இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினுடன் ஜிஎஸ்எல்வி - டி 5 ராக்கெட் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று மாலை 4.18 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 11.18க்கு துவங்கியது. மொத்தம் 1982 கிலோ எடை கொண்ட ஜிசாட்-14 என்ற தொலைத்தொடர்பு செயற்கைகோளை இந்த ராக்கெட் விண்ணில் செலுத்த உள்ளது. ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் மொத்தம் 17 நிமிடங்கள் பயணம் செய்து ஜிசாட் - 14 செயற்கைகோளை பூமியிலிருந்து அதிகபட்சமாக 35 ஆயிரத்து 975 கிலோமீட்டர் தூரமும், குறைந்தபட்சம் 180 கி.மீட் டர் தூரமும் கொண்ட பாதையில் நிறுத்தும்.
இந்த 17 நிமிடங்களில், கிரையோஜெனிக் இன்ஜின் மட்டும் 12 நிமிடங்கள் இயக்கப்படும். தவிர எரிபொருள்களை எடுத்துச் செல்லும் 4 ஸ்ட்ராப் ஆன் மோட்டார்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் தகவல் தொடர்புகளை அளிக்கும் வகையில் 6 கே.யு. டிரான்ஸ்பாண்டர்கள், 6 இ.எக்ஸ்.டி, சி பாண்டு டிரான்ஸ்பாண்டர்கள், கே.ஏ. பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கோளின் ஆயுள் காலம் மொத்தம் 12 ஆண்டுகள் ஆகும். இன்சாட் - 3சி, இன்சாட் 4சிஆர், கல்பனா-1 ஆகிய செயற்கைகோளுக்கு அருகில் இது நிலைநிறுத்தப்படும்.
ஜிஎஸ்எல்வி-டி5 இந்தியாவின் 8வது ராக்கெட் ஆகும். இதில் 2வது முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினுடன் இந்த ராக்கேட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் ஆகஸ்ட் 19ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்பட இருந்தது. கடைசி நேரத்தில் ராக்கெட்டின் 2வது நிலை இன்ஜினில் இருந்து திரவ எரி பொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதால், ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஜிஎஸ்எல்வி கடந்து வந்த பாதை
ஜிஎஸ்எல்வி -டி 1 கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதியும், ஜிஎஸ்எல்வி- டி 2 2003ம் ஆண்டு மே 8ம் தேதியும், ஜிஎஸ்எல்வி- எப்-01 2004 செப்டம்பர் 20ம் தேதியும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
2006ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி - எப்-02 தோல்வியில் முடிந்தது.
ஜிஎஸ்எல்வி - எப்- 4 2007ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
ஜிஎஸ்எல்வி- டி 3 2010 ஏப்ரல் 15ல் செலுத்தப்பட்டது தோல்வியடைந்தது. ஜிஎஸ்எல்வி எப்-06- 2010 டிசம்பர் 25ம் தேதி செலுத்தப்பட்டதும் தோல்வியடைந்தது. தற்போது ஜிஎஸ்எல்வி டி-5 இன்று மாலை 4.18க்கு விண்ணில் ஏவப்படுகிறது.