.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 8 November 2013

காணாமற்போன அடையாளங்கள்!

காலச்சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை கிராமங்களின் அடையாளங்கள் மாறிவருவதைக் கொண்டே அறிந்து கொள்ள முடியும். கிராமங்களின் தனித்துவமான அடையாளங்களாக விளங்கிய இடங்கள், பொருட்கள், பழக்கவழக்கங்கள் என அனைத்தும் இன்று மாறியும், காணாமலும் போய்விட்டன. இதனால் பலவகையான அடையாளங்களைக் கிராமங்கள் இழந்தாலும் சில பழக்கவழக்கங்களால் தனக்கான அடையாளத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன.

 கிராமங்களில் அன்றாடம் பயன்பாட்டில் இருந்த பொருட்கள், இடங்கள்கூட கால ஓட்டத்தில் காணாமற்போய்விட்டன. ஒருகாலத்தில் புழக்கத்தில் மக்களோடு ஒன்றியிருந்த பொருட்கள்கூட இன்று நினைவுப் பொருட்களாக மாறிவிட்டன. வீட்டின் முன்பு கால்நடைகள், தெருக்களில் விளையாடும் குழந்தைகள், வீட்டுத் திண்ணையில் முதியவர்கள், தாவணி போட்ட கன்னிப் பெண்கள் அன்றாட நிகழ்வுகளை அலசி ஆராயும் குடும்பப் பெண்கள் என்றிருந்த கிராமம்தான் இன்று எப்படியெல்லாமோ மாறிவிட்டது.

 தெருவெங்கும் தார் சாலைகள், கான்கிரீட் வீடுகள், சுடிதார் போட்ட சிறுமிகள், வீட்டின் முன்பு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என்றெல்லாம் நகரத்துக்கு இணையாக கிராமங்களும் மாறிவிட்டன. கால ஓட்டத்தில் காணாமற்போன கிராமத்து அடையாளங்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

 ஊர் கிணறு (பொது கிணறு): குடிநீருக்கும் மற்ற பயன்பாடுகளுக்கும் ஏரிகளே பிரதானமாக இருந்தன. ஆனால் நாளடைவில் சரியான பராமரிப்பு இல்லாமற்போனதால் கால்நடைகளுக்கும், மற்ற பயன்பாடுகளுக்கும் மட்டுமே ஏரிகளின் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் ஊர் கிணறு (பொது கிணறு) எனப்படும் கிணறுதான் மக்களின் தாகம் தீர்த்தது.

 ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி பயன்பட்டு வந்த ஊர் கிணறு காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் பரபரப்பாக இருக்கும். மற்ற நேரங்களில் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக இருக்கும். ஊர் கிணறு பெரும்பாலும் குடியிருப்புகளை ஒட்டினாற்போன்று ஒதுக்குப் புறத்திலும் ஏரியின் மையப்பகுதியிலும்தான் அமைந்திருக்கும்.

 ஆழ்துளை குழாய்களின் உபயம், குடிநீர் திட்டத்தினால் தெருக்களில் தண்ணீர் விநியோகம் போன்றவற்றால் காலப்போக்கில் ஊர் கிணறு காணாமற்போய்விட்டது. அன்று குடிநீர் விநியோகத்தில் பிரதானமாக விளங்கிய ஊர் கிணறு இன்று குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டது. ஊர் கிணறு காணாமற்போக காரணமாக விளங்கிய கைப்பம்புகளை காண்பதும் இன்று அரிதாக உள்ளது.

 சுமைதாங்கி: உள்ளார்ந்த அர்த்தத்தோடும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் உண்மை என்றே எண்ணத் தோன்றும் பழக்கவழக்கங்களை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர் என்பதற்கு "சுமைதாங்கி' ஓர் உதாரணமாகும். கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் இறந்துவிட்டால் அவர்களின் நினைவாக அமைக்கப்படுவதுதான் "சுமைதாங்கி'. கர்ப்பிணி பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும் முன்பே சுமையுடன் இறந்துவிட்டதாகவும், இந்நிலை இனி எவருக்கும் வரக்கூடாது என்பதற்காகவும் சுமைதாங்கி அமைக்கப்படுகிறது.

 சுமைதாங்கி பெரும்பாலும் ஊருக்கு வெளியே வனப்பகுதியிலும் சாலையோரங்களிலும்தான் அமைக்கப்படும். செங்குத்து வடிவில் இரண்டு கற்களும் கிடைமட்டமாக ஒரு கல்லும் கொண்டு அமைக்கப்பட்ட சுமைதாங்கியில் எவ்வளவு கனமான சுமையையும் எவரது உதவியும் இல்லாமல் இறக்கிவைக்கவும், மீண்டும் சுமந்து செல்லவும் முடியும்.

கர்ப்ப கால மரணங்கள் இன்று வெகுவாகக் குறைந்துவிட்டாலும் மக்களின் பழக்கவழக்கங்கள் இன்று மாறிவிட்டதால், சுமைதாங்கி அமைப்பது இல்லாமற் போய்விட்டது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட சுமைதாங்கிகளும் பயனற்றுப் போய்விட்டன. அவையும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளன.
 திண்ணை: முதியவர்களின் கடைசிகால இருப்பிடமாக விளங்கும் திண்ணை கொண்ட வீடுகளை இன்று காணமுடிவதில்லை. இருக்கின்ற வீடுகளிலும் திண்ணைப் பகுதி பயன்பாடில்லாத இடமாகவே உள்ளது. வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்களை வரவேற்கும்போது திண்ணையைக் காட்டி, "உட்காருங்கள்' என்று சொல்வதே மிகப் பெரிய மரியாதையாகக் கருப்பட்டது.

 வயதான காலத்தில் தரையில் உட்காரவோ, எழுந்திருக்கவோ முடியாதபோது இந்த திண்ணைதான் உற்ற தோழனாக விளங்கியது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்து தெருக்களில் நடந்து செல்லும் போது வீட்டின் முன்புள்ள திண்ணையில் முதியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் காணமுடியும்.

 அதனால் முதியவர்கள் வசதிக்காக திண்ணையில் உட்கார்ந்து சுவறில் சாய்ந்து கொள்ளும் பொருட்டு சாய்வு தள அமைப்பும், அதற்கு மேல் சிறிய மாடமும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மாடம் விசேஷ காலங்களில் விளக்கேற்றி வைக்கும் இடமாகவும், மற்ற நாட்களில் முதியோருக்குத் தேவையான தண்ணீர் சொம்பு, வெற்றிலைப் பாக்கு பொட்டலம் வைக்கும் இடமாகவும் விளங்கும்.

 இன்று வீட்டில் திண்ணை என்பது இடத்தை ஆக்கிரமிக்கும் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. அதனால் திண்ணை வைத்த வீடுகளை எவரும் கட்டுவதுமில்லை, இருக்கின்ற திண்ணைகள் பராமரிக்கப்படுவதும் இல்லை.

 டூரிங் டாக்கீஸ்: "கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை' என்ற பக்திப் பாடல் எங்காவது ஒலிக்கக் கேட்டால் இன்றளவும் நம் நினைவுக்கு வருவது டூரிங் டாக்கீஸ்தான்.

 சிறு நகரங்களுக்குச் சென்று படம் பார்க்க நேரமில்லாத, அதிகக் கட்டணத்தில் படம் பார்க்க மனமில்லாத மக்களுக்கு டூரிங் டாக்கீஸ்தான் சிறந்த பொழுதுபோக்குக் கூடமாகும். தரை, பெஞ்சு, சேர் என மூவகைகள் மட்டுமே திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும். டூரிங் டாக்கீஸில் சேர் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பது அந்த காலகட்டத்தில் கெüரவமாகக் கருதப்பட்டது.

 மணற்பாங்கான தரையில் உட்கார்ந்து படம் பார்க்கும் சுகமே அலாதியானது. அப்போதெல்லாம் அறியாமை காரணமாக திரைக்கு அருகே அமர்ந்து படம் பார்ப்பதை சிலர் விரும்புவர். அதற்காக முன்னதாகவே டிக்கெட் வாங்கிச் சென்று திரைக்கு அருகில் மணலைத் திரட்டி மேடாக்கி அமர்ந்து படம் பார்ப்பதுண்டு.

 நடந்தும், சைக்கிளிலும் வந்து படம் பார்த்துச் செல்லும் மக்களுக்கு மத்தியில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் படம் பார்க்க வருவது அப்போது அந்தஸ்து மிக்கதாக எண்ணப்பட்டது. பட இடைவேளையின் போது மட்டுமின்றி எப்போதும் பார்வையாளர்கள் மத்தியில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படும். எத்தனை உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் எல்லோரும் விரும்பி வாங்குவது "கல்கோனா' எனப்படும் உருண்டை மிட்டாய்தான்.

 டூரிங் டாக்கீஸ்களில் மட்டுமே கிடைக்கும் இந்த மிட்டாயை படம் தொடங்கும் போது வாங்கி வாயில் போட்டால் முடியும் வரையில் அதன் சுவை இருந்து கொண்டே இருக்கும். டூரிங் டாக்கீஸ் என்று இல்லாமற் போனதோ அன்றே இந்த கல்கோனாவும் காணாமற்போய்விட்டது. ஆனால் இன்று வரையில் டூரிங் டாக்கீஸ் என்றால் கல்கோனாவும் கல்கோனா என்றால் டூரிங் டாக்கீசும் நம் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.


 கிராம விளையாட்டுகள்: கிராமத்து தெருக்களில் சிறார், சிறுமியர் விளையாடுவதைக் காண்பதற்கில்லை. முன்பு பள்ளி நாட்களில் மாலை நேரத்திலும், விடுமுறை நாட்களில் பகல் வேளையிலும் விளையாடிக் கொண்டிருப்பர். நொண்டி ஆட்டம், கண்ணாமூச்சி ஆட்டம், சில்லாட்டம், தாயம் போன்றவை சிறுமியர் விளையாட்டாகவும், கிட்டிப்புல், கோலி, கபடி போன்றவை சிறார் விளையாட்டாகவும் இருந்தது.

 ஆனால் காலப்போக்கில் நகரத்து சாயல், தகவல் தொடர்பு சாதனங்களால் இத்தகைய விளையாட்டுகள் இல்லாமற்போய்விட்டன. பண்டிகை நாட்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமே இவ்வகையான விளையாட்டுகளைக் காணமுடிகிறது.

 பத்தாயம்: அறுவடைக்குப் பின்னர் விவசாய விளைபொருட்களை ஆண்டுக்கணக்கில் சேமித்து வைக்க பயன்படுத்துவதுதான் பத்தாயம். அதிக அளவில் சாகுபடி செய்வோரும், வசதி படைத்தவர்களும்தான் பத்தாயம் வைத்திருப்பர். செவ்வக வடிவில் வசதிக்கேற்ப உயர்ரக அல்லது சாதாரண மரப்பலகைகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட பத்தாயத்தில் பொருட்களைக் கொட்டுவதற்கு அதன் மேற்புரத்திலும் வேண்டும்போது எடுத்துக் கொள்ள கீழ்புறத்திலும் வழிவகை உண்டு.
 உள்ளூரில் கிடைக்கும் களிமண், வைக்கோல் துகள் போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான குதிர் வட்ட வடிவில் விலைக்கேற்ற அளவுகளில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வசதி குறைவானவர்கள் வீட்டில் குதிர்தான் இடம்பெற்றிருக்கும்.

 நகை, பணம் போன்றவற்றையும் இதனுள்தான் வைத்திருப்பர். விளைபொருட்களையே உணவுப் பொருட்களாகவும் அப்போது பயன்படுத்தியதால் பத்தாயம், குதிர் ஆகியவற்றின் தேவை அவசியமாக இருந்தது.

 கிராமங்கள் என்றாலே இவையெல்லாம் இருக்கும் என்று உறுதியாகக் கூறப்பட்ட அடையாளங்கள் யாவும் இன்றைக்குக் குக்கிராமங்களில் கூட இல்லாமற்போய்விட்டன. அடையாளமாக விளங்கிய பொருட்கள், பழக்கவழக்கங்கள் யாவும் இன்று அடையாளத்தை இழந்துவிட்டன. பழக்கவழக்கங்கள் மட்டுமே இன்று பழக்கத்தில் இருந்தாலும் அதுவும் விசேஷ காலங்களில் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது. 

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top