ஒரு பூகம்பமும் அதனைத்தொடர்ந்து நேரிட்ட ஆழிப்பேரலைகளும் இன்னமும் எவர் மனதில் இருந்தும் நீங்கியிருக்கப்போவதில்லை..
சுனாமி என்ற பெயரின் வலி படர்ந்த வலிமையை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உணர்த்திய அந்த நாள் டிசம்பர் 26.. இந்நாளின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் (26-12-2013) வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று உலகையே உலுக்கிய மறக்க முடியாத சுனாமி வந்து போன நாள். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் எழுந்த சுனாமி ஆழிப் பேரலைகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, இலங்கை என இந்தியக் கடலோர நாடுகளை சுழற்றிப் போட்டது. லட்சக்கணக்கானோர் இந்த சுனாமி கோர தாண்டவத்திற்கு உயிரிழந்தனர். தமிழகம் இந்த ஆழிப் பேரலைத் தாக்குதலில் பேரிழப்பை சந்தித்தது. நாகப்பட்டனம், கடலூர், கன்னியாகுமரி, சென்னை என தமிழக கடலோர மாவட்டங்கள் கடும் பாதி்ப்பையும், உயிரிழப்பையும் சந்தித்தன. ஆனால் நாகையும், கடலூரும்தான் மிகப் பெரிய அளவில் உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்களாகும்.
சுனாமி பேரழிவில் மிகுந்த பாதிப்படைந்து அதிர்ச்சியில் இருந்த மீனவ மக்கள் தற்போது மெல்ல, மெல்ல பழைய நிலைக்கு திரும்பிஉள்ளனர். இருப்பினும் தங்களது குடும்பத்தினரை இழந்ததை மறக்க முடியாமல் நினைவு தினத்தன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல், பிரார்த்தனையில் ஈடுபடுவதை கண்டு வேதனையளிக்கிறது. மேலும் சுனாமி பேரலையின் பயம் மீனவர்கள் மத்தியில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.