காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியாவின் பிரதிநிதியாக அதில் கலந்து கொள்வார் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும்.
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. முன்னர் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதே கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன் வைத்தார்கள். ஆனால், இத்தனைக்கும் பிறகும் இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியாவின் பிரதிநிதியாக அதில் கலந்து கொள்வார் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, அவமதிப்பதாகவும் ஆகும்.
அது என்ன காமன்வெல்த்?
இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற பின் பிரிட்டிஷ் அரசு பல நாடுகளில் இருந்து வெளியேறத் தீர்மானித்தது. ஆனால் அதன் கீழ் இருந்த எல்லா நாடுகளுக்கும் அது சுதந்திரம் அளித்துவிடவில்லை. சில நாடுகளை அரசுக்குக் கீழ்படிந்த தன்னாட்சி நாடுகளாக (டொமீனியன்) வைத்திருந்தது. சில சிறிய தீவுகளை தன்னுடைய அயலகப் பகுதிகளாக (British overseas Terrirories) வைத்திருந்தது (இன்று இந்தியாவில் யூனியன் பிரதேசங்கள் என்றிருப்பவை இந்தக் கருத்தாக்கத்திலிருந்து உதித்தவைதான்) சில இந்தியா போல முற்றிலும் தன்னாட்சி கொண்ட குடியரசுகள். இவை எல்லாவற்றிற்கும் சேர்த்து, ஐ.நா. சபை போல ஒரு பன்னாட்டு அமைப்பை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஐ.நா.வின் முன்னோடியான லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற அமைப்பை உருவாக்கிய லார்ட் டேவிஸ், சர்ச்சிலின் ஆலோசனைப்படி ஓர் அமைப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டார். அதுதான் காமன்வெல்த். இன்று அதில் 53 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன, அவற்றில் முப்பது நாடுகள் சிறியவை (பெரும்பாலும் தீவுகள்).
பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த எல்லா நாடுகளும் அதில் உறுப்பினர்களாகி விட்டனவா?
இல்லை. எகிப்து, ஈராக், இஸ்ரேல் (அதற்கு முன்பு பிரிட்டிஷ் பாலஸ்தீனம் என்று பெயர்), சூடான், சோமாலியா, குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார், அமீரகம், மியான்மர், ஏடன் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இணைந்து கொள்ளவில்லை. புரட்சிக்குப் பின் ஃபிஜி நீக்கப்பட்டுவிட்டது. ஜிம்பாப்வே விலகிக் கொண்டுவிட்டது. ஹாங்காங் சீனாவோடு சேர்ந்த பின் உறுப்பினராக இல்லை. இங்கிலாந்திற்கு மிக அருகில் இருக்கும் அயர்லாந்து ஆரம்பத்திலிருந்தே உறுப்பினராக இல்லை.
இந்தியா?
இந்தியா 1950-இல் குடியரசாக மலர்ந்தபோது காமன்வெல்த்தில் இணைந்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், காமன்வெல்த் நாடுகள் இங்கிலாந்து அரசர் அல்லது அரசியின் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். கட்டுப்பாடற்ற உறவைக் கொண்ட சுதந்திர நாடு (free association pf its independent member) என்ற அடிப்படையில் சுதந்திரமான, சமமான உரிமைகள் கொண்ட உறுப்பினராக ஏற்பதானால் இணைகிறோம் என கிருஷ்ண மேனன் ஒரு கடிதம் எழுதினார். 1949-இல் லண்டனில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் பிரதமர்கள் மாநாட்டில் இந்தியாவின் நிபந்தனை ஏற்கப்பட்டது (கிருஷ்ண மேனனின் இந்த வாக்கியம் இப்போதும் அந்த லண்டன் பிரகடனத்தில் இருக்கிறது). இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவிற்கு அளித்ததைப் போன்ற உறுப்பினர் அந்தஸ்தை தனக்கு அளிக்க வேண்டும் எனக் குரலெழுப்பியது. அதைத் தொடர்ந்து அதற்கும் அது அளிக்கப்பட்டது. இன்று அமைப்பில் உள்ள 53 நாடுகளும் சுதந்திரமும் சமநிலையும் கொண்ட உறுப்பினர்கள். அன்று ஏழையாக இருந்தபோதும் இந்தியா தன் நிலையை உறுதிபடக் கூறித் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. ஹூம்ம்ம் இன்று?
பிரிட்டிஷ் காலனியாக இல்லாத நாடு காமன்வெல்த்தில் உறுப்பினராக முடியாதா?
பிரான்ஸை சேர்க்க ஒரு முயற்சி நடந்தது. ஆனால், 1957-இல் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், முன்னர் ஜெர்மானியர் ஆதிக்கத்திலிருந்த ஆப்ரிக்க நாடான ருவாண்டா காமன்வெல்த்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
காமன்வெல்த்தில் இருப்பதால் என்ன லாபம்?
நேரடிப் பொருளாதார லாபம் இருக்கிறது எனச் சொல்வதற்கில்லை. கல்வி, மக்கள் நலம், பருவநிலை மாற்றம் போன்ற துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பும், உதவியும் கிடைக்கும். விளையாட்டு, ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும். காமன்வெல்த் நாடுகளில் உள்ள குடிமக்கள் இன்னொரு காமன்வெல்த் நாட்டிற்குச் செல்ல விரும்பினால் விசா இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று நீண்டநாள்களாகப் பேசப்பட்டுக் கொண்டேஏஏஏஏ இருக்கிறது. அது ஒருபோதும் சாத்தியமாகாது. ஐரோப்பிய யூனியனைப் போல காமன்வெல்த் யூனியன் என்ற ஒன்று உருவாக வேண்டும். அதில் பொதுக் கரன்சி, தடையற்ற வர்த்தகம் இதெல்லாம் இருக்க வேண்டும் எனச் சொல்லி வருகிறார்கள். இதுவும் நாளையே நடக்கக் கூடிய விஷயம் அல்ல. மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட ஜனநாயகம், பாலின சமத்துவம், மனித உரிமைகள் இவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்ட நாடுகள்தான் காமன்வெல்த்தில் இருக்க முடியும். எனவே காமன்வெல்த் நாடு என்றால் இவையெல்லாம் இருக்கிறது என உலகம் எண்ணும். ஆனால், இலங்கையைப் பார்த்தபின் இனியும் உலகம் நம்புமா?
இலங்கை மாநாட்டில் என்ன பிரச்சினை?
காமன்வெல்த்தின் அடிப்படைக் கொள்கைகள் 16. அவற்றில் ஜனநாயகம், மனித உரிமைகள், சமாதானம், பிற மத, இன, நிறத்தவர் குறித்த சகிப்புத்தன்மை, அவர்கள் பால் மரியாதை, அவர்களைப் பற்றிய புரிந்துணர்வு, கருத்து சுதந்திரம், அதிகாரப் பங்கீடு, சட்டத்தின் ஆட்சி, நல்ல ஆளுகை என்பன சில.
இலங்கையில் நடந்த போருக்கு முன்பும், போரின் போதும், பின்னரும் என்ன நடந்தன என்பதை விவரிக்கத் தேவையில்லை. மேலே குறிப்பிட்ட எதையும் இலங்கை கடைப்பிடிக்கவில்லை. இந்தக் காரணங்களுக்காகவே அதை காமன்வெல்த்திலிருந்தே விலக்கி வைக்கலாம். அப்படியிருக்க, அங்கு காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைவர்கள் மாநாடு நடைபெறுவது என்பது கேலிக்கூத்தாக அல்லவா இருக்கும்?
மாநாட்டை நடத்துவதால் இலங்கைக்கு ஏதும் ஆதாயம் உண்டா?
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் நாடுகளில் உள்ள அரசுகளின் தலைவர்கள், அதாவது ஜனாதிபதி அல்லது பிரதமர்கள் கூடி பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசுவார்கள். எந்த நாட்டில் மாநாடு நடைபெறுகிறதோ, அந்த நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர், காமன்வெல்த்தின் நிர்வாகத் தலைவராக (Chair person in office) இருப்பார் (நிரந்தரத் தலைவர் அரசி). இந்த முறை இலங்கையில் மாநாடு நடைபெறுவதால் 2015 வரை ராஜபக்ஷே தலைவராவார்.
முதலில் இந்த மாநாடு 2011-இல் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. அப்போதும் அதன் மீது போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கனடாவும், இங்கிலாந்தும் அங்கு மாநாட்டை நடத்த ஆட்சேபம் தெரிவித்தன. அதனால் ஆஸ்திரேலியாவில் மாநாடு நடந்தது. இப்போது இலங்கையில் நடைபெறுவது அந்தக் குற்றச்சாட்டுகள் மன்னிக்கப்பட்டதாக கருத இடமளிக்கிறது.
24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய நாடு ஒன்றில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்ற பெருமை இலங்கைக்குக் கிடைக்கும். நாங்கள் ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கிறோம், சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது, யுத்தத்திற்குப் பிறகு மீண்டுவருகிறோம் என உலகின் தலைவர்களுக்குக் காட்ட ஒரு வாய்ப்பாக இலங்கை இதைப் பயன்படுத்தும்.
இதில் கலந்து கொள்ளாவிட்டால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்பது உண்மையா?
இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறலைச் சுட்டிக் காட்டி கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். இங்கிலாந்தின் அயலுறவுத் துறைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கமிட்டி, மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் காமரூனுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இங்கிலாந்தில் ஆட்சியில் இல்லாத நிலையில், எதிர்க்கட்சி நிழல் அரசாங்கம் என்ற ஒன்றை அமைக்கும். அதற்கு அதிகாரங்கள் கிடையாது என்றாலும் ஒவ்வொரு துறைக்கும் ஒருவரை அமைச்சராக நியமித்து முக்கிய விஷயங்களை ஆராய்ந்து கருத்துக்களை அரசின் முன்னும் மக்கள் முன்பும் வைக்கும். அப்படி நிழல் அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சரான டக்ளஸ் அலெக்சாண்டர், மாநாட்டைப் புறக்கணிப்பதோடு காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை விலக்கி வைக்க வேண்டும் என்று கூடக் கோரியிருந்தார். எனவே, இந்தியா இந்த மாநாட்டைப் புறக்கணித்தால் தனிமைப்படுத்தப்படும் என்ற வாதத்தில் சாரமில்லை. காமன்வெல்த் நாடுகளில் மொத்தம் 200 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அதில் 117 கோடி மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அதாவது, காமன்வெல்த்தில் உறுப்பினராக உள்ள நாடுகளிலேயே இந்தியாதான் பெரிய நாடு. அதை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.
காமன்வெல்த் அமைப்பிலிருந்து அதன் உறுப்பு நாடுகளை விலக்க முடியுமா?
நீக்க முடியாது. ஆனால் இடைநீக்கம் செய்யலாம். பாகிஸ்தான் இரண்டு முறை இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 1999-இல் பர்வேஸ் முஷாரப் ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியபோது ஐந்தாண்டுகளுக்கு அது விலக்கி வைக்கப்பட்டது. பின் 2007-இல் இரண்டாம் முறை இடை நீக்கம் செய்யப்பட்டது. நைஜீரியா, ஜிம்பாப்வே, ஃபிஜி ஆகிய நாடுகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன
இதில் கலந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முடியாமல் போய்விடும், அது தமிழர்கள் நலனுக்குக் கேடாக அமையும் என்கிறார்களே?
மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம், நாம் இலங்கையுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்ளப் போவதில்லை. தூதர்கள் இருக்கும்வரை பேச்சுவார்த்தைகள் சாத்தியமே. அதுவும் தவிர, போரில் சிதைந்த இலங்கையைச் சீரமைக்கும் பணிக்கு இந்தியா ஏராளமாக உதவி வருகிறது. எனவே, இந்தியாவை எளிதாக இலங்கையால் புறக்கணித்துவிட முடியாது. அங்குள்ள தமிழர் கட்சிகளும், அண்மையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வட மாகாண அரசும் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன. அப்படியானால், இலங்கை அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தாமல் போய்விடுமா?
இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்?
இந்தியா, இலங்கையின் மீது அழுத்தத்தைக் கொண்டுவர இதை ஒரு வாய்ப்பாகப் பயனப்டுத்திக் கொண்டிருக்க வேண்டும். மாநாட்டில் கலந்துகொள்ள சில நிபந்தனைகளை விதித்து அவற்றை வற்புறுத்தியிருக்க வேண்டும். உலக நாடுகளுடன் உள்ள உறவை-குறிப்பாக கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் உள்ள உறவைப் பயன்படுத்தி அந்த நிபந்தனைகளுக்கு இலங்கையை இணங்க வைத்திருக்க வேண்டும். வைத்திருக்க முடியும். தன்னை உலகில் ஒரு வலிமையான தேசம் என நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானம் எந்த அளவு முக்கியத்துவம் கொண்டது?
இலங்கை விவகாரத்தில் இதற்கு முன்பும் தமிழக சட்டமன்றம் தீர்மானங்கள் இயற்றி இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். இது தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளின் நிலையை எதிரொலிக்கிறது. இந்தத் தீர்மானம் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேறியிருக்கிறது. இதற்கு முன்பும் பலமுறை இதைக் குறித்து முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரலெழுப்பி இருக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு மத்திய அரசு மாநாட்டில் பங்கேற்பது என முடிவு செய்தால் அது தமிழர்களின் உணர்வுகளை அது பொருட்படுத்தவில்லை, அலட்சியப்படுத்துகிறது என்றே பொருள். இங்கே ஓர் ஒப்பீடு தவிர்க்க முடியாததாகிறது.
காமன்வெல்த் அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றாத இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று கனடா நாட்டுப் பிரதமர் அறிவித்துள்ளார். தமிழர்கள் மிகக்குறைவாக வசிக்கும் கனடா நாடே இது போன்றதொரு முடிவை எடுத்துள்ள நிலையில், எட்டு கோடி தமிழர்கள் வசிக்கும் இந்தியா இது போன்ற முடிவு எதையும் அறிவிக்கவில்லை. ஏன்? தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
தமிழ்நாட்டிற்கு வெளியில் இருப்பவர்கள் இந்தப் பிரச்சினை பற்றி அக்கறை காட்டவில்லை என்கிறார்களே, அப்படியான நிலைமையில் இந்தத் தீர்மானத்தால் என்ன பயன்?
தமிழர்கள் அல்லாத இந்தியர்கள் இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்டவில்லை என்பது உண்மைதான். ஐ.நா.வின் பொதுச் செயலாளராக பான் கீ மூன் இருப்பதைப் போல காமன்வெல்த்தின் பொதுச் செயலாளராக ஒருவர் இருக்கிறார். அவர் ஓர் இந்தியர். அவர் பெயர் கமேலேஷ் சர்மா. இலங்கைப் போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் நிகழந்தபோது அவர் அதைக் கண்டித்து ஓர் அறிக்கை கூட வெளியிடவில்லை. காமன்வெல்த் தலைமைச் செயலகப் பணியாளர்கள் அவர் ஓர் அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டபோது கூட அவரது வேலை அல்ல எனச் சொல்லிவிட்டார். தமிழர் அல்லாத இந்தியர்கள், ஏன் உலக நாடுகள் இதில் அக்கறை காட்டாததற்கு அங்கு நடந்த பயங்கரவாதச் செயல்களும், நம் அரசியல் தலைவர்களின் கிணற்றுத் தவளை மனோபாவமும் ஓரு காரணம்.
பிரதமர் கலந்து கொள்வாரா?
அது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் அரசியல் காரணங்களை முன்னிட்டு அவர் தவிர்க்கலாம். 2011-இல் நடந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பாக துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பங்கேற்றார். அதைப் போல இம்முறையும் நடக்கலாம்.
இடையறாத எதிர்ப்பு
இலங்கைக்கு எதிராக தமிழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆனால், மத்திய அரசு அதைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை
அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது ஈவு இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகைசெய்ய வேண்டும்.
அதுவரையில் அனைத்துக் குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8.5.2011 தமிழக சட்டமன்றத் தீர்மானம்
2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது.
25.3.2013 அன்று, பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதம்
இலங்கை நாட்டை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இலங்கை இனப்போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேசப் புலன் விசாரணை நடத்த வேண்டும்.
இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில் போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திட வேண்டும்.
தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும்.
ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தனி ஈழம் குறித்து இலங்கைவாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திட, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 27.3.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம்
இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கவும், சிங்களர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளவும் எதிர்ப்பு.
இலங்கை ராணுவ வீரர்களுக்கு, இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது.
ஜூன் 2013-இல் பிரதமருக்கு முதல்வரின் கடிதம்
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
பெயரளவிற்குக் கூட ஒருவரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது.
இது போன்ற நடவடிக்கை, இலங்கைத் தமிழர்கள் மீது நியாயமான அணுகுமுறையை இலங்கை அரசு எடுக்க வழிவகுக்கும்.
17.10.2013 அன்று பிரதமருக்கு முதல்வர் கடிதம்
தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.
பெயரளவிற்குக்கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது.
இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும் சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
25 அக்டோபர் 2013 சட்டமன்றத் தீர்மானம்
குரல்கள்
மத்திய அரசு இனியும் தாமதம் செய்யாமல், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிப்பதே சரியாக இருக்கும் என்பதையும், பிரதமர் உடனடியாக அதற்கான அறிவிப்பைச் செய்யும் படியும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
- கருணாநிதி (திமுக)
கொழும்பில் காமன்வெல்த் மாநாடு நடப்பது, ஜீவகாருண்ய சபைக்கு கசாப்புக் கடைக்காரர் தலைவராக இருப்பதைப் போன்றது. இந்தத் தீர்மானத்துக்கு மத்திய அரசு எந்த அளவுக்கு மரியாதை தரும் என்பது புரியவில்லை.
-பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக)
உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் சமப்படுத்த வேண்டும். தமிழினம், தமிழ் வாழ வேண்டும். அந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொண்டால்தான் இலங்கையில் உள்ள தமிழர்களின் பொருளாதாரம் மேம்படும். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள வேண்டும்.
-மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்
அந்த மாநாட்டில் பெயரளவில் கூட இந்தியா கலந்து கொள்ளக்கூடாது.
-ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
காலனி ஆதிக்கத்தின் நினைவுச் சின்னமாகத் திகழும் காமன்வெல்த் என்ற அமைப்பே தேவையில்லை என்பது எங்களின் எண்ணம்
-சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)