.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 6 January 2014

தொடரும் வெற்றிப்பட ஃபார்முலா...



சந்தேகமே வேண்டாம். தெலுங்கு சினிமாதான் ஒரே பாடம். தென்னிந்திய கமர்ஷியல் சினிமாவில் கால் பதிக்க நினைக்கும் அனைவரும் கசடற கற்க வேண்டிய பால பாடங்கள் ஆந்திராவில்தான் தயாராகின்றன.

ஆக்ஷனா... இந்தா பிடி என கொடுக்கிறார்கள். லோ பட்ஜெட் கொத்து பரோட்டாவா... எடுத்துக்கோ என பரிமாறுகிறார்கள். நெகிழ வைக்கும் குடும்பச் சித்திரங்களா... வாங்க வாங்க என அழைக்கிறார்கள். த்ரில்லரா... இந்த பயம் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என அலற வைக்கிறார்கள். மொத்தத்தில் எல்லா ஜானரையும் நீக்கமற கொடுக்கிறார்கள். க்ளாமருக்கான எல்லைக்கோட்டை பிரமாதமாக வரையறுக்கிறார்கள்.

1980களில் தமிழ்ச் சினிமா இப்படித்தான் இருந்தது என்பது கடந்தகால வரலாறானது நமது துர்பாக்கியம்.

இதெல்லாம் இட்டுக்கட்டிய கதைகள் என முஷ்டியை உயர்த்துபவர்கள் ரூம் போட்டு சென்ற ஆண்டு வெற்றிப் பெற்ற தெலுங்குப் படங்களை ஒரு பார்வை பார்த்துவிடுவது நல்லது.

அது வேற வாய்... இது வேற வாய்... என்று நக்கலடிக்க முடியாத அளவுக்கு இந்த ஆண்டும் ரவுண்டு கட்டி அடிக்க சுந்தரத் தெலுங்கு திரையுலகம் தயாராகிவிட்டது. அதை முரசடித்து அறிவிக்கும் விதமாகத்தான் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த நிநொக்கடினே (1) படம் சங்கராந்தியை (பொங்கலை) ஒட்டி வெளியாகிறது. ஆர்யா புகழ் சுகுமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர். இந்தப் படத்துக்காக மகேஷ் பாபு சிக்ஸ் பேக் ஆக மாறியிருப்பது படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. ஒளிப்பதிவு வேறு ரத்னவேலுவா... படம், ஸ்டைலிஷ் ஆக இருக்கும் என்று கூரை மீதேறி வசூல் அம்மன் கூவ ஆரம்பித்துவிட்டார். போதும் போதாததற்கு இந்தப் படத்தை முடித்துவிட்டு இயக்குநர் சீனு வைட்டாலா படத்தில் மகேஷ் பாபு நடிக்கப் போகிறார். தூகுடு மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு இருவரும் இணைகிறார்கள். ஸ்கிரிப்ட் ஒர்க் முடிந்துவிட்டது. அநேகமாக இந்தப் படம் ஆண்டு இறுதியில் வெளியாகும்.

இப்படி மகேஷ் பாபு குறித்து ஆர்ப்பாட்டமாக சொல்லிவிட்டு அவருக்கு சமமாக தெலுங்கு திரையுலகை ஆட்சி செய்யும் பவன் கல்யாண் குறித்து குறிப்பிடாவிட்டால் அலுவலகம் தேடி வந்து அடிப்பார்கள். காரணம், சம பலத்துடன் மோதிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் இருவரும்தான். இருவரும் கதாநாயகனாக அறிமுகமாகி இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார்கள். தவிர, கபார் சிங், கேமராமேன் கங்கா தோ ராம்பாபு, அதாரின்டிகி தாரென்டி என தொடர் வெற்றிப் படங்களை கொடுத்துவிட்டு சிம்மாசனத்தில் ஜம்மென்று பவன் கல்யாண் அமர்ந்திருக்கிறார். ஸோ, அதை தக்கவைக்கவும் மகேஷ் பாபுவுக்கு சவால் விடவும் தன் சார்பில் ஒரு படத்தை இந்த ஆண்டும் கொடுக்கிறார். அதுதான் கபார் சிங் 2. நடிப்பதுடன் இந்தப் படத்தை தயாரிப்பதும் பவன்தான்.

இந்தி சினிமாவை புரட்டப் போகிறேன் என்று சென்ற ஆண்டு சூளுரைத்த ராம் சரண், இப்போது பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டார். இருப்பதை தக்க வைத்துக் கொண்டால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருப்பவர், சென்ற ஆண்டே தயாராகிவிட்ட எவடு பட வெளியீட்டுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார். ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான பிருந்தாவனம் படத்தை எழுதி, இயக்கிய வம்சி பைடபள்ளிதான் எவடுவை இயக்கியிருக்கிறார். அதனால் எதிர்பார்ப்பும் இருக்கிறது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top