
இலங்கையில் நவம்பர் 15-17-ல் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே வெள்ளிக்கிழமை தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.அந்த பயணத்தை ரத்து செய்யுமாறு அவரை மத்திய வெளியுறவுத் துறை ‘நட்புரீதியில்’ கேட்டுக்கொண்டதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இம்மாதம் இடைப்பட்ட வாரத்தில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது என தமிழக அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த வாரம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என அறிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த புதன் அன்று தில்லியில் கூடிய காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இந்தியா கலந்துகொள்ள முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி இந்தியாவிலிருந்து ஒரு துரும்பு கூட காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என எச்சரித்தார்.தமிழகத்தில் கொந்தளிப்பு கிளம்பியுள்ள இந் நிலையில் கோத்தபயாவின் இந்தியா வருகை காங்கிரசுக்கு அரசியல் நெருக்கடியை உருவாக்கும் என கருதப்பட்டது. இதை தொடர்ந்து கோத்தபய ராஜபட்சே தனது இந்திய பயணத்தை ரத்து செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.ஆனால் இது குறித்து தில்லி இலங்கை தூதரகத்தில் தொடர்புகொண்டு கேட்ட போது, கோத்தபய ராஜபட்சவின் இந்திய வருகை குறித்த தகவல் தம்மிடம் எதுவும் வரவில்லை எனக் கூறியிருக்கின்றனர்.



19:44
ram
 Posted in: