணியின் ‘ராஸ்கல்’, கெளதம் மேனன், ஹரி இயக்கும் படங்கள் என விக்ரம் ரசிகர்களுக்கு தலைவாழை விருந்து தான்.