லிங்குசாமி இயக்கத்தில் தற்போது நடித்து வருகிற படத்தை அடுத்து வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சூர்யா. பொதுவாக மையக்கதையை மட்டும் சொல்லிப் படத்தைத் தொடங்கிவிடுவார் வெங்கட்பிரபு. ஆனால் இப்போது சூர்யா படத்துக்கான முழுமையான திரைக்கதையை எழுதிவிட்டுத்தான் படப்பிடிப்பு தொடங்கப்போகிறார் என்று சொல்கிறார்கள்.
அதெல்லாம் அப்படித்தான் சொல்வார், ஆனால் படப்பிடிப்புத்தளத்தில்தான் அவருக்குப் புதுப்புது யோசனைகள் வரும் என்றும் சிலர் சொல்கிறார்கள். எது எப்படியோ? வெங்கட்பிரபு படத்தில் சூர்யாவுக்கு இரட்டைவேடங்கள் என்பது மட்டும் உறுதியாம். அந்தப்படத்துக்குத் தற்போது வைக்கப்பட்டிருக்கும் பெயர், கல்யாணராமன். இரட்டைவேடம் என்று சொல்லிவிட்டு கல்யாணராமன் என்று பெயரும் வைத்தால் கமலஹாசனின் கல்யாணராமன் மற்றும் ஜப்பானில்கல்யாணராமன் ஆகிய படங்களின் நினைவு வரும். அதுபோன்ற ஒரு படத்தையே மக்கள் எதிர்பார்ப்பார்கள் அல்லவா? இந்தப்படமும் நகைச்சுவை பெருமளவில் கலந்த சண்டைப்படம் தானாம்.
பிதாமகன் படத்துக்குப் பிறகு சூர்யா, நகைச்சுவை கலந்த வேடங்களில் நடிக்கவில்லை என்பதால் அந்தப்பாணியில் ஒரு கதையைத் தயார் செய்தால், அண்மைக்காலமாக பார்த்துக்கொண்டிருக்கும் சூர்யாவை வேறுபடுத்திக்காட்டலாம் என்கிற வெங்கட்பிரபுவின் எண்ணம் செயலாக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் பலருடைய எதிர்ப்பை¬யும் மீறி வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டதற்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. லிங்குசாமியின் படம் முடிவதற்கு முன்பே இந்தப்படத்தைத் தொடங்கிவிடலாம் என்று முதலில் திட்டமிட்டிருந்தார்களாம். இப்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள்.