.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 1 November 2013

‘தெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடிப்பார்’–கவாஸ்கர்














இந்திய கிரிக்கெட் அணியில் ரன் குவிக்கும் எந்திரமாக ஜொலித்து வரும் துணை கேப்டன் விராட் கோலி, நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 6–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 66 பந்துகளில் 115 ரன்கள் விளாசி, பிரமாதப்படுத்தினார். ஒரு நாள் போட்டியில் அவரது 17–வது சதம் இதுவாகும். இதன் மூலம் அதிவேகமாக 17 சதங்களை (112 இன்னிங்ஸ்) எடுத்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (170–வது இன்னிங்சில் 17–வது சதம்) இந்த பெருமையை தக்க வைத்திருந்தார். மேலும் இலக்கை துரத்திப்பிடிப்பதற்கான (சேசிங்) ஆட்டத்தில் (2–வது பேட்டிங்) கோலியின் 11–வது சதமாக அமைந்தது. இவை அனைத்தும் வெற்றியிலேயே முடிந்திருக்கிறது. இந்த வகையில் சச்சின் தெண்டுல்கர் (14 சதம்) மட்டுமே அவரை விட முன்னிலையில் இருக்கிறார்.


இந்த நிலையில் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை 24 வயதான விராட் கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆரூடம் கூறியுள்ளார். இதுவரை 118 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி அதில் 112 இன்னிங்சில் களம் இறங்கி 17 சதங்களுடன் 4919 ரன்கள் எடுத்துள்ளார். இதே எண்ணிக்கையிலான ஆட்டத்தில் தெண்டுல்கர் 8 சதத்துடன் 4001 ரன்களே எடுத்திருந்தார்.


இது பற்றி கவாஸ்கர் கூறுகையில், ‘சாதனைகள் என்பதே முறியடிக்கப்படக்கூடியது தான். ஆனால் தெண்டுல்கரின் சில சாதனைகளை அதாவது 200 டெஸ்டில் பங்கேற்றவர், 51 டெஸ்ட் சதம் ஆகியவற்றை யாராலும் முறியடிக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால் விராட் கோலி விளையாடி வரும் விதத்தை பார்க்கும் போது, ஒரு நாள் போட்டியில் தெண்டுல்கரின் அதிக சதங்கள் (49 சதம்) சாதனையை முறியடிக்க ‘வாய்ப்புள்ளது. அதற்கு இன்னும் 32 சதங்கள் தான் கோலிக்கு தேவைப்படுகிறது. நிறைய ஒரு நாள் போட்டிகளில் இந்தியா விளையாடும் போது, கோலியால் இந்த சாதனையை செய்ய முடியும். இந்த கிரிக்கெட் சீசனில் கோலி 20 அல்லது 22 சதங்களை எட்டி விடுவார்’ என்றார்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top