.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 16 October 2013

இரத்த சோகையின் அறிகுறிகள்!


Know about the signs and symptoms of Anemia - Tips for Women

"டாக்டர், எனக்கு ரொம்ப சோகையாக இருக்கு. ரெண்டு பாட்டில் ரத்தம் ஏத்துங்க" என்று வேண்டுகோள்களும், "டாக்டர் எப்போதும் எனக்கு ரொம்ப அசதியாகவே இருந்திச்சு. அதனால ஒரு பாட்டில் ரத்தம் ஏத்திக்கிட்டேன். இப்ப நீர் பிரியல ஆனா மூச்சுவாங்குது" என்று சொல்லிக்கொண்டு வருகின்ற நோயாளிகளை நிறைய சந்திக்க முடிகின்றது. இது எதனால்? சோகை என்றால் என்ன? இரத்த சோகை என்றால் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் அறியாததன் விளைவுகள்தான் மேலே சொன்ன உரையாடல்கள்! மருத்துவம் செய்து கொள்வது எவ்வளவு தேவையானதோ அதைப் போலவே அதைப்பற்றி அறிந்துக் கொள்வதும் அவசியமானது. அந்த வகையில் நாம் முக்கிய வரலாற்றுப் பதிவுகள் சிலவற்றைப் பார்ப்போம். 


இந்திய மருத்துவத் தந்தை சுஸ்ருதா, சோகையினை அது ஒருவகையான பண்டுரோகம் அல்லது மஞ்சள் காமாலை என்கிறார். அது கபம் அல்லது சளியால் உண்டாவது என்றும் கண்களும், தோலும், நகங்களும் வெளிறிக் காணப்படும் என்றும் விவரிக்கின்றார். அது போலவே சரகர் என்ற இந்திய முன்னோடி மருத்துவர், பண்டுரோகம் என்ற இந்த நோய் உணவுப் பழக்கவழக்கத்துடன் தொடர்பு உடையது என்று குறிப்பிடுகின்றார். கி.மு. 280களில் வான்சூகூ என்ற சீன மருத்துவர் இது இரத்தக் குறைபாடு என்றும் இதனை நாடித்துடிப்பால் அறியலாம் என்றும் கண்டறிந்தார்.


16-ம் நூற்றாண்டில் எல்லா வகையான சோகைகளும் இரும்புச்சத்துக் குறைவினால் அல்லது வேறு காரணங்களால் என்று வகைப்படுத்தப்படாமல் எல்லாவற்றிற்கும் க்ளோரோசிஸ் அல்லது பச்சை நிறம் படரும் சோகையே காரணம் என்று ஜீன் வரன்டல் என்பவரால் சொல்லப்பட்டது. 1554-ல் ஜேசன்லாங் என்பவர் இரத்த சோகைக்குத் தெளிவான விளக்கத்தினை முதன்முதலில் வெளியிட்டார். அவரது நண்பரின் மகள் சோகையினால் பாதிக்கப்பட்டிருந்ததை எழுதும் போது, "அவள் இரத்தம் வற்றி வெளிறிப் போய் நடுக்கத்துடன் மூச்சுவிட சிரமப்பட்டு முட்டிகள் வீங்கி இருந்தாள்" என்று குறிப்பிடுகின்றார்.


இரத்த சோகை சிகிச்சைக்கு அந்தக் கால கட்டத்தில் இரும்புச்சத்து பயன்படுத்தப்பட்டது என்றாலும் அது புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை. அதே வேளையில் பண்டைய இந்திய வைத்திய முறையின் முன்னோடி மருத்துவரான சரகரின் சிகிச்சைக் குறிப்பில், இரும்புப் பொடியினால் தயாரிக்கப்பட்ட மருந்தினை பசுமாட்டுச் சிறுநீர் சேர்க்கப்பட்ட பாலில் கலந்து தொடர்ந்து ஏழுநாட்களுக்குச் சாப்பிட வேண்டும் என்று குறித்துள்ளார்.


1681-ல் தாமஸ் சென்காம் என்ற மருத்துவர் இதற்கு, இரும்புச் சத்துதான் சரியான தீர்வு என்பதை முதன்முதலில் தெளிவுபடுத்தினார். 1832-ல் பிரான்ஸ் மருத்துவர் பெர்ரேலூட் இரத்தத்தில் உள்ள நிறமிகள் - சிவப்பணுக்கள் பாதிப்பதனால் பிற உறுப்புகளின் பணி பாதிக்கப்படுவதே சோகைக்கான காரணம் என்றும், அதனைத் தவிர்க்க ஃபெரஸ்சல்பேட் மாத்திரையே சிறந்தது என்று அறிவித்தார். 1849-ல் எடிசன் என்பவர் மரணத்தை உண்டாக்கக்கூடிய இரத்த சோகையினை மருத்துவப் பூர்வமான விளக்கப் படங்களுடன் விவரித்தார். 1925-ல் விப்பில் என்ற மருத்துவர், இரத்த சோகை எவ்வாறு பாதிக்கின்றது என்பதனை ஒரு நாயினை சோதனைக்குள்ளாக்கி விளக்கினார்.


1926-ல் விப்பில், ஹார்வேர்ட் மருத்துவக் கழகத்தின் பிற மருத்துவர்களான மினோட் மற்றும் மர்பி என்பவருடன் இணைந்து இரத்த சோகையிலிருந்து கல்லீரலையும், நோயாளிகளையும் காக்கக்கூடிய சிகிச்சையினை செய்து காட்டினார். இதன் விளைவாக, 1934-ல் இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.


இவ்வாறாக சோகை, இரத்த சோகைக் குறித்த ஆய்வுகள் பல்வேறு நிலைகளைத் தாண்டி இன்றைய வளர்ச்சி நிலைக்கு வந்துள்ளது. இனி, இரத்த சோகைப் பற்றிய சில அடிப்படை செய்திகளைப் பார்ப்போம்.


இரத்த சோகை என்றால் என்ன? அது ஏன் வருகிறது?


பொதுவாக சிவப்பு அணுக்களின் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நிலைதான் இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது.


இரத்த சோகை ஏய்படக் காரணங்கள்: 


ஆண்களுக்கு: 100 மி.லி. இரத்தத்தில் 14.5 முதல் 15.5 கிராம்களும்,

பெண்களுக்கு: 100 மி.லி இரத்தத்தில் 13.4 முதல் 14.5 கிராம்களும் இருக்க வேண்டும். அப்படியில்லாமல்,

குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் 5 வயது வரை: 11 கிராமுக்கு குறைவாகவும்

6 வயது முதல் 14 வயது வரை: 12 கிராமுக்கு குறைவாகவும்,

பெரியவர்களான ஆண்களுக்கு: 13 கிராமுக்கு குறைவாகவும்

பெண்களுக்கு: 12 கிராமுக்கு குறைவாகவும்

கர்ப்பிணிகளுக்கு: 11 கிராமுக்கு குறைவாகவும் இருந்தால் இரத்த சோகை ஏற்படும்.


பெண்கள் பூப்பெய்திய காலம் முதல் தங்கள் மாதவிலக்கு காலங்களில் அதிக அளவு இரத்தப் போக்கினால் இரும்புச் சத்தை இழப்பதால்.

பேறு காலத்தின் போது இரத்தப் போக்கு ஏற்படுவதால்.

இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதால்.


மலேரியா நோயால் அவதியுறுவதால்.

தேவைக்கு ஏற்ப உணவு உண்ணாததால்.

குடற் கொக்கிப் புழுக்களால் பாதிக்கப்படுவதாலும் இரத்த சோகை ஏற்படுகின்றது.

காச நோயினால் நுரையீரலிலிருந்து இரத்தம் வருதல்.

குடல் புண் காரணமாக வயிற்றிலிருந்து இரத்தம் வருதல்.

மூலநோயினால் மூலத்திலிருந்து இரத்தம் வருதல்.

பெரிய காயங்களிலிருந்து இரத்தம் வருதல்.

பெண்களுக்கு மாத விலக்கின் போது இரத்தம் வெளியேறுதல் போன்ற குறிப்பிட்ட இரத்த இழப்புகளாலும் இரத்த சோகை ஏற்படுகிறது.

இரத்த சோகையினால் ஏற்படுகின்ற பாதிப்புகள்:
குழந்தைகளுக்கு:

நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

உடல் வளர்ச்சிக் குறைவு.

மன வளர்ச்சிக் குறைவு.


படிப்பில் கவனம் இன்மை.

விளையாட முடியாமை.

சக்தி குறைவாகக் காணப்படுதல்.

இளம் பருவத்தினருக்கு:

பள்ளிப் படிப்புகளிலும் மற்றும் செயல்பாடுகளிலும் குறைவான பங்கேற்பு.

தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்திட இயலாமை.

உடல் உழைப்பிற்கான சக்தி குறைவாகக் காணப்படுதல்.

தொடர்ந்து அசதி.

ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுதல்.


பெரியவர்களுக்கு:

வேலை செய்ய இயலாமை.

எளிதில் சோர்வடைதல்.

பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பாதிப்புகள்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு:

எடை குறைவாக குழந்தை பிறந்தால்/குறைமாத பிரசவம்.
பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் நலக்குறைபாடுகள்.
பிரசவத்தின் போதோ அல்லது பிரசவித்த பின்போ, தாய் மரணம் அடையலாம், குழந்தையும் மரணம் அடையலாம்.
மாதவிடாயின் போது ஏற்படும் இரத்த இழப்பு.
கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து அதிகமாகத் தேவைப்படுகிறது.
கருச்சிதைவு/அடிக்கடி பிள்ளைப்பேறு.
பெண்கள் குறைவாக உணவு உண்பது போன்ற காரணங்களால் இரத்த சோகை ஆண்களை விட பெண்களையே அதிகமாகப் பாதிக்கின்றது.
குழந்தை பிறந்தவுடன் பல பெண்கள் தங்களின் உருவ அமைப்பு குலைந்து அழகு போய்விடக்கூடாது என்று கருதி குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அருந்தத் தராமல் புட்டிப் பாலினையே புகட்டுவார்கள். இதனால் இரும்புச்சத்துக் குறைவேற்பட்டு, "புட்டிப்பாலுக்கு அடிமையான சோகை"யாக குழந்தை ஆகிவிடுவதுண்டு. இதுபோலவே "ஃபாஸ்ட் ஃபுட்" கலாச்சாரத்தால் வயிற்றுத் தொல்லையையும், இரத்த சோகையையும் நாமே வரவழைத்துக் கொள்கின்றோம்.

இரத்த சோகையின் ஆரம்ப அறிகுறிகள்:

சோர்வு.

மூச்சுவாங்குதல்.

அன்றாடம் செய்யும் வேலைகளைச் செய்ய முடியாமை.

கடுமையான இரத்த சோகை அறிகுறிகள்:

வேலை ஏதும் செய்யாத போதே மூச்சுவாங்குதல்.
வெளிறிய முகம்.
நகம், விரல்கள் வெளுத்துக் காணப்படுதல்.
கண்கள், நாக்கு வெளிறி இருத்தல்.
கை, கால், முகம் வீக்கம்.
மார்பு படபடப்பு.
இரத்த சோகையினைத் தவிர்க்க இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின்கள் நிறைந்த நம் கை அருகில் கிடைக்கக்கூடிய சத்துள்ள உணவுகளை நிறைய சேர்த்துக் கொண்டாலே போதும். இரத்த சோகையினைத் தவிர்க்கலாம்.

இரும்புச்சத்து உள்ள உணவு வகைகள் என்ன? எது?

கீரைகள்/கீரைத் தண்டுகள்:

முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, குப்பைக்கீரை, துளசிக்கீரை, மணத்தக்காளிக்கீரை, காலிபிளவர்.

காய்:

பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரை, வாழைக்காய், பீன்ஸ்.

கனிகள்:

சீதாப்பழம், அன்னாசிப்பழம், மாதுளம்பழம், தர்பூசணி, சப்போட்டா, பேரீட்சை, உலர்ந்த திராட்சை.

தானியங்கள் மற்றும் பருப்பு:

கம்பு, கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, சாமை, பொட்டுக்கடலை சோயாபீன்ஸ், பட்டாணி.

அசைவ உணவு:

ஆட்டுக்கறி, ஈரல், முட்டை, மீன், இறால்

திரவ உணவு:

பொட்டுக்கடலை கஞ்சி, கேழ்வரகுக் கஞ்சி.

பிற உணவு வகைகள்:

வெல்லம்
அதிரசம்
கடலை மிட்டாய்
கடலை உருண்டை (வெல்லம் கலந்தது)
பனங்கற்கண்டு கலந்த பால்
கருப்பட்டி மற்றும் கேழ்வரகு மாவு
பொரி உருண்டை
பொட்டுக்கடலைப் பாயசம்
பேரீச்சம் பழம்
பொரிவிளங்காய் உருண்டை (அரிசி/கடலை/வெல்லம் கலந்தது)
வைட்டமின் "சி" இரும்புச்சத்தை கிரகிக்க வைக்கும் ஓர் ஊக்குவிக்கி ஆகும். அதுபோலவே, உணவு அருந்திய உடனோ, அல்லது ஒரு மணி நேரத்திற்குள்ளோ தேநீர், காபி அருந்துவது கூடாது. அது உடம்பில் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைக் குறைக்கும்.

இரத்த சோகையினைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டிய எளிய செயல்கள்:

இரும்புச் சத்து நிறைந்த உணவு வகைகளைச் சேர்த்தல்
ஒரு கைப்பிடி அளவு எளிதில் கிடைக்கும் புரதச் சத்து நிறைந்த நிலக்கடலை போன்றவற்றை உட்கொள்ளுதல்.

11 வயது முதல் 19 வயது வரை உள்ள இளம் பெண்கள் இரும்புச்சத்து
மாத்திரையை வாரம் ஒருமுறை தொடர்ந்து சாப்பிடுதல்.


மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எடை பார்த்து, வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்தல்.

வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லையெனில் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனைப் பெறுதல்.

உணவு சாப்பிட்டவுடன் காபி/தேநீர் குடிப்பதைத் தவிர்த்தல்.

உணவு சாப்பிடும் முன்பு கைகளை சோப்புப் போட்டு, தண்­ர் விட்டு சுத்தமாகக் கழுவுதல்.

நகங்களை அடிக்கடி வெட்டுதல் வேண்டும்.

காலில் செருப்பு அணிவது அவசியம். ஏனென்றால் கால் மூலம் நுழையும் கண்ணுக்குத் தெரியாத கொக்கிப் புழுக்கள் குடலில் இரத்தத்தை உறிஞ்சி, இரத்த சோகையை உண்டாக்கும்.

சிறுநீர், மலம் கழிக்க சுகாதார கழிப்பறை வசதிகளைப் பயன்படுத்திடல். மலம் கழித்த பின் கை, கால்களை சோப்புப் போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.

நாம் முன்பு சொன்னது போல இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதுதான் இரத்த சோகைக்கான காரணமாகும். ஆகவேதான் இரத்தம் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றார்கள். 350 மி.லி. இரத்தம் செலுத்தப்பட்டால் அதில் 1 கிராம் ஹீமோகுளோபின் தான் கிடைக்கும். எனவே, ஹீமோகுளோபின் மட்டுமே தேவைப்படுபவர்கள் மேலே சொன்ன நல்ல காய்கறிகளையும், பழங்களையும், இரும்புச் சத்து நிறைந்த கம்பு, கேழ்வரகினையும், ஈஸ்டினையும் சாப்பிட்டாலேப்  போதும். உதாரணத்திற்கு 100 கிராம் கேழ்வரகில் 52 மி.கிராமும், 100 கிராம் ஈஸ்டில் 43 மி.கிராம் ஹீமோகுளோபினும் நமக்குக் கிடைத்துவிடும். இந்த எளிய வழியை விட்டு முழு இரத்தமும் ஏற்றிக் கொண்டு மூச்சுத்திணற வேண்டிய அவசியமில்லை.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top