திட்டமிட்டு வெற்றியை எட்டுவதில், புகழ் பெற்று விளங்கியவர் லூயிஸ்.பி.லன்ட்வோர்க். நிகரில்லாத நிர்வாகியாய் திகழ்ந்ததோடு நிர்வாகவியல் சூத்திரங்களை எழுதி வெளியிட்டதிலும் இவருக்கு நிகர் இவரே!
இப்போது “விசா” என்ற பெயரில் உலகெங்கும் புகழ்பெற்றுள்ள அமெரிக்க வங்கியின் விரிவாக்கத்தை வெற்றிகரமாய் வழி நடத்தியவர் லன்ட்வோர்க். 1981ல் காலமான இவரின் வழிகாட்டுதல், நிர்வாக உலகில் இன்றும் வேத வாக்கியங்களாகப் போற்றப்படுகின்றன. அவற்றில் சில…
1. எல்லாவற்றையும் நீங்களே செய்யாதீர்கள். நீங்கள் செய்ய நினைப்பதை செய்யக் கூடியவர்களை நீங்கள் உருவாக்குங்கள். உடன் வைத்துக் கொள்ளுங்கள்.
2. மிக நல்ல திறமையாளர்களைத் தேர்ந்தெடுங்கள். அத்தகையவர்களைத் தேர்ந் தெடுப்பது கடினம். வேலைக்கு வைத்திருப்பது கடினம். ஆனால் அவர்களால் கிடைக்கும் ஆதாயத்தைக் கணக்கிட்டால், அவர்களால் ஆகிற செலவு மிகவும் குறைவு.
3. சராசரியான வெற்றிகளில் சந்தோஷம் அடையாதீர்கள். அதுதான் உங்கள் வளர்ச்சிக்குப் பெரிய எதிரி.
4. தவறுகள் நேர்கிறபோது, பிறர் மீது குற்றம் ……சுமத்தாமல் பொறுப்பேற்கிற மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
5. நேர நிர்வாகத்தில் குறியாயிருங்கள். தாமதங்களை ஒருபோதும் ஏற்காதீர்கள்.
6. இரண்டு விஷயங்களை சரியாகப் பராமரியுங்கள். ஒன்று, உங்கள் வாகனம். இன்னொன்று, உங்கள் ஆரோக்கியம்.
7. தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் நான்கு நிலைகள் உள்ளன. ஒன்று, பகிர்ந்து கொள்ள முடிவெடுப்பது. இன்னொன்று, யாருக்கு
அது தெரியலாம் என்று தீர்மானிப்பது. மூன்றாவது, எதுவரைக்கும் சொல்லலாம் என்று நிர்ணயிப்பது. இவை மூன்றையும் செய்தாலே எப்படிச் சொல்வது என்று எளிதாக வரையறுப்பீர்கள்.
8. போதிய உறக்கம், வேண்டிய உடற்பயிற்சி, சமச்சீரான உணவு. இவை உங்கள் நிர்வாகத் திறனை மேம்படுத்தும். உடற்பயிற்சிக்கு நேரமில்லை என்று சொல்லாதீர்கள். உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி, உடல் நலனைப் பாதுகாத்தால் வேலையை விரைவாகவே செய்யமுடியும்.