.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 5 January 2014

உகந்த நேரத்தில் உணவின் அவசியம்...

 உகந்த நேரத்தில் உணவின் அவசியம்:-

உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பதை அறிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


காலை

காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை.

காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதியம்


மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.
காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள்.

மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

இரவு


இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

மற்றொரு ஆய்வு, "பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை" என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது. வேலை செய்பவர்களாக இருந்தால் இரவில் புரோட்டா போன்ற கடினமான உணவுகளை உண்ணலாம். குழந்தைகள், தூங்கச் செல்பவர்களுக்கு சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளே போதுமானது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top