ATMகளில் பணம் எடுக்க கட்டணம்: ரிசர்வ் வங்கி அனுமதி..!
ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.
தற்போது , வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.
அதே சமயம் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.
இனி வரும் காலங்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.