ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு எஸ்ஏ இன்ஜி. கல்லூரி மாணவர்கள் சாதனை
பூந்தமல்லி அருகே வீரராகவபுரத்தில் உள்ள எஸ்ஏ.பொறியியல் கல்லூரி மாணவர்கள் எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில்குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் விரிவுரையாளர் எச்.அன்வர் பாஷாவின் வழிகாட்டு தலின்படி முக அம்சங்களை கொண்டு ஓட்டுனரின் விழிப்புணர்வை கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கருவி மூலம் கண் அசைவை கண்காணித்து கார் ஓட்டுனரின் அயர்வை கண்டறியலாம். கண்காணிப்பு கருவி சென்சார் தகவலை பெற்று, ஓட்டுனரின் அப்போதைய ஓட்டும் திறனை குறிக்கிறது. சென்சாரில் உள்ள வீடியோ ஓட்டுனரை படம் பிடிக்கிறது. ஓட்டுனரின் சோர்வு குறிப்பிட்ட எல்லையை தொடும்போது எச்சரிக்கை மணி அடிக்கிறது.
இத்தகைய செயல்பாடுகள் மூலம் காரின் சொந்தக்காரரை எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை செய்து, ஜிபிஎஸ் மூலம் கார் இருக்கும் இடத்தை கண்டறிய உதவுகிறது. அசதி அளவை கணிக்க வேறு புற காரணிகளான வண்டியின் நிலை, வானிலை, தகவல்களை கணிக்கலாம். எதிர்காலத்தில் நபருக்கு நபர் உடல்நலக்குறைவு மற்றும் சிக்னல் வேறுபாடுகளும் ஆய்வு செய்யப்படும். இந்த கருவியை கண்டுபிடித்த மாணவர்களை கல்லூரி தலைவர் டி.துரைசாமி, செயலாளர் டி.தசரதன், இயக்குனர் பா. வெங்கடேஷ்ராஜா, முதல்வர் சுயம்பழகன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.