.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 4 November 2013

உலக அளவில் பெரிய நிர்வாகச் சீர்கேடுடைய பொது விநியோகத் திட்டம!

தனது மக்களுக்குத் தேவையான அளவு உணவை வழங்காத நாடு எனப் பெயர் பெற்றது இந்தியா. எஃப்.ஏ.ஓ. எனப்படும் உணவு மற்றும் விவசாய இயக்கம் தனது 2006-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இந்தியாவில் 21 கோடியே 20 லட்சம் மக்கள் தரமான உணவை பெறவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் பல வருடங்களாக பொது வினியோகத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கும் நடைமுறை இருந்தபோதிலும், அந்த திட்டம் சரியான முறையில் நிர்வகிக்கப்படாததால், பல முறைகேடுகள் நடந்தேறியதால், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாடும் மக்கள் தரமான உணவைப் பெற முடியவில்லை.


nov 4 - edit food_security_

கிராமப்புறங்களில் சரிபாதிக்கும் மேலான குழந்தைகளும் சிறுவர்களும் ஊட்டச்சத்தான உணவை உட்கொள்ள முடியாமல் பசி பட்டினியில் வாடுகிறார்கள். ஆனால், இதே காலகட்டத்தில் நமது விவசாய உற்பத்தி அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது எனும் புள்ளிவிவரமும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கையில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சகாய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கான செலவினம் ஆண்டுக்கு ரூ.30,000 கோடி அளவில் செய்யப்படும் தகவலும் வெளியாகியுள்ளது. ஆக, விநியோகத் திட்டத்தை நிர்வகிப்பதில்தான் குளறுபடி என்பது நிரூபணமாகிறது.


“”மக்கள் பசியில் வாடும் நிலைமைக்குக் காரணம், அவர்களுக்குத் தேவையான உணவு இல்லை என்பதை விடவும், தேவையான உணவு மக்களிடம் போய்ச் சேரும்படி நிர்வாகம் நடக்கவில்லை என்பதே உண்மை” என நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், “”இந்தியாவின் ஏழ்மையும் பசியும்” என்ற பொருள் பற்றி பேசும்போது குறிப்பிடுகிறார்.
அதுபோலவே இன்றைய நிலையில் மத்திய அரசின் மிகப்பெரிய பசி நீக்கும் திட்டமான தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஏழை மக்களின் பசியைப் போக்கும் திட்டமாக வெற்றியடைய முடியுமா என்பது நம் நாட்டில் பொது விநியோகத் திட்டம் சரியான முறையில் நிர்வகிக்கப்படுவதில்தான் இருக்கிறது.


நமது பொது விநியோகத் திட்டம் என்பது ஒரு சல்லடையில் நீரை ஊற்றி பின் நீர் ஒழுகிறதே என நாம் குறை சொல்வது போன்ற கட்டமைப்பில் இருக்கிறது என்பது உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தெரியும். “மானிய விலையில் நம் நாட்டில் விநியோகிக்கப்படும் 59 சதவீத கோதுமையும் 39 சதவீத அரிசியும் பயனாளிகளைச் சென்றடைவதில்லை’ என சமீபத்திய புள்ளி விவரம் கூறுகிறது.


2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் மிகவும் வெளிப்படையாக “மிக அதிக அளவில் ரேஷன் கடைகளுக்கான உணவுப் பொருள்கள் கடத்தப்பட்டு வெளிமார்க்கெட்களில் விற்பனை செய்யப்படுகிறது’ என ஒப்புக்கொண்டார். அதுமட்டுமின்றி விநியோகத்திற்காக கிடங்குகளில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள்கள் அதிக அளவில் கெட்டு அழிந்து போகின்றன. 2008-ஆம் ஆண்டில் மட்டும் இந்திய உணவு கார்ப்பரேஷனின் கிடங்குகளில் 36,000 டன் உணவுப் பொருள்கள் சீரழிந்து போய்விட்டன. உணவுப் பொருள்கள் கெட்டுப் போவதும், திருடப்படுவதும், கள்ளக்கணக்கினால் காணாமல் போவதும் இதனுள் அடங்கும்.


உலக சுகாதார இயக்கத்தின் அளவுகோள்படி ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 250 கிராம் உணவு என்ற கணக்கின்படி இந்த அளவு உணவுப் பொருள்களை 14 கோடி மக்களுக்கு வழங்கியிருக்க முடியும்.


உணவுப் பொருள்கள் மட்டுமின்றி நீல நிறமாக்கப்பட்ட மண்ணெண்ணெயும் மானிய விலையில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படுகிறது. 2004-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி 39 சதவீத மண்ணெண்ணெய் கள்ளத்தனமாக வெளிமார்க்கெட்டில் விற்கப்படுகிறது.


ஆக இதுபோன்ற ஓட்டை ஒழுகலுடன் நடக்கும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் ஏழை, எளிய, கிராமப்புற மக்களின் பசிப்பிணியை நிவர்த்தி செய்து விடுவோம் என இன்றைய மத்திய அரசு கூறுவது ஏற்புடையதல்ல.


பொது விநியோகத் திட்டம் இந்தியாவில் முதன்முறையாக 1939-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் அன்றைய பம்பாய் நகரில் உணவுப் பொருள்களைச் சரியான விலைக்கு குறிப்பிட்ட மளிகைக் கடைகள் மூலமாக விற்பனை செய்தபோது தொடங்கப்பட்ட ஒரு நடவடிக்கை.


அன்றைய நிலைமையில் உணவுப் பொருள்கள் மார்க்கெட்டில் விலையேற்றத்தைச் சந்தித்தபோது, அரசின் கட்டுப்பாட்டில் விலைவாசி ஏற்றத்தைத் தடுக்க உருவாக்கப்பட்டது இந்தத் திட்டம். பின் 1943-ஆம் ஆண்டில் வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது கொல்கத்தா நகரில் முதன்முறையாக ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டு உணவுப் பொருள்களை அரசாங்கம் விநியோகம் செய்தது.


பிற்காலங்களில் இந்த ரேஷன் கடைகள் பல வகையிலும் சீர்செய்யப்பட்டு, சுதந்திர இந்தியாவின் மாநிலங்களில் ஏழை மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருள்களை வழங்கும் இடமாக 1992-ஆம் ஆண்டு உருவாகின. இன்றைய நிலைமையில் நாடெங்கிலும் சுமார் 4 லட்சத்து 62 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 18 கோடி ஏழைக்குடும்பங்கள் தரமான உணவுப் பொருள்களை மானிய விலையில் பெறுகின்றன. இதுபோன்ற பெரிய அளவிலான உணவு விநியோகம் உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லை எனக் கூறப்படுகிறது.


ஆனால், சரியாக நிர்வகிக்கப்படாததால், ஊழலும், பொருள்கள் சேதமும் பெரிய அளவில் நடைபெற்று, உலக அளவில் பெரிய நிர்வாகச் சீர்கேடும் இதுதான் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 2005-ஆம் ஆண்டில் மத்திய திட்டக் கமிஷன் நம் நாட்டின் பொது விநியோக முறையின் நிலைமையை ஆராய ஒரு கமிட்டியை நிறுவியது. அந்தக் கமிட்டியின் அறிக்கை அகில இந்தியாவிலும் மானிய விலையில் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய உணவு தானியங்களில் 58 சதவீதம் வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள மக்களைச் சென்றடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது.
இதற்கான காரணம், ஏழைக் குடும்பங்களைக் கணக்கிடுவதில் ஏற்படும் தவறு, ஊழல் மற்றும் திட்டமிட்ட திருட்டு என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய் உணவு தானியம் கிடைக்க அரசு 3.65 ரூபாய் செலவிட்டது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்படி அரசின் பணம் ஒரு ரூபாயில் 27 பைசாதான் ஏழை மக்களைச் சென்றடைந்தது எனலாம்.


பிகார், பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் மிக அதிக அளவில் (75 சதவீதம் வரை) உணவு தானியங்கள் திருடப்பட்டன. ஹரியாணா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 50 சதவீத பொருள்கள் கொள்ளை போயின. அசாம், குஜராத், ஹிமாசல பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 25 சதவீதம் உணவு தானியங்கள் ஏழை மக்களைச் சென்றடையவில்லை எனவும் கமிட்டி சுட்டிக் காட்டியது. ஆந்திரம், கேரளம், ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில்தான் 25 சதவீதத்திற்கும் கீழ் உணவுப் பொருள்கள் களவாடப்பட்டு வெளிச்சந்தையில் விற்கப்பட்டனவாம்.


இதுபோன்று வேறு சில கமிட்டிகளும் 2007 மற்றும் 2011-ஆம் ஆண்டு பொது விநியோகத் திட்டத்தை ஆராய்ந்து அறிக்கைகள் அளித்தன. அவ்வறிக்கைகளின்படி இத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு மூன்று அடிப்படைக் காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று, ஏழைக் குடும்பங்களைப் பட்டியலிடுவதில் உள்ள குளறுபடி. வசதி படைத்தவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவதும், ஏழைகள் விடுபடுவதும்தான் இந்தக் குளறுபடிக்குக் காரணம். இரண்டாவதாக, சரியான கணக்கீடு இல்லாமையால் ஒரே நபர் பல ஊர்களின் பட்டியல்களில் இடம்பெறுவதும், சிலர் எந்தப் பட்டியலிலுமே சேர்க்கப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது. மூன்றாவதாக, பொய்யான நபர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உரிய தானியங்களை ரேஷன் கடைகளில் வேலை செய்பவர்களும் கீழ்நிலை அரசு ஊழியர்களும் கடத்தி வெளிச்சந்தையில் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.


“மிகவும் தவறான பொது விநியோகத் திட்டத்தின் மூலம் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பகல் கனவே’ எனக் கூறுவோரும், “அரசு ஊழியர்களை உபயோகிக்காமல் கணினிமயமாக்கிய நடைமுறையில் உணவு விநியோகத்தைச் சரிசெய்யலாம்’ எனக் கூறுவோரும் உள்ளனர்.


“கணினியை இயக்குபவர்களும் தவறு செய்யலாமே’ என சந்தேகிப்பவர்களும் உண்டு.


“சரி நமது நாட்டில் எல்லா நடவடிக்கைகளிலும் ஊழல் பெருக்கெடுத்து ஓடுவதால் அரசு பணம் 1 ரூபாயை செலவு செய்து, அதில் 27 பைசாக்களாவது ஏழைகளைச் சென்றடைகிறதே’ என்று திருப்தியடைபவர்களும் உண்டு.


ஆனால் மிகுந்த சிரத்தையுடன் நமது தலைவர்களும் உயர் அதிகாரிகளும் பொது விநியோகத் திட்டநிர்வாகத்தின் ஊழல்களையும் சீர்கேடுகளையும் களைந்து ஏழை மக்களுக்குத் தரமான உணவு கிடைக்க வழிசெய்தால் சாமுவேல் ஜான்சன் கூறியது நிறைவடைந்து நமது நாகரிகம் அவர்களைப் பாராட்டும்.

 “”ஏழைகளுக்குச் செய்யப்படும் தரமான ஒரு சேவைதான் ஒரு நாகரிகத்திற்கான உண்மையான சோதனை” என்றார் அந்த மாமேதை!

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top