வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடங்கும்.
உங்கள் டூத் பிரஷில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பது என்ன தெரியுமா?
ஏராளமான கிருமிகளின் பண்ணையே அதற்குள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மூடி வைக்கப்படாத ஒரு டூத்பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடக்கம்.
வாய் நிறைய பாக்டீரியா
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர்கள் நம் வாயில் உற்பத்தியாகி, வாடகை கொடுக்காமல் வசிக்கின்றன. இது ஒரு பெரிய விஷயமில்லை. பிரச்சனை எப்பொழுது தொடங்குகிறது என்றால், இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை வழக்கத்துதிற்கு மாறாக அதிகரிக்கும் போது தான். பல்லைத் துலக்கும் போது நீங்கள் அகற்றுகிறீர்களே மஞ்சள் படிவுகள், அவை எல்லாமே பாக்டீரியாக்கள் தான். அவை உங்கள் வாய் என்ற வாடகை வீட்டிலிருந்து டூத் பிரஷ் என்ற அவுட் ஹவுஸுக்கு இடம் மாறுகின்றன.
பல் துலக்குவதால் எப்படி காயம் ஏற்படுத்துகிறது?
டூத் பிரஷ் மேலும் கீழும் இயங்கும் போது ஈறுகளைப் பின்னுக்கு அழுத்துவதால் காயம் ஏற்படுகிறது. இப்பொழுது டூத் பிரஷில் உள்ள கிருமிகள் மீண்டும் உங்கள் வாய்க்கு இடம் மாறுகிறது. உங்கள் வாய் பழக்கப்பட்ட இடம் தான் என்பதால், அவை பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் டூத் பிரஷை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவ்வளவு தான். கிருமிகள் ஜம்மென்று புது இடத்துக்குக் குடி போய்விடும். மேலும் குணமாகிவிட்ட வியாதிகள் கூட சந்தோஷமாகத் திரும்பி வந்துவிடும்.
டூத் பிரஷால் நீங்கள் நோயாளி ஆக வாய்ப்பிருக்கிறதா?
அநேகமாக இல்லை. என்ன தான் உங்கள் வாய் ஒரு கிருமிப் பண்ணையாக இருந்தாலும், உங்கள் வாய்க்கும் டூத் பிரஷுக்கும் இடையே கிருமிகள் தினசரி போக்குவரத்து நடத்தினாலும், உங்கள் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் செயல்பாட்டில் இருப்பதால், பல் துலக்குவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு.
கழிவறை இருக்குமிடத்தில் பல்துலக்காதீர்கள்
பெரும்பாலான குளியலறைகள் மிகச் சிறியவை. நிறைய வீடுகளில், கழிப்பிடமும், குளியலறையும் ஒன்றாகவோ அல்லது மிக அருகிலோ இருக்கும். ஒவ்வொரு முறையும் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது, அதன் மூலம் காற்றில் ஏராளமான பாக்டீரியாக்கள் சுற்றுலா செல்கின்றன. அதனால் டூத் பிரஷ்கள் அருகில் இருக்கும் போது, அவற்றின் மேல் ஏற்கெனவே பாக்டீரியா நண்பர்கள் இருப்பதால், அங்கேயே தங்கிவிடுகின்றன. அதனால் டூத் பிரஷ்களை உங்கள் கழிப்பறையிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளி வையுங்கள்.
டூத் பிரஷ் ஸ்டாண்டுகள் மற்றும் ஹோல்டர்கள்
பலரின் வாய்க்கிருமிகளும், கழிப்பறையிலிருந்து காற்றில் கலந்து வரும் கிருமிகளும் ஒன்றாய்ச் சங்கமிக்கும் இடமாக இது இருக்கிறது. வீட்டிலேயே மூன்றாவது அசுத்தமான இடம் இதற்குத் தான்.
டூத் பிரஷ் வைக்கும் குறிப்புகள்
* ஒவ்வொரு முறை பல் துலக்கியதும் குழாய்த் தண்ணீரில் நன்கு அலசிக் கழுவி உதறி வையுங்கள்.
* ஒரு முறை பிரஷ் செய்துவிட்டு, அடுத்த முறை பிரஷ் செய்வதற்கு இடைப்பட்ட நேரத்தில் அது நன்கு உலர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈரப்பதமான டூத் பிரஷ், பாக்டீரியாக்களுக்கு ஜாலியான தங்குமிடம் ஆகும்.
* தலைப்பாகம் மேலே வரும்படி நிறுத்தி வையுங்கள். டூத் பிரஷ்களை தனித்தனியாக நிறுத்தி வைக்கும் ஸ்டாண்டுகளை உபயோகியுங்கள்.
* உங்கள் டூத் பிரஷ் உங்களுடையது மட்டுமே. உங்கள் சகோதரி, சகோதரன், கணவன், மனைவி, ரூம் மேட் ஆகியோரிடம் நீங்கள் எவ்வளவு அன்புடையவராக இருந்தாலும் சரி, டூத் பிரஷ் ஒரு பகிர்ந்து கொள்ளும் விஷயம் இல்லை. இல்லை. இல்லை.
எப்பொழுது உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்?
ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் டூத் பிரஷை மாற்றி விட வேண்டும். உங்கள் டூத் பிரஷ் தேய ஆரம்பிப்பது, நீங்கள் நோயுற்றிருப்பதற்கோ அல்லது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்திருப்பதற்கோ அது அறிகுறி. அப்பொழுது நீங்கள் அடிக்கடி உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்.
வாயை நல்ல படியாகப் பராமரியுங்கள்
ஈறு சம்பந்தமான நோய்கள், பற்சிதைவு, பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை ஏற்படக் காரணம் பாக்டீரியாக்களே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைகள் பல் துலக்குவதும், ஃப்ளாஸ், வாயில் எண்ணெய் கொப்பளிப்பதும் பெரும்பாலான பாக்டீரியாக்களை வெளியேற்றிவிடும். பல் துலக்கும் முன்பாக பாக்டீரியாவை எதிர்க்கக் கூடிய மௌத் வாஷ் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதன் மூலம், வாயிலிருந்து பாக்டீரியா டூத் பிரஷுக்கு டிரான்ஸ்பர் ஆவதைத் தடுக்கலாம்.