.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 1 November 2013

பத்து லட்சம் ஆண்டு டேட்டா பாதுகாக்கும் டிஸ்க்!



காந்த சக்தியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஹார்ட் டிஸ்க்குகள், அதிக பட்சம் பத்து ஆண்டு காலம் நல்லபடியாக இயங்கும். பல்லாண்டுகள் தகவல்களைச் சேர்த்துப் பாதுகாக்க விரும்பு பவர்கள், இதனாலேயே மேக்னடிக் டேப்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேவைக்குப் பதில் கொடுக்கும் வகையில், பத்து லட்சம் ஆண்டுகள் கூடப் பாதுகாப்பாக தகவல்களைப் பதிந்து வைக்கக் கூடிய டிஸ்க்குகளை நானோ தொழில் நுப்ட வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர்.

1956 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். நிறுவனம் முதன் முதலாக, காந்த சக்தியின் அடிப்படையில் இயங்கும் ஸ்டோரேஜ் டிஸ்க்கினை, வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தியது. IBM 305 RAMAC என அழைக்கப்பட்ட இந்த டிஸ்க், 24 அங்குல டிஸ்க்காக இருந்தது. 5 எம்பி டேட்டாவினை (அந்த காலத்தில் இது ரொம்ப அதிகம்) அதில் பதிந்து பாதுகாக்கலாம். இப்போது, 3.5 அங்குல அளவிலான டிஸ்க்குகளில் 1 டெரா பைட் அளவு கொள்ளும் ஹார்ட் டிஸ்க்குகள் எளிதாக, விலை மலிவாகக் கிடைக்கின்றன. மின் சக்தி பயன்பாடும் முன்னேறிய நிலையில் உள்ளது. இது நவீன தொழில் நுட்பத்தினால் சாத்தியப்பட்டது என்றாலும், எத்தனை ஆண்டுகள், இதில் பதியப்படும் தகவல்கள் சேதமடையாமல் இருக்கும் என்பதில், நாம் இன்னும் முன்னேற்றம் காண இயலவில்லை. அதிக பட்சம் பத்து ஆண்டுகள் என்ற கால எல்லையிலே தான் இருக்கிறோம்.

அப்படியானால், நம் கலாச்சாரம், சமுதாயக் கூறுகள் ஆகியவற்றை வெகு காலம் பாதுகாத்து வைக்க என்ன செய்திடலாம்? என்ற கேள்வி எழுந்தது. இதற்கான விடையாக, இப்போதைய நானோ தொழில் நுட்பத்தில் டிஸ்க் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Jeroen de Vries என்னும் வல்லுநர் தலைமையிலான குழுவினர், நெதர்லாந்தில் உள்ள ட்வெண்டி பல்கலைக் கழகத்தின் (University of Twente) சோதனைச் சாலையில் இதனை உருவாக்கியுள்ளனர். இந்த டிஸ்க்கில் பதியப்படும் தகவல்கள், பத்து லட்சம் ஆண்டுகள் மட்டுமின்றி, அதற்கும் மேலாகவும் பாதுகாத்து வைக்கும் என, அதன் மீது நடத்தப்பட்ட சோதனைகள் தெரிவித்துள்ளன.

இவர்களின் நிபுணத்துவம், டிஸ்க் உருவாக்குவதனை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளவில்லை. அநேக ஆண்டுகள் தொடர்கையில், ஒரு பொருள் நிலைத்து இருக்க வேண்டுமாயின், காலத்தின் அழிப்பு தன்மையை எதிர்த்து நிற்க என்ன வேண்டும் என ஆய்வு செய்து வழிகளைக் கண்டறிந்துள்ளனர். அறிவியலில் இதனை Arrhenius law என அழைப்பார்கள். அந்தச் சோதனையில் கிடைத்த முடிவுகளை, டிஸ்க் தயாரிப்பில் பயன்படுத்தி உள்ளனர்.

மிக மெல்லிய உலோகமான டங்க்ஸ்டன் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், இதனை உருக்க வேண்டும் என்றால் 3,422 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவை. எனவே, பாதுகாப்பானது என இதனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். டேட்டா, இதில் உள்ள வரிகளில் பதியப்படுகிறது. அதன் மேலாக பாதுகாப்பிற்கான ஒரு அடுக்கு அமைக்கப்படுகிறது. இதனை அமைக்க சிலிகான் நைட்ரைட் (Silicon nitride (Si3N4)) பயன்படுத்தப்படுகிறது. இந்த உலோகம் எந்த பாதிப்பிலும் சேதம் அடையாது. இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஸ்க்கில் டேட்டா எழுதப்பட்டு சோதனை நடத்தப்பட்டு, இறுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் இது குறித்து தகவல்கள் தேவைப்படுவோர் arxiv.org/abs/1310.2961என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லலாம்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top