.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label சினிமா விமர்சனம்..!. Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம்..!. Show all posts

Thursday 2 January 2014

ரஜினிக்குப் பதிலாக அஜித்?




ரஜினி அடுத்து யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது தான் கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.


கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை இயக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.


ஆனால் , கே.எஸ். ரவிக்குமாரே, 'ரஜினிக்கு இப்போது படம் இயக்கவில்லை. இது வதந்தி' என்று சொல்லிவிட்டார்.


ஷங்கர், பி.வாசு, கே.வி. ஆனந்த் என்று பல பெயர்கள் அடிபட்டன.


அதில் இப்போது கே.வி.ஆனந்த் கழன்று கொண்டார். ரஜினிக்காகத் தயார் செய்த கதையை அஜித்திடம் சொல்லி ஓ.கே வாங்கிவிட்டாராம்.


ரஜினிக்குப் பதில் அஜித்தான் நடிக்கப் போகிறாராம் .


கௌதம் மேனன் படம் முடிந்த பிறகு, அஜித் கே.வி.ஆனந்த் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதற்குள் கே.வி.ஆனந்த் 'அனேகன்' படத்தை முடித்து விடுவாராம்.

நயன்தாராவுக்கு விருது நிச்சயம்!




வித்யாபாலனுக்கு பெரிய இமேஜை உருவாக்கிக்கொடுத்த 'கஹானி' படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கான 'அனாமிகா'வில் நயன்தாரா நடித்திருக்கிறார்.


ஆனால், இந்தப் படத்தின் முக்கிய சாரம்சமாக இருந்த கர்ப்பிணி கதாபாத்திரத்தை நார்மலாக மாற்றியிருக்கிறாராம் இயக்குநர் சேகர்முல்லா.


புதிதாக திருமணமான ஒரு பெண், காணாமல் போன தனது கணவரைத் தேடி வருவது போன்று படமாக்கியுள்ளாராம்.


ஆனால்,'கஹானி' படத்தில் கர்ப்பிணி என்பதுதான்  கதையின் அடிநாதமாக விளங்கியது.


'கஹானி' இந்தியா முழுக்க ஓடி விட்டதால், திரும்பவும் அதையே செய்கிறபோது ரசிகர்களுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.


அதனால்தான் இந்த பதிப்பில் நிறைய திருத்தங்களை செய்திருக்கிறேன் . 'அனாமிகா'வில் நடித்ததற்காக நிச்சயம் நயன்தாராவுக்கு விருது கிடைக்கும் என்கிறார் சேகர் முல்லா.

தமிழ் சினிமா 2013: உள்ளம் கவர்ந்த ஜோடிகள்!!




இயக்குநர்கள் எத்தனை செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும், திரையில் தெரியும் நாயகனும் நாயகியும்தான் ஒரு படத்தின் வெற்றிக்கான தூதுவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு பிடித்த நாயகன் - நாயகி காம்பினேஷன் ஹிட்டானால் அவர்களை நம் ரசிகர்கள் உள்ளங்கைகளால் தாங்குவார்கள். கமல்- SRIதேவி, ரஜினி - SRIபிரியா, பிரபு - குஷ்பு... என்று இதற்கு பல உதாரணங்கள் உண்டு. அந்த வரிசையில் கடந்த ஆண்டு ஹிட்டான ஜோடிகள்.

ஆர்யா – நயன்தாரா

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் அறிமுகமான இந்த ஜோடி அப்போதே பேசப்பட்டது. மீண்டும் ‘ராஜா ராணி’யில் ஜோடி சேர்ந்த இவர்களை ‘மேட் ஃபார் ஈச் அதர், ஜோடியாக ஜான் – ரெஜினா கதாபாத்திரங்களில் ‘ராஜா – ராணி’ படத்தில் வார்த்தெடுத்தார் இளம் இயக்குநர் அட்லி. படத்தில் ஜெய்யுடனும் நயன்தாரா நடித்திருந்தாலும், ஆர்யா – நயன்தாரா கெமிஸ்ட்ரியே பெரிதும் பேசப்பட்டது. மேலும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஆர்யா – நயன்தாரா திருமணம் என்ற உத்தியை பயன்படுத்தியதும் பரபரப்பைக் கிளப்பியது. ‘ராஜா – ராணி’ 30 கோடி வசூல் செய்தது மட்டுமல்ல, இந்தப் படத்தின் ஆடியோ, காலர் டுயூன் சந்தை. பண்பலையில் பாடல்கள் வரிசையில் முன்னணிஎன எல்லாவற்றிலும் கலக்கியது. ஆர்யாவுடன் இனி இணைந்து நடிக்கமாட்டேன் என்று நயன்தாரா சொல்லும் அளவுக்கு இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றது.

விஷால் – லட்சுமிமேனன்

தொடர்ந்து பாக்ஸ் ஆபீசில் தடுமாறிவந்த விஷாலுக்கு, இந்த ஆண்டு கைகொடுத்த படம் ‘பாண்டிய நாடு’. இதில் ஒரு சாமான்ய மதுரை இளைஞனாக நடித்த விஷாலுக்கு ஜோடியாக, ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியையாக கச்சிதமாகப் பொருந்தியிருந்தார் லட்சுமிமேனன். இந்தப் படத்தில் இவர்களது காதல் காட்சிகளுக்காகவே ரசிகர்கள் குவிந்தார்கள்.

சூர்யா – அனுஷ்கா
60 கோடிக்கு குறையாத வசூல் குவித்த சிங்கம் 2-ஆம் பாகத்தில், சூர்யாவின் காதலியாக, முதல்பாகத்தில் நடித்த அனுஷ்கா, 2 ஆம் பாகத்தில் கல்யாணத்துக்கு காத்திருக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். இளமைத்துள்ளலுக்கு ஹன்சிகா இன்னொரு கதாநாயகியாக இதில் சேர்க்கப்பட்டாலும், அனுஷ்கா – சூர்யா இடையேயான காதல் காட்சிகளுக்குதான் இதில் அதிக வரவேற்பு.

நஸ்ரியா – நிவின்

அல்போன்ஸ் புத்திரனின் இசை ஆல்பத்தில் நிவினுடன் ஜோடி சேர்ந்து யூடியூப் ரசிகர்களிடம் எக்குத்தப்பாக ஏற்கனவே பிரபலமாகியிருந்தது இந்த ஜோடி. மீண்டும் அதே அல்போன்ஸ் இயக்கத்தில் ‘நேரம்’ படம் வழியாக தமிழுக்கு அறிமுகமான இந்த ஜோடியின் இயல்பான, கவித்துவமான உடல்மொழியால் இவர்களை தங்களுக்கான ‘கனவு ஜோடியாக’ ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள். வெறும் 2 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படம், கதை சொன்ன விதத்துக்காக மட்டுமல்லாமல், நஸ்ரியா – நிவின் ஜோடிக்காவும் 9 கோடி வசூல் செய்து கலக்கியது.

ஜீவா - த்ரிஷா

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஜெசி கதாபாத்திரத்தில் தோன்றிய த்ரிஷாவுக்கு மீண்டும் அதைவிட சிறப்பான பாராட்டு கிடைக்கச் செய்த படம் ‘என்றென்றும் புன்னகை’. இந்தப் படத்தில் இளம் விளம்பர காப்பி ரைட்டர் ப்ரியாவாக – ஜீவாவை மனதில் வரித்துக்கொண்டு அவர் காதலைச் சொல்லமாட்டாரா என்று ஏங்கும் கதாபாத்திரத்தில் காட்டிய இயல்பும் நெருக்கமும் ரசிகர்களுக்கு ஜீவா - த்ரிஷா ஜோடியை மிகவும் பிடிக்க காரணமானது.

விஜய் – அமலாபால்

வியாபார ரீதியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கில் இருக்கும் ஹீரோக்களோடு ஜோடி சேர்ந்து வந்த அமலாபால், விஜயுடன் ஜோடி சேர்ந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தில் விஜய் – அமலா இடையிலான காட்சிகள் ரசனையாக அமைந்து விட்டதும், க்ளைமாக்ஸில் அமலா பால் திடீர் போலீஸ் அதிகாரி அவதாரம் எடுத்ததும் ரசிகர்களை கவர்ந்ததால் இந்த ஜோடி பேசப்பட்டது.

இந்த ஆண்டில் அஜீத்தின் ஆரம்பம் வெளியான போதிலும், அவர் இப்படத்தில் காதல்காட்சிகளில் அவ்வளவாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'ஆகோ' கதையைக் கேட்டு வியந்த அனிருத்!




இயக்குநர் ஷ்யாம் சொன்ன கதையைக் கேட்டு 'ஆகோ' படத்திற்கு இசையமைக்கிறேன் என்று அனிருத் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

நாயகனாக நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும், அவற்றை எல்லாம் தட்டிக் கழித்தே வருகிறார் அனிருத். தற்போதைக்கு திரையுலகில் இசை மூலமாக மட்டுமே தனது பங்களிப்பு என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார் அனிருத்.


'ஆகோ' என்ற படத்தை இயக்க இருக்கிறார் ஷ்யாம். ரெபெல் ஸ்டூடியோஸ் சார்பில் தீபன் பூபதி, ரதீஸ் வேலு ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் FIRST LOOK வெளியாகி இருக்கிறது. அனிருத்தை முன்னிலைப்படுத்தி படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. இதனால் அனிருத் நாயகனாக நடிக்க இருக்கிறாரா என்ற கேள்வி நிலவியது.


ஆனால், அனிருத் இப்படத்தின் கதையைக் கேட்டு இசையமைக்க மட்டுமே ஒப்புக் கொண்டிருக்கிறார். அனிருத்திற்கு இருக்கும் ரசிகர்களை மனதில் வைத்து, 'ஆகோ' படத்தின் FIRST LOOK போஸ்டரை அனிருத்தை பிரதானப்படுத்தி வடிவமைத்திருக்கிறார்கள்.


'ஆகோ' என்றால் ஆர்வ கோளாறு . மூன்று ஆர்வ கோளாறு இளைஞர்களின் ஆர்வத்தால் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் சாராம்சமே 'ஆர்வ கோளாறு' படத்தின் கதை என்றார் இயக்குநர் ஷ்யாம்.

Wednesday 1 January 2014

கமலுடன் மீண்டும் இணைகிறார் மீனா..?



விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி நடித்துக்கொண்டிருக்கும் கமல், அடுத்து லிங்குசாமி தயாரிப்பில், ரமேஷ்அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிப்பதாகத்தான் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில், மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ரிஷ்யம் படத்தில் தமிழ் ரீமேக்கில் கமலே நடிக்கயிருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.

மலையாளத்தில் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அப்படத்தின் ரீமேக் உரிமையை ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இதுவரை இந்த தொகைக்கு எந்த மலையாள படமும் விலைபோனதில்லையாம். அதனால் கமல் மாதிரி முன்னணி நடிகர்கள் நடித்தால் படத்தை பிரமாண்டமாக்கி பெரிய தொகையை எடுத்து விடலாம் என்று அவரை அணுகியுள்ளார்களாம். ஆனால் கமல்தரப்பு இன்னும் உரிய பதிலை சொல்லவில்லையாம். விஸ்வரூபம்-2 வந்த பிறகுதான் எதையுமே சொல்ல முடியும் என்று கூறி விட்டாராம்.

இந்தநிலையில், இந்த படம் கமலிடம் சென்று விட்ட தகவலை அறிந்த மீனா, மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த தான் தமிழில், கமலுக்கும் ஜோடியாக நடித்து விட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவ்வை சண்முகி படத்தில் கமலுடன் நடித்தவர் என்பதால், தான் அவருடன் நடிக்க தகுதி உள்ள நடிகைதான் என்பதால் சம்பந்தப்பட்டவர்களை அணுகி, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளாராம மீனா.

ஒருவேளை, கமல் மறுத்தால் பசுபதியை வைத்து படத்த இயக்குவோம் என்று மீனாவிடம் சொன்னபோது, அதனாலென்ன அவருடனும் குசேலன் படத்தில் நடித்திருக்கிறேனே. தமிழில் எந்தநடிகரை வைத்து இயக்கினாலும் ஹீரோயினி வாய்ப்பு எனக்குத்தான் தர வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டு வைத்திருக்கிறாராம் மீனா.

Tuesday 31 December 2013

மவுசு கூடிய ஸ்ரீதிவ்யா - மவுசு குறையாத நயன்தாரா...



 தமிழ் திரையுலகின் நடிகைகளை பொருத்தவரையில், ரசிகர்கள் மனதில் மீண்டும் ராணியாக அமர்ந்தார் 'நயன்தாரா'. எல்லா வருடத்தையும் போலவே இந்த வருடமும் நாயகியை முன்னிலைப்படுத்தி நிறைய படங்கள் வெளிவரவில்லை. 'ராஜா ராணி' படத்தில் நயன்தாரா மற்றும் 'விடியும் முன்' படத்தில் பூஜா ஆகிய படங்களைத் தவிர நாயகிகளைத் முன்னிலைப்படுத்தி எந்த ஒரு படமும் வரவில்லை.

முன்னணி நாயகிகளான அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா ஆகியோருக்கு சொல்லிக் கொள்ளுமளவில் எந்த ஒரு படமும் அமையவில்லை என்பது மிகப்பெரிய சோகமே. லட்சுமி மேனன், நஸ்ரியா ஆகிய புதுமுக நடிகைகளும் தங்களது பங்களிப்பை அளித்தார்களே தவிர, அவர்களுக்கும் முன்னணி நாயகிகள் நிலைமை தான்.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற ஒரு படத்தில் நாயகியாக நடித்ததின் விளைவு, ஸ்ரீதிவ்யா கால்ஷீட் டைரி 2014ல் ஃபுல்லாகிவிட்டது. 'ஊதா கலரு ரிப்பன்' பல படங்களுக்கான வாசலை ரிப்பன் வெட்டி திறந்துவிட்டது.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு முன்பு ஸ்ரீதிவ்யா நடிப்பில் 'காட்டுமல்லி', 'நகர்ப்புறம்' ஆகிய படங்கள் முடிந்தாலும் இன்னும் வெளிவரவில்லை. ஒரு படத்தின் ஹிட், 2014ல் ஜி.வி.பிரகாஷுடன் 'பென்சில்', அதர்வாவிற்கு ஜோடியாக 'ஈட்டி', விஷ்ணுவிற்கு ஜோடியாக 'வீர தீர சூரன்' என ஸ்ரீதிவ்யா பயங்கர பிஸி.

'ராஜா ராணி' படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தார் நயன்தாரா. ’மெளன ராகம்’ படத்தின் நிழல் தான் என்று அனைவரும் கூறினாலும் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து நாயகியாக நடித்தாலும், இவரது மார்கெட் குறையாதது இவரை மேலும் சந்தோஷமாக ஆக்கியது. 'ராஜா ராணி' படம் வெளிவருவதற்கு முந்தைய தினம் ட்விட்டர் தளத்தில் இவரது பெயர் இந்தியளவில் டிரெண்டானது தான் ஹைலைட்.

அஜித்துடன் நடித்த 'ஆரம்பம்' படமும் வசூலை குவிக்க நயன் மவுசு குறையவே இல்லை. 2014ல் பாண்டிராஜ் - சிம்பு படம், ஜெயம் ரவி - ஜெயம் ராஜா படம், 'கஹானி' தமிழ், தெலுங்கு ரீமேக்கான 'அனாமிகா' என நயனின் பட புக்கிங்களும் ஃபுல் ஸ்டாப் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

எதார்த்தமான பாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் லட்சுமி மேனன், அதே பாணியை தொடர்வாரா அல்லது தனது பாணியை மாற்றிக் கொள்வாரா என்பது போகப் போகத் தெரியும்.

2014ல் நாயகிகளை முன்னிலைப்படுத்தி அதிகமான படங்கள் வெளிவருமா என்பது கேள்விக்குறியே.

தமிழ் சினிமா 2013 ஒரு பார்வை




 தமிழ் திரையுலகை பொருத்தவரை 2013ம் ஆண்டும் காமெடி படங்களே பெரும் அளவில் வெளியாகின. பெரிய நடிகர்கள் படங்கள் வசூல் ரிதியில் முன்னணியில் இருந்தாலும், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சிறு நடிகர்களின் படங்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்தது.

மணிரத்னம், பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்களின் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. நலன் குமாரசாமி, நவீன் உள்ளிட்ட புதிய இயக்குநர்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்கள்.

காமெடி நடிகர்கள் பட்டியலில் சந்தானம் இல்லாத சில படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றது. சூரி, ’எதிர்நீச்சல்’ சதிஷ் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் தங்களது முத்திரையை பதித்தார்கள்.

மொத்தத்தில் புதிய இயக்குநர்கள் கவனம் ஈர்த்தனர். சிறு நடிகர்களின் படங்கள் வசூலை வாரிக் குவித்தன. புதிய கதைகளத்தில், புதிய நடிகர்கள் நடித்தால் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தமிழ் திரையுலகிற்கு உணர்த்தினார்கள் ரசிகர்கள்.

அவ்வகையில் 2013 ஜனவரி முதல் 2013 டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் வெளியான முக்கியமான படங்களும், அதற்கு கிடைத்த வரவேற்பையும் பார்க்கலாம்.

ஜனவரி : ஆரம்பமே அதிர்ச்சியளித்த 'அலெக்ஸ் பாண்டியன்'

'அலெக்ஸ் பாண்டியன்', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'சமர்' ஆகிய படங்கள் ஜனவரியில் வெளியான முக்கியமான படங்கள். பட்டித் தொட்டி எங்கும் விளம்பரப்படுத்தி, பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி விட வேண்டும் என்ற நினைப்புடன் ஸ்டூடியோ க்ரின் 'அலெஸ் பாண்டியன்' படத்தினை வெளியிட்டது. ஆனால் நடந்ததோ, 'எப்படி விளம்பரப்படுத்தினாலும் படம் பிடிக்கவில்லை' என்று நிராகரித்தனர் ரசிகர்கள். வருடத் தொடக்கமே கார்த்திக்கு அதிர்ச்சியளித்தது.

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் வெளியீட்டு சமயத்தில் பாக்யராஜ், 'இது எனது 'இன்று போய் நாளை வா' படத்தின் மறுபதிப்பு. ஆகையால் எனக்கு பணம் தர வேண்டும்' என்று கே.பாக்யராஜ் செய்த சர்ச்சையினிடையில் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் சந்தானம். சந்தானம், பவர் ஸ்டார் ஆகியோர் ரசிகர்களுக்கு லட்டை அளித்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளினார்கள்.

வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியான 'சமர்' போதிய வரவேற்பை பெறவில்லை. தியேட்டர்கள் கிடைக்கவிடாமல் செய்கிறார்கள் என்று பெரும் சர்ச்சையில் குறைவான திரையரங்குகளில் வெளியானாலும் மக்களால் கொண்டாடப்படவில்லை.

பிப்ரவரி : விஸ்வரூபமெடுத்த கமல்

'கடல்', 'டேவிட்', 'விஸ்வரூபம்', 'ஆதிபகவன்', 'ஹரிதாஸ்' ஆகிய படங்கள் பிப்ரவரியில் வெளியான முக்கியமான படங்கள்.

படத்தின் புகைப்படம் ஒன்றைக் கூட வெளியிடாமல், 'நெஞ்சுக்குள்ள' என்ற பாடல் மூலம் மக்களை திரையரங்கிற்கு இழுத்த படம் 'கடல்'. ஆனால் 'கடல்'க்கு உள்ளே போயிட்டு, மணிரத்னம் அளித்த சுனாமியால் மக்களுக்கு தலைவலியை உண்டாக்கி, நிராகரிக்க வைத்த படம். 'கடல்' மூலம் அதிர்ச்சியளித்தார் மணிரத்னம் என்றால், அவரது உதவி இயக்குநர் பிஜாய் நம்பியார் 'டேவிட்' மூலம் பேரதிர்ச்சி கொடுத்தார்.

கடும் சர்ச்சைக்கு இடையே பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது 'விஸ்வரூபம்'. முதலில் தமிழகத்தை தவிர இதர இடங்களில் வெளியானது. வரவேற்பை பெற்றது. கமல் ரசிகர்கள் கேரளா, பெங்களூர் என வெளியூர்களுக்குச் சென்று 'விஸ்வரூபம்' படத்தினை கண்டு களித்தார்கள். 'எனது ஆழ்வார்பேட்டை வீட்டை வைத்து படம் எடுத்திருக்கிறேன். படம் வெளிவராவிட்டால் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாவேன்' என்று கமல் கூறினார். ரசிகர்களோ அவருக்கு செக் மூலமாக பணத்தை அனுப்பி கமலை தங்களது அன்பால் அடிமையாக்கினார்கள். பின்னர் தமிழகத்திலும் படம் வெளியானது. படம் வெற்றியடைந்தவுடன் பணம் அனுப்பிய இதயங்களுக்கு நன்றியுடன் அவர்களது பணத்தை உரியவர்களுக்கே அனுப்பி வைத்தார் கமல்.

நீண்ட மாதங்கள் தயாரிப்பிற்கு பிறகு வெளியான அமீரின் 'ஆதிபகவன்' திரைப்படம், படம் பார்க்க வந்தவர்களை 'பகவானே.. படமா இது' என்று கேட்க வைத்தது. அமீர் இயக்கத்தில் வெளியாகி முற்றிலும் நிராகரிக்க படமாக 'ஆதிபகவன்' அமைந்தது. இப்படத்திற்காக ஜெயம் ரவியின் காத்திருப்பு வீணானது.

சினிமா விமர்சகர்கள் கொண்டாடிய படம் 'ஹரிதாஸ்'. குமாரவேலன் இயக்கத்தில் வெளியானது. திருமணத்திற்கு பிறகு சினேகா இப்படத்தில் நடித்தார். ஆட்டிஸம் பாதித்த சிறுவனை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருந்தார்கள். வசூல் ரீதியாக வரவேற்பை பெறாவிட்டாலும், அனைவரது பாராட்டையும் பெற்று தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களுள் ஒன்றாக இடம் பிடித்தது.

மார்ச் : 'பரதேசி' மூலம் திரும்பிய பாலா

'பரதேசி', 'வத்திக்குச்சி', 'சென்னையில் ஒரு நாள்', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய படங்கள் மார்ச்சில் வெளியான முக்கியமான படங்கள். 'அவன் இவன்' படத்தின் மூலம் சற்றே சறுக்கிய பாலா, மீண்டும் தனது எதார்த்த உலகிற்கு திரும்பிய படம் 'பரதேசி'. 'ரெட் டீ' என்ற நாவலை மையப்படுத்தி எடுத்தாலும், அதில் அதர்வா, வேதிகா போன்ற நடிகர்களை கதைக்கு ஏற்றார் போல் நடிக்க வைத்து 'பாலா இஸ் பேக்' என்று பேச வைத்தார். அதர்வாவின் திரையுலக வாழ்வில் முக்கியமான படமாக அமைந்தது ‘பரதேசி’.

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியானதால் பெரிதும் எதிர்பாக்கப்பட்டு, குச்சி தீப்பிடிக்காமல் தீப்பெட்டிக்குள் அடங்கிய படம் 'வத்திக்குச்சி'.

'டிராபிக்' என்ற வரவேற்பை பெற்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் 'சென்னையில் ஒரு நாள்'. விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரியளவிற்கு படம் சோபிக்கவில்லை.

பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'. பாண்டிராஜின் காமெடி பாணி இயக்கத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் இருவரையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய படம்.

ஏப்ரல் : பவர் கட்டானலும் இருப்பேன் என அடம்பிடித்த ராஜகுமாரன்


'சேட்டை', 'கெளரவம்', 'திருமதி தமிழ்', 'உதயம் NH4' ஆகிய படங்கள் ஏப்ரலில் வெளியான முக்கியமான படங்கள். 'டெல்லி பெல்லி' இந்தி படத்தின் தமிழ் ரீமேக் தான் 'சேட்டை'. ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா என முக்கியமான நடிகர்கள் நடிப்பில் வெளியானலும், இவங்களுக்கு எல்லாம் சேட்டை ஒவராயிடுச்சு என்று மக்கள் புறந்தள்ளிவிட்டார்கள். ராதாமோகன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கெளரவம்', படக்குழுவுக்கு கௌரவத்தை தரவில்லை.

'திருமதி தமிழ்' படத்தைப் பார்த்து விமர்சகர்கள், மக்கள் என அனைவருமே சிரித்தார்கள்; படம் பார்த்து அல்ல, படத்திற்காக ராஜகுமாரன் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து. ராஜகுமாரனின் மேக்கப்பும், அவர் கொடுத்த ’போஸ்’களும், முக்கியமாக அவரே அவருக்கு கொடுத்துக் கொண்ட 'சோலார் ஸ்டார்'பட்டமும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், படம் போஸ்டரில் மட்டும் நூறு நாளை வெற்றிகரமாகக் கொண்டாடியது.

சாதாரண கதையை வித்தியாசமான திரைக்கதை மூலம் சுவாரசியமாக்கலாம் என்று உணரவைத்த படம் 'உதயம் NH4'. விமர்சகர்களிடையே வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் எந்தவித பெரிய மாற்றத்தையும் செய்யவில்லை.

மே : சூது கவ்வும் நேரம்

'எதிர்நீச்சல்', 'மூன்று பேர் மூன்று காதல்', 'சூது கவ்வும்', 'நாகராஜ சோழன்', 'நேரம்', 'குட்டிப்புலி' ஆகிய படங்கள் மே மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். பாடல்கள் மூலமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'எதிர் நீச்சல்' மக்களிடையே வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது மட்டுமன்றி, சிவகார்த்திகேயனை முன்னணி நாயகனாக்கியது. தனுஷ் இப்படத்தின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளர் ஆனார்.

அர்ஜுன், விமல், சேரன் நடிப்பில் முன்னணி இயக்குநர் வஸந்த் இயக்கத்தில் வெளியான 'மூன்று பேர் மூன்று காதல்' படம் வரவேற்பைப் பெறவில்லை.

'சூது கவ்வும்' என்ற படத்தின் மூலம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் முக்கியமான இயக்குநர் ஆனார் நலன் குமாரசாமி. ப்ளாக் காமெடி களத்தில், தமிழக அரசியலை சாடி எடுக்கப்பட்ட படம். மணிவண்ணன் - சத்யராஜ் இணைப்பில் வெளியான 'நாகராஜ சோழன்' பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, படம் பார்த்தவர்களால் 'ம்ஹூம்.. அமைதிப் படை மாதிரி இல்லை..' என நிராகரிப்பட்டது.

'பிஸ்தா' என்ற YOUTUBEல் வெளியான பாடல் மூலம் படம் எப்போபா ரிலீஸ் என்று கேட்க வைத்த படம் 'நேரம்'. மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே வரவேற்பைப் பெற்றது.

சசிகுமார் நடிப்பில் வெளியான 'குட்டிப்புலி', விமர்சகர்கள் மத்தியில் எடுத்த கதையே தான் எடுத்திருக்கிறார்கள் என்று பேச்சு நிலவினாலும், வசூலில் பாய்ச்சல் காட்டியது 'குட்டிப்புலி'

ஜூன் : திக்குமுக்காடிய தில்லு முல்லுவும்...  அம்பேலான அன்னக்கொடியும்


'தீயா வேலை செய்யணும் குமாரு', 'தில்லு முல்லு', 'அன்னக்கொடி' ஆகிய படங்கள் ஜுன் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'தில்லு முல்லு' ஆகியவை காமெடியை நம்பி களமிறங்க, 'தீயா வேலை செய்யணும் குமாரு' மட்டுமே வரவேற்பைப் பெற்றது. ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படத்தினை ரீமேக் செய்து வெளியிட்டார்கள். ஆனால் ரஜினி நடித்தளவிற்கு சிவா நடிப்பு எடுபடாமல் பெட்டிக்குள் படுத்து விட்டது.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'அன்னக்கொடி' விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் வரவேற்பை இழந்து, 2013ல் படுதோல்வியை சந்தித்தது.

ஜூலை : ரஹ்மானுக்கு மரியாதை கொடுத்த மரியான்

'சிங்கம் 2', 'மரியான்', 'பட்டத்து யானை' ஆகிய படங்கள் ஜுலை மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். சூர்யா நடித்த 'சிங்கம்' படத்தின் இரண்டாம் பாகமாக 'சிங்கம் 2' வெளியானது. பரபரப்பான திரைக்கதை, பாட்டிற்கு டான்ஸ் ஆட அனுஷ்கா, காமெடிக்கு கைகொடுக்க சந்தானம், இளசுகளைக் கவர ஹன்சிகா, பரபர காட்சியமைப்பு, விறுவிறு வசனம் என பார்வையாளர்களை யோசிக்கக் கூட நேரம் கொடுக்காமல், வசூலை அள்ளியது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'மரியான்' வெளியானது. 'நீ வரணும் பனி', 'காசா இல்லடா...' என கலங்கடித்த தனுஷின் நடிப்பு, 'மரியான்.. உனக்காக காத்துட்டுருப்பேன்டா', 'வந்துரு வந்துரு' என்று அசத்தலான பார்வதி நடிப்பு, 'இன்னும் கொஞ்சம் நேரம்', 'எங்கே போன ராசா', 'கடல் ராசா நான்' என ஏ.ஆர்.ராஹ்மானின் துள்ளலான இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருந்தாலும் திரைக்கதை அமைப்பில் சொதுப்பலாகி, தோல்வியடைந்த படம்.

படம் தோல்வியடைந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கொண்டாடப்பட்டு, ‘மரியான்’ பாடல்கள் இன்றளவும் விரும்பிக் கேட்கப்படுகிறது.

விஷால் நடிப்பில் எதிர்பார்க்கப்பட 'பட்டத்து யானை' வெளியாகி தோல்வியடைந்தது.

ஆகஸ்ட் : விஜய்யை அதிரவைத்த ஆகஸ்ட்


'ஐந்து ஐந்து ஐந்து', 'ஆதலால் காதல் செய்வீர்', 'தலைவா', 'தேசிங்கு ராஜா', 'தங்க மீன்கள்' ஆகிய படங்கள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். வித்தியாசமான திரைக்கதை அமைப்புடன் வெளியான 'ஐந்து ஐந்து ஐந்து' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியானது 'ஆதலால் காதல் செய்வீர்'. தற்போதுள்ள இளைஞர்களின் வாழ்க்கைமுறை, யுவனின் மனதை கொள்ளை கொள்ளும் இசை என வரவேற்பைப் பெற்றது. ராமின் இயக்கத்தில் வெளியான 'தங்க மீன்கள்' போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், இந்தியன் பனோராமாவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றது.

'தலைவா' திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்று பெரும் சர்ச்சையில் சிக்கி, தயாரிப்பாளர் செய்தியாளர்கள் மத்தியில் அழுது, படத்தினை வெளியிட தமிழக அரசு உதவிட வேண்டும் என்ற விஜய் வீடியோ மூலம் பேசி என பலதரப்பட்ட முயற்சிக்கு பின் வெளியான படம் 'தலைவா'. போதிய வரவேற்பை பெறவில்லை, வசூலையும் பெறவில்லை.

எழில் இயக்கத்தில் விமல், சூரி நடிப்பில் வெளியான 'தேசிங்குராஜா' பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்தது. சிறிய பட்ஜெட்டில் வெளியாகி சூரியை முன்னணி காமெடி ராஜாவாக ஆக்கியது இந்த 'தேசிங்கு ராஜா'

செப்டம்பர் : சங்கம் தந்த செப்டம்பர்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மூடர் கூடம்', '6 மெழுகுவர்த்திகள்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'ராஜா ராணி' ஆகிய படங்கள் செப்டம்பர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். 'மூடர் கூடம்', '6 மெழுகுவர்த்திகள்', 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' ஆகிய மூன்று படங்களுமே விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட படம்.

நவீனின் அசத்தலான திரைக்கதை அமைப்பில் வெளியான 'மூடர் கூடம்', வி.சி.துரையின் உருக வைக்கும் திரைக்கதை, தூங்காமல் கண்ணுக்கு கீழே வீங்க வைத்து நடித்த ஷாம் ஆகிய வகையில் '6 மெழுகுவர்த்திகள்', மிஷ்கின் நடிப்பு, இயக்கத்தில் வெளியான 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' என விமர்சகர்கள் பாராட்டினாலும் மூன்றில் எந்த படமுமே வசூல் ரீதியாக வெற்றி பெறாதது சோகமே.

சிவகார்த்திகேயன் - சூரி - சத்யராஜ் காமெடி கதகளியில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வசூல் ரிதியில் பல முன்னணி நடிகர்களை கலங்கடித்தது. 'சிங்கம் 2' படத்தின் முதல் நாள் வசூலை பல இடங்களில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' முந்தியது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதிவ்யா இப்படத்தில் அறிமுகமாகி, ஜி.வி. பிரகாஷ் உடன்’பென்சில்’, அதர்வாவுடன் ‘ஈட்டி’, சுசீந்திரன் இயக்கத்தில் ‘வீரதீரசூரன்’ என படபடவென அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார். பலரையும் சந்தோஷப்படுத்தியது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

'மெளனராகம்' சாயலில் வெளியாகி இளைஞர்கள் கொண்டாடிய படம் 'ராஜா ராணி'. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் ஆகியோரின் பாத்திரப் படைப்பு, ஜி.வி.பிரகாஷின் இசை, ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு என ரசிகர்கள் மனதில் ‘ராஜா ராணி’ சிம்மாசனமிட்டது . குறிப்பாக, நீண்ட நாட்கள் கழித்து தமிழில் நாயகியாக நயன்தாரா நடித்து, அவரது ரசிகர்களை மகிழ்வித்தார்.

அக்டோபர் :அசத்தலான ஆரம்பம்.. ஆசைப்பட்டதை அடையாத பாலகுமாரன்


'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நய்யாண்டி', 'வணக்கம் சென்னை', 'ஆரம்பம்' ஆகிய படங்கள் அக்டோபர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள்.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி,எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்தது. இதனால் விஜய் சேதுபதி ஹாப்பி அண்ணாச்சியாக இருக்கிறார். தனுஷ் நடித்து, நஸ்ரியாவின் பஞ்சாயத்திற்கு இடையே வெளியான 'நய்யாண்டி', படம் பார்க்க வருபவர்களை நய்யாண்டி செய்தது.

அனிருத்தின் ஹிட்டடித்த இசையால் பெரும் எதிர்பார்க்கப்பட்ட 'வணக்கம் சென்னை', மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே வரவேற்பை பெற்றது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான 'ஆரம்பம்' வசூல் ரீதியில் கோடிகளை அள்ளியது. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த படத்தில் விமர்சகர்கள் கூறினாலும், அஜித் இருக்காரு.. அவருக்கு நாங்க இருக்கோம் என்று படம் பார்த்தார்கள் அஜித் ரசிகர்கள்.

நவம்பர் : தடைகளைத் தாண்ட வைத்த பாண்டிய நாடு

'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'பாண்டியநாடு', 'வில்லா (பீட்சா 2)', 'இரண்டாம் உலகம்', 'விடியும் முன்' ஆகிய படங்கள் நவம்பர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள்.

கார்த்தி - ராஜேஷ் - சந்தானம் கூட்டணியில் வெளியான 'ஆல் இன் ஆல் அழகுராஜா', அழுக்கு ராஜாவாக பெட்டிக்குள் முடங்கிக் கொண்டது. சுசீந்திரன் - விஷால் கூட்டணியில் வெளியான 'பாண்டியநாடு' விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, விஷால் எதிர்நோக்கிய ஹிட்டை பரிசாக அளித்தது. தொடர்ந்த வந்த தோல்விப்படத் தடைகளை விஷால் உடைத்தார்.

'பீட்சா' படத்தின் அடுத்த பாகமாக வெளியான 'வில்லா', முதல் பாகம் பெற்ற அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

செல்வராகவன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட 'இரண்டாம் உலகம்' வெளியானது. ஆனால், ரசிகர்களை எந்த உலகத்தில் இருக்கிறோம் நாம் என்று யோசிக்க வைத்து, சலிப்புடன் திருப்பி அனுப்பியது. 2013ல் படுதோல்வி அடைந்த படங்கள் ஒன்றாகவும் பெயர் பெற்றது.

பூஜா நடிப்பில் வெளியான 'விடியும் முன்' விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், வசூலில் வானம் விடியவில்லை.

டிசம்பர் : கல்யாண சாப்பாடும், பிரியாணியும்

'கல்யாண சமையல் சாதம்', 'பிரியாணி', 'என்றென்றும் புன்னகை', 'தலைமுறைகள்', 'மதயானைக்கூட்டம்' ஆகிய படங்கள் டிசம்பர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள்.

'கல்யாண சமையல் சாதம்' ADULT COMEDY என்ற வகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. வெங்கட்பிரபு - கார்த்தி இணைப்பில் வெளியான 'பிரியாணி' வெளியானது. கார்த்தியின் 'அலெக்ஸ் பாண்டியன்', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படங்களோடு ஒப்பீடு செய்து அதற்கு 'பிரியாணி' பரவாயில்லை என்று பேச்சுகள் நிலவுகின்றன.

அஹ்மத் இயக்கத்தில் வெளியான 'என்றென்றும் புன்னகை', படம் வெளியான நாளில் கூட்டம் இல்லையென்றாலும் இளைஞர்களுக்கு படம் பிடித்து WORD OF MOUTH மூலம் படத்திற்கு கூட்டம் அதிகரித்தது. பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான 'தலைமுறைகள்' விமர்சகர்கள் பாராட்டைப் பெற்றாலும், வசூலில் வெற்றி பெறவில்லை.

விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கும் 'மதயானைக்கூட்டம்' பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு கூட்டத்தை சேர்த்து இருக்கிறது என்பது இனிமேல் தான் தெரியும்.

2014 ல் கோடிகளைக் குவிக்க காத்திருக்கும் பாக்ஸ் ஆபிஸ்



 தமிழ்த் திரையுலகின் முக்கிய வியாபாரக் கேந்திரங்கள் திரையரங்குகள். பாக்ஸ் ஆபீஸ் என்று வர்ணிக்கப்படும் திரையரங்குகளின் வசூல் நிலவரம்தான் இன்றைய வணிகத் தமிழ்சினிமாவின் ‘பிராண்ட் ஈக்குவிட்டியாக’ வலம் வரும் மாஸ் ஹீரோக்களின் செல்வாக்கை நிலைநிறுத்தும் சக்தி. ஒரு ஹீரோவின் வசூல் உயர உயரத்தான், அவரது ஊதியமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படி வசூல் புலிகளாக இருக்கும் மாஸ் ஹீரோக்களின் பாய்ச்சல் வரும் ஜனவரி முதல் பொங்கல் ஜல்லிக்கட்டாகத் தொடங்க இருக்கிறது!


நடப்பு 2013 ஆம் ஆண்டைவிட எதிர்வரும், 2014 ஆண்டு கண்டிப்பாக மாஸ் ஹீரோக்களின் ஆண்டாக இருக்கப்போவது உறுதி. மேலும் இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், சினிமா ரசிகர்கள் என அனைவருக்கும் முக்கிய ஆண்டாக இருக்கப் போகிறது என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்! அப்படியென்ன ஸ்பெஷல்? ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என அனைத்து நடிகர்களின் படங்களும் வெளியாக இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், முன்னணி நடிகர்கள் அனைவருமே, முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்கள்.


2014ன் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகப் பாக்ஸ் ஆபிஸில் அஜித், விஜய் படங்கள் மோதவிருக்கின்றன. இப்படங்களைத் தொடர்ந்து கமலின் 'விஸ்வரூபம் 2', சிம்புவின் 'வாலு' ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் - கெளதம் மேனன், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யா - லிங்குசாமி, விக்ரம் - ஷங்கர் இணைப்பில் 'ஐ', சிம்பு - கெளதம் மேனன், சிம்பு - செல்வராகவன், சிம்பு - பாண்டிராஜ், தனுஷ் - கே.வி.ஆனந்த் இணையும் 'அநேகன்', வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் 'காவியத் தலைவன்', பாலா - சசிகுமார் இணையும் படம், ஆர்யா - விஜய் சேதுபதி -ஜனநாதன் இணையும் 'புறம்போக்கு', ஜெயம் ரவி - சமுத்திரக்கனி இணைப்பில் 'நிமிர்ந்து நில்', ஆர்யா - ராஜேஷ் இணையும் படம், சூர்யா - வெங்கட்பிரபு இணையும் படம், விஷால் - ஹரி இணையும் படம் உள்ளிட்ட படங்கள் 2014ல் வெளியாக இருக்கின்றன.


மேலே குறிப்பிட்டுள்ள படங்களைப் பார்த்தீர்கள் என்றால், அனைத்து நடிகர்களுமே முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடித்து வருகிறார்கள். இதனால் பாக்ஸ் ஆபிஸில், இப்படங்களுக்கு மிகப்பெரியளவில் ஒப்பனிங் இருக்கும். படமும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றால், பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை இருக்கும். 2014ல் இது போன்று, முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் இணைந்து பணியாற்றி வருவதால் விநியோகஸ்தர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. காரணம், அவர்களுக்கு எந்தப் படத்தினை வாங்கினாலும் கண்டிப்பாகக் கல்லா கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையை இது கொடுத்திருக்கிறது.


விநியோகஸ்தர்கள் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கை ஒன்று தான். அந்தக் கோரிக்கை, அனைத்துப் படங்களுமே போதிய இடைவெளி விட்டு வந்தால் நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும்,எங்களுக்கும் நல்லது என்பதுதான்.


டி.வி நிறுவனங்களுக்கு மத்தியிலும், எந்தப் படத்தின் உரிமை நமக்கு என்பதிலும் போட்டி நிலவி வருகிறது. தங்களது நிறுவனத்தின் விளம்பர வருவாய் குறைந்துள்ளதால், சன் டி.வி நிறுவனம் முக்கியப் படங்கள் அனைத்தையும் வாங்கி விளம்பர வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியிருக்கிறது. அஜித்தின் 'வீரம்', விஜய்யின் 'ஜில்லா', சூர்யா - லிங்குசாமி படம் ஆகியவற்றை வாங்கி வைத்திருக்கிறது.


சன் டி.வியைத் தொடர்ந்து, கலைஞர் டி.வி, விஜய் டி.வி, ஜெயா டி.வி, ராஜ் டி.வி, ஜி தமிழ் என முன்னணி டி,வி நிறுவனங்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்களது நிறுவனத்தினை டி.ஆர்.பியை ஏற்றுவதற்கு பிரபல நடிகர்களுடைய படங்களை வாங்கும் போட்டியில் இறங்கி இருக்கின்றன.


மொத்தத்தில் 2014ம் ஆண்டு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், டி.வி நிறுவனங்கள் என அனைவருக்கும் பண மழையில் நனைய வாய்ப்பு இருப்பது மட்டும் உறுதி.

எதிர்நீச்சலால் சங்கத் தலைவரான சிவகார்த்திகேயன்..!!!



 தமிழ் திரையுலகில் 2013ல் முன்னணி நடிகர்களின் படங்களை விட, புதிய நடிகர்களின் படங்கள் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது.

ரஜினி, விக்ரம்,சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. கமலின் 'விஸ்வரூபம்', அஜித்தின் 'ஆரம்பம்', சூர்யாவின் 'சிங்கம் 2' ஆகிய படங்கள் வசூலை வாரிக் குவித்தது.

படத்தின் வசூல் அளவில் முதல் இடத்தில் 'விஸ்வரூபம்', 'ஆரம்பம்', 'சிங்கம் 2' ஆகிய மூன்று இடங்களை பிடித்திருக்கிறது.

'ஆரம்பம்' 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்று செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.ஆனால், திரையரங்கள் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தரப்போ அந்தளவிற்கு வசூல் செய்ய வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். பாக்ஸ் ஆபிஸில் ரஜினியின் 'எந்திரன்' படம் மட்டுமே 100 கோடி வசூலைத் தாண்டியது என்றார்கள்.'ஆரம்பம்' தயாரிப்பாளர் வெளிப்படையாக வசூலைத் தெரிவிக்காத வரை, வசூல் 100 கோடி என்ற குழப்பம் தொடரத்தான் செய்யும்.

படத்தயாரிப்பாளருக்கு லாபம், வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபம், திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் என்றால் கண்டிப்பாக 'எதிர்நீச்சல்', 'சூது கவ்வும்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'பாண்டியநாடு', 'ராஜா ராணி', 'தேசிங்குராஜா' எனப்பட்டது.

விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில், "எங்களுக்கு அதிக லாபம் சம்பாதித்து கொடுத்த படங்கள் என்றால், 'எதிர்நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபம்', 'ராஜா ராணி'. மற்ற படங்களான 'சூது கவ்வும்', 'பாண்டியநாடு', 'தேசிங்குராஜா' ஆகியவை குறைந்த லாபம் சம்பாதித்தது” என்றார்கள்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'எதிர் நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஆகிய இரண்டு படங்களுமே கொடுத்த லாபத்தைப் பார்த்து, அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் 'மான் கராத்தே' படத்தின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது. சிவகார்த்திகேயன் படங்களின் வியாபாரம் குறைந்த காலத்தில் 20 கோடியைத் தொட்டு இருப்பது பல முன்னணி நடிகர்களை வியப்பில் ஆழ்ந்தியிருக்கிறது.

2013-ம் வருடத்தில் தடதடவென முன்னேறியது சிவகார்த்திகேயன் தான்.

தமிழ் சினிமா 2013 : மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த படங்கள்



 தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, விமர்சகர்களாலும் மக்களாலும் 10 படங்கள் நிராகரிப்பட்டது. மணிரத்னம், அமீர், பாரதிராஜா, செல்வராகவன், ராஜேஷ் போன்ற முக்கியமான இயக்குநர்களே 2013ல் சறுக்கியது தான் அதிர்ச்சி.

'கடல்', 'ஆதிபகவன்', 'அன்னக்கொடி', 'நாகராஜ சோழன்', 'அலெக்ஸ் பாண்டியன்', 'மரியான்', 'தலைவா', 'நய்யாண்டி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'இரண்டாம் உலகம்' ஆகிய படங்கள் 2013ல் படுதோல்வியை சந்தித்தன.

மக்களை மூழ்கடித்த 'கடல்'

'நெஞ்சுக்குள்ளே' பாடல் மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டினார் மணிரத்னம். படத்தின் நாயகன், நாயகி உள்ளிட்டோரின் லுக்கை போஸ்டராக வைத்து INTRODUCING GAUTAM KARTHIK, INTRODUCING THULASI என ஒவ்வொன்றாக வெளியிட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.

மணிரத்னத்தின் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, கார்த்திக்கின் மகன் ஹீரோ, ராதாவின் மகள் ஹீரோயின், மீண்டும் அரவிந்த்சாமி, வில்லனாக அர்ஜுன் என படத்தின் முதல் காட்சிக்கு ஞாயிற்று கிழமை மாலை மெரினாவில் இருக்கும் கூட்டம் போல அலை மோதியது. தியேட்டருக்குள் வந்த அனைவரையும் மூழ்கடித்து, 'இனிமேல் என்னை நம்பி வருவியா' என்று திணறடித்தார். முத்து கிடைக்கும் என நம்பி வந்தவர்களுக்கு கிளிஞ்சல்கள் அளித்து அனுப்பினார்கள்.

சுனாமி வந்த அடுத்த நாள் மெரினா பீச் எப்படி இருந்ததோ அப்படி தான் படத்திற்கு இரண்டாம் நாள் கூட்டம் இருந்தது. அந்தளவிற்கு மக்களால் முற்றிலும் நிராகரிப்பட்டது. இப்படத்தினை வாங்கி பாதிப்படைந்தது ஜெமினி நிறுவனம். அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை.

'பருத்தி வீரன்' இயக்குநரா 'ஆதிபகவனை இயக்கினார்?

இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் யுவன் என அனைத்து முன்னணி கலைஞர்களும் இணைந்து ரசிர்களை ஏமாற்றிய படம் 'ஆதிபகவன்'. நீண்ட மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் ஒரு புகைப்படத்தைக் கூட வெளியிடாமல் படத்திற்கு எதிர்பார்ப்பை கூட்டினார்கள். பத்தாக்குறைக்கு பவளக்கொடியாய் நீதுசந்திரா வேறு அவ்வப்போது பேட்டிகளில் ‘ஆதிபகவன்’ படம் குறித்து சிலாகித்தார்.

படத்தின் போஸ்டர்களில் கூட ’வில்லன் ’ஜெயம் ரவியின் படத்தை வெளியிடவில்லை. 2007ல் 'பருத்தி வீரன்' இயக்கிய அமீர் இயக்கத்தில் 6 ஆண்டுகள் கழித்து வெளிவந்தது 'ஆதிபகவன்'. படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே கேட்ட கேள்வி 'நிஜமாவே அமீர் இயக்கிய படமா இது?' என்பது தான்.

இமயத்தை கொடியில் தொங்க வைத்த 'அன்னக்கொடி'

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் 'அன்னக்கொடி'. தேனியில் படப்பூஜை போடப்பட்ட போது அமீர் நடிப்பதாக இருந்தது. ஆனால், அதற்கு பிறகு நடைபெற்ற பிரச்சினையால் கார்த்திகா, மனோஜ் நடிப்பில் வெளியானது.

மாமனாரின் காமவெறி, ஆண்மையற்ற கணவன் என சொதப்பலான கதையை 'அன்னக்கொடி'யாக எடுத்திருந்தார். நாம எதை படமாக எடுத்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று பாரதிராஜா நினைத்து விட்டார் போல.

'அன்னக்கொடி' வெளியான முதல் நாள் மாலையே கொடியில் ஒரு துணி கூட இல்லை. தப்பாக

அல்வா கிண்டிய மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணி

மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணியில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்ற 'அமைதிப்படை' படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்தது 'நாகராஜ சோழன்'. 'அமைதிப்படை' படத்தில் இருந்த சுவாரசியமான காட்சிகள் எதுவுமே 'நாகராஜ சோழன்' படத்தில் இல்லாதது பெரிய குறை. ‘அமைதிப்படை’யில் கிண்டிய அல்வாவை மறுபடி கிளறி மக்களுக்கு கொடுத்தார்கள்.. பழைய அல்வா அல்லவா.. புளித்துவிட்டது.

விளம்பரத்தை நம்பி களமிறங்கிய அலெக்ஸ் பாண்டியன்

பட்டித் தொட்டி எங்கும் விளம்பரப்படுத்தி, பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி விட வேண்டும் என்ற நினைப்புடன் ஸ்டூடியோ க்ரின் 'அலெஸ் பாண்டியன்' படத்தினை வெளியிட்டது.

கார்த்தி, அனுஷ்கா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்தனர். அரிவாளால் சுமோ டயரை வெட்டுவது, சுமோ வானுயர்விற்கு பறப்பது, டிரெய்னின் மீது வில்லன் ஆட்கள் துரத்துவது, சந்தானத்தின் டபுள் மீனிங் வசனங்கள் என படம் பார்க்கும் அனைவரையும் ரத்தக்களரியாக்கி ஒட வைத்தது.

பாட்டெல்லாம் ஹிட்டு.. படம்..? கடலோடு கூட்டு சேர்ந்த 'மரியான்'

ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'மரியான்' வெளியானது. 'நீ வரணும் பனி', 'காசா இல்லடா...' என கலங்கடித்த தனுஷின் நடிப்பு, 'மரியான்.. உனக்காக காத்துட்டுருப்பேன்டா', 'வந்துரு வந்துரு' என்று அசத்தலான பார்வதி நடிப்பு, 'இன்னும் கொஞ்சம் நேரம்', 'எங்கே போன ராசா', 'கடல் ராசா நான்' என ஏ.ஆர்.ராஹ்மானின் துள்ளலான இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருந்தாலும் சொதப்பலான திரைக்கதை அமைப்பால் தோல்வியடைந்தது மரியான்.

2013ல் ஆப்பிள், ஐ-டியூன்ஸ் தளத்தில் சிறந்த தமிழ் இசை ஆல்பமாக தேர்வானது 'மரியான்'

நமக்கும் எதிரிகள் இருக்கிறார்கள் என்று விஜய் உணர்ந்த 'தலைவா'

இயக்குநர் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம். 'நாயகன்' கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து, 'தலைவா' என்று படமாக்கினார்கள். விஜய்யின் போஸ்டர்கள் வெளியான போது, அரசியல் சார்ந்த படம் என்று பேச்சு நிலவியது.

'தலைவா' திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்று பெரும் சர்ச்சையில் கிளம்பியது. படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க போதிய போலீசார் இல்லை என்று தமிழக அரசு கூறியது. இறுதியாக தயாரிப்பாளர் செய்தியாளர்கள் மத்தியில் அழுதது, படத்தினை வெளியிட தமிழக அரசு உதவிட வேண்டும் என்று விஜய் வீடியோ மூலம் பேசியது உள்ளிட்ட பலதரப்பட்ட முயற்சிகளுக்கு பிறகு தான் ‘தலைவா’ வெளியானது.

படம் போதிய வரவேற்பையும் பெறவில்லை, வசூலையும் பெறவில்லை. தயாரிப்பாளருக்கு மட்டுமன்றி, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு நஷ்டத்தினை ஏற்படுத்தியது 'தலைவா'

தனுஷை பதற வைத்த 'நய்யாண்டி'


'வாகை சூட வா' இயக்குநர் சற்குணம் - தனுஷ் - நஸ்ரியா இணைப்பில் வெளியான படம் 'நய்யாண்டி'. நஸ்ரியாவின் சர்ச்சையால் படம் பரபரப்பானது. தேசிய விருது இயக்குநர் + தேசிய விருது நடிகர் கூட்டணி என்று நம்பி படத்திற்கு சென்றவர்களை நையாண்டி செய்தது நய்யாண்டி’

“சற்குணம் - தனுஷிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை” என்று ரசிகர்கள் நொந்தார்கள்.

இப்படத்தின் உச்சப்பட்ச காமெடியாக, ஓடாததால், படத்தை திரையரங்குகளிலிருந்து எடுத்த பிறகு, மலையாளத் தயாரிப்பாளர் ஒருவர் எனது கதையை திருடி படமாக எடுத்து விட்டார்கள் என்று போலீசில் புகார் அளித்தார்!

கோவம் வர்ற மாதிரி காமெடி செய்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா'


ராஜேஷ் - கார்த்தி - சந்தானம் இணைப்பில் வெளியான படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. தனது காமெடி படங்கள் மூலம், தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் ராஜேஷ். அவரே அந்த வட்டத்தை சுருக்கிக் கொண்ட படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'.

காமெடி என்கிற பெயரில் சந்தானத்தின் பேச்சு, 3 மணி நேர படம் என பல வகையில் பார்ப்பவர்களை இடைவேளையின் போதே கடுப்பேற்றியது படம்.

இருண்ட 'இரண்டாம் உலகம்'

செல்வராகவன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட 'இரண்டாம் உலகம்'. ஆர்யா, அனுஷ்கா நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். படம் தயாரிப்பிலேயே பல நாட்கள் இருந்ததால், ஹாரிஸ் ஜெயராஜ் மற்ற படங்களில் பிஸியாக, இறுதியில் அனிருத் பின்னணி இசையில் வெளியானது ‘இரண்டாம் உலகம்’.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, சொதப்பலான திரைக்கதையால் ஏமாற்றிய படம். கிராபிக்ஸ் காட்சிகளில் காட்டிய அக்கறையை திரைக்கதை அமைப்பில் காட்டியிருக்கலாம்.

ஹாரிஸ் ஜெயராஜ் மற்றொரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், "ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு பின்னணி இசையமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், பிரம்மாண்ட படம் எனக்கு பிடிக்கவில்லை. ஆகையால் தான் இந்த படத்திற்கு இசையமைத்தேன்" என்று பொறி வைத்து பேசி வியக்க வைத்தார்.

படம் பார்க்க வந்தவர்களை எல்லாம் இரண்டாம் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன் பேர்வழி என்று முட்டுச் சந்துக்குள் தான் கூட்டிச் சென்றார் செல்வராகவன். மூன்றாம் உலகம் விரைவில் என படத்தை முடித்து, "அய்யோ... மறுபடியும் முதல்ல இருந்தா..." என்று கேட்க வைத்தார்.

தமிழ் சினிமா 2013 : நெஞ்சுக்குள்ள குடியேறிய ரஹ்மான்



 2013ம் ஆண்டை பொருத்தவரை ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களே ஜொலித்திருக்கிறார்கள். மற்றவர்கள் மக்களின் மனதை வருடும் இசையை அளிக்கவில்லை.


மிகவும் குறைவான படங்களுக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், 2013ல் 'கடல்', 'மரியான்' ஆகிய இரண்டு படங்களின் பாடல்கள் மூலம் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இரண்டு படங்களுமே தோல்வியடைந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அப்பாடல்கள் மக்களால் இப்போதும் விரும்பிக் கேட்கப்பட்டு வருகிறது.


அதிலும், 'மரியான்' படத்தின் பாடல்கள் 'சிறந்த தமிழ் ஆல்பம்' என்று ஐ-டியூன்ஸ் தளத்தில் தேர்வாகி இருக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் தளத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார்.


ஏ.ஆர்.ரஹ்மானைத் தொடர்ந்து அனிருத் இசைக்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. 'எதிர்நீச்சல்', 'வணக்கம் சென்னை' ஆகிய இரண்டு படங்களின் இசை இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. 'எதிர்நீச்சல்' படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், "படத்திற்கு மிகப்பெரிய ஒப்பனிங் கிடைத்ததிற்கு அனிருத் இசை முக்கியமான காரணம்" என்று உளமாற பாராட்டினார். உண்மை நிலவரமும் அதுவே.


அது போலவே, 'வணக்கம் சென்னை' படத்திற்கும் பெரிய பலமாக அமைந்தது அனிருத் துள்ளல் மிகுந்த இசை. ஒரு டி.வி நிகழ்ச்சியில் “இசைக்கு இறையருள் தேவை என்பார்கள். என்னை பொருத்தவரை பாடலுக்கான களத்தினை கேட்டு விட்டு நான் அந்த மூடுற்கு போய் விடுவேன். அதான் இசை அதற்கு ஏற்றார் போல் இருக்கிறது” என்று அனிருத் கூறினார்.


'எதிர் நீச்சல்' படத்தில் இடம்பெற்ற "பூமி என்னை சுத்துதே" என்ற பாடல் எஃப்.எம்களில் அதிக முறை ஒலிபரப்பப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றது. 4000 முறைக்கும் மேல் அப்பாடல் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.


'தங்கமீன்கள்' படத்தின் 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்', 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தின் 'மெல்ல சிரித்தால்' உள்ளிட்ட சில பாடல்கள் மட்டுமே யுவன் இசையில் வரவேற்பை பெற்றன. 'தலைவா' படத்தில் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா', 'உதயம் NH4' படத்தின் 'யாரோ இவன்' உள்ளிட்ட சில பாடல்கள் மட்டுமே ஜி.வி.பிரகாஷ் இசையில் வரவேற்பை பெற்றன. படத்தின் மொத்த பாடல்களுக்கும் வரவேற்பு கிடைக்கும் வாய்ப்பு இருவருக்குமே அமையவில்லை. 'என்றென்றும் புன்னகை' படத்தின் இசை மூலம் ஹாரிஸ் ஜெயராஜ் இளைஞர்கள் மத்தியில் பேசப்பட்டார்.


சந்தோஷ் நாராயணன் இசையில் 'சூது கவ்வும்' படத்தின் 'காசு பணம் துட்டு மணி மணி' பாடல் வரவேற்பை பெற்றது. அவரது பின்னணி இசை பலரது கவனத்தை ஈர்த்தாலும், பாடல்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு இன்னும் அவர் இசையமைக்கவில்லை.


2013ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் ஆகியோருக்கு முக்கியமான ஆண்டாகவும், யுவன், ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட மற்ற இசையமைப்பாளர்களுக்கு பேர் சொல்லும் ஆண்டாக அமையவில்லை.

மிகச் சிறந்த தாய்...!



தனது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன் மிகச்சிறந்த தாயாக தனது மகள் ஆராத்யாவை வளர்த்து வருவதாக நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் - ஜெயாபச்சன் தம்பதியினரின் மகனும், நடிகருமனான அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது 2 வயதில் ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி மிகச் சிறந்த தாயாக தனது கடமைகளை நிறைவேற்றி வருவதாக மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

மேலும், அவர் முன்னாள் உலக அழகியும், தனது மனைவியுமான ஐஸ்வர்யா ராய் குறித்து கூறியிருப்பதாவது,

'ஐஸ்வர்யாவின் தொழில் பக்தி மற்றும் அர்ப்பணிப்பு குறித்து கேள்விக்கு இடமில்லை. 2 வயது மகள் ஆராத்யாவை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்டு அன்புடன் வளர்த்துவரும் ஐஸ்வர்யா, ஒரு மிகச் சிறந்த தாயாக விளங்குகிறார். ஒரு இணை நடிகராக, அவருடன் பணியாற்றுவதை மிகவும் விரும்புகிறேன். இது எனக்கு மிகுந்த சந்தோஷமே.

திரை உலகத்திலிருந்து மகள் ஆராத்யாவை பாதுகாக்கவே நானும், ஐஸ்வர்யாவும் விரும்புகிறோம். குழந்தையின் பெற்றோராக மகள் ஆராத்யா, ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவே நாங்கள் இருவரும் விரும்புகிறோம். ஊடகங்கள் மற்றும் திரை பத்திரிக்கைகளில் இருந்து நான் பாதுகாக்கப்பட்டேன்.

எனக்கு 18 வயது இருக்கும்போது, முதலாவதாக திரைப்பத்திரிக்கை ஒன்றில் வந்தேன். எனவே நட்சத்திரங்களின் குழந்தைகளை புகைப்படம் எடுப்பதிலிருந்து ஊடகங்கள் கட்டுப்பாடு காட்ட வேண்டிக்கொள்கிறேன்' என என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

கூகுளில் இந்தாண்டு அதிகமாக தேடப்பட்டோர் பட்டியல் பார்த்தாச்சா?




ஆண்டுதோறும் கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப் பட்டோர் பட்டியலை அறிவிப்பது வாடிக்கை. அந்த வகையில் தற்போது http://www.google.com/trends/topcharts  என்னும் இணையத்தில்  இந்தாண்டு யாரெல்லாம் இடம் பிடித்திருக்கிறார்கள் என்பதை  தெரிந்து  கொள்ளலாம். இந்தப் பட்டியலின்படி இணையதளத்தில் மிக அதிகமாக தேடப்படும் அரசியல் தலைவராக பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இருக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் முதல் இவரைப் பற்றி மிக அதிகமானவர்கள் தேடி வருவதாக கூகுள் நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.அவருக்கு அடுத்த இடத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பிடித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.

கூகுள் இணையதளத்தில் 2013 -ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்தில் இருக்கிறார். தேடப்பட்டவர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்திற்கு வந்ததற்கு ‘தலைவா’ படப் பிரச்சினைதான் முக்கிய காரணம் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது. ‘தலைவா’ படம் வெளியாகத் தாமத மானதைத் தொடர்ந்து அரசுடன் அவருக்கு பிரச்சினை என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து வலைத்தளங்களிலும் அப்படத்தைப் பற்றியும், விஜய்யைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதோடு பல்வேறு அரசியல் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.அரசியல் சார்ந்த படம், வெடி குண்டு மிரட்டல்கள் என ‘தலைவா’ படத்தைப் பற்றி அதிகமாக விவாதிக்கப்பட்டதும் அவரைப் பற்றி இணையதளத்தில் தேட முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகராக சல்மான்கானும், நடிகையாக வழக்கம்போல் காத்ரினா கைஃபும் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

உலக அளவில் சார்லி சாப்ளின் போல் விவேக் புகழ்பெற வேண்டும்: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு!







விவேக் கதாநாயகனாக நடித்த 'நான்தான் பாலா' என்ற படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்தது. பாடல்கள் மற்றும் டிரைலரை டைரக்டர் பாரதிராஜா வெளியிட, டைரக்டர் கே.பாலசந்தர் பெற்றுக்கொண்டார்.


விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது:-


''கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் ஆகிய மூவரும் தமிழ் திரையுலகின் மிக திறமையான இயக்குனர்கள். தமிழ் மண்ணின் கலாசாரத்தை படமாக கொடுத்தவர்கள்.


இசையும், பாடல்களும் சந்தோஷத்தையும் தரும். சோகத்தையும் தரும். நகைச்சுவை எப்போதுமே சந்தோஷத்தை மட்டும் கொடுக்கும். நான் வெளியூர் பயணங்களின்போது, யு-டியூப்பில் விவேக் நடித்த நகைச்சுவை காட்சிகளை பார்த்து ரசிப்பேன். அவர், தமிழ் திரையுலகுக்கு கிடைத்த வரப்பிரசாதம். சார்லி சாப்ளின் உலக அளவில் புகழ்பெற்றது போல் விவேக்கும் புகழ்பெற வேண்டும்.''


இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் பேசினார்.


விழாவில் டைரக்டர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கண்ணன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் கேயார், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தலைவர் விக்ரமன் ஆகியோரும் பேசினார்கள். நடிகர் விவேக் வரவேற்று பேசினார்.

பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து நீடிக்கிறது என்றென்றும் புன்னகை



ஜீவா, திரிசா, வினய் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த டிசம்பர் 20ல் வெளியான என்றென்றும் புன்னகை இரண்டாவது வாரமான இந்த வாரத்திலும் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் நீடித்துவருகிறது.

ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் மற்றும் டாக்டர் ராமதாஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இப்படத்தை ஐ.அகமது இயக்கியிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

நட்பினை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இப்படம் பெரும்பாலான திரைவிமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்
பெற்றிருந்தது. உணர்ச்சிப் பூர்வமான படமாகவும், தங்களது இளமைக்கால நட்பினை ஞாபகப் படுத்தும் விதமாகவும் இருப்பதாக ரசிகர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.

ரசிகர்களின் இந்த வரவேற்பால் இப்படம் இந்த வாரத்திலும் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் நீடித்துவருவதுடன், அதிகத் திரையரங்குகளிலும்
நீடிக்கிறது. இப்படத்துடன் வெளியான வெங்கட் பிரபுவின் பிரியாணி திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் நீடித்துவருகிறது.

கோ படத்திற்குப் பிறகு பெரும்பாலும் தோல்விகளையே கண்டுகொண்டிருந்த நடிகர் ஜீவாவிற்கு இப்படம் மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

2 கி.மீ மாட்டு வண்டி ஓட்டுகிறார் அஜீத் - Latest News...








விஜயா நிறுவனம் சார்பில் பி.பாரதி ரெட்டி, தயாரிக்கும் இப்படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சந்தானம், விதார்த், பாலா போன்றோரும் உள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.



சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகும் 'வீரம்' படப்பிடிப்பு நடந்த ஒரு கிராமத்துக்கு அஜித் உணவு பரிமாறினார்.கிராமத்தில் வசித்த ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று சாப்பிட்டனர். இது மெகாபந்தியாக இருந்தது என படக்குழுவினர் தெரிவித்தனர். 




இதன் பெரும் காட்சிகள் ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் படமானது. இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பிரச்சினைகளே கதை. ஆரம்பத்தில் அமைதியாக வரும் அஜித் பிறகு ஆவேசமாகி ஆக்ஷனுக்கு மாறுவது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.




படத்தில் அஜித் வேட்டி சட்டை அணிந்து வருகிறார். மேலும் ஒரு காட்சியில் 2 கி.மீ மாட்டு வண்டி ஓட்டி நடித்து இருக்கிறார்.அந்தக் காட்சி முடிந்ததும் "பிஎம்டபிள்யூ ஓட்டுனவனை மாட்டு வண்டி ஓட்ட வச்சுடீங்களேப்பா" என்று கிண்டலாக அஜித் சொன்னது யூனிட்டில் சிரிப்பை வரவழைத்தது என்று சிறுத்தை சிவா கூறினார்.

மும்பைக்கு டாடா விஜய் பட லொகேஷனை மாற்றினாரா முருகதாஸ்..?




துப்பாக்கி படத்தை மும்பையில் படமாக்கிய முருகதாஸ் அடுத்த படத்துக்கு லொகேஷனை மாற்றிவிட்டார். விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அப்படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங்கை மும்பையில் நடத்தினார்.


படம் ஹிட்டானதை தொடர்ந்து விஜய் நடித்த தலைவா பட ஷூட்டிங்கும் மும்பையில் நடந்தது. அதேபோல் அஜீத் நடித்த ஆரம்பம் படமும் மும்பையில் படமாக்கப்பட்டது. இதையடுத்து பல கோலிவுட் படங்களுக்கு மும்பை பிரதான லொகேஷன்களில் ஒன்றாக மாறிவிட்டது.


தற்போது ஜில்லா படத்தில் நடித்து வரும் விஜய் இப்படத்தையடுத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஆனால் ஷூட்டிங் லொகேஷனை கொல்கத்தாவுக்கு மாற்றி இருக்கிறார்.


 ஸ்கிரிப்ட்டை ஒரு பக்கம் மெருகேற்றிக் கொண்டிருக்கும் முருகதாஸ், தனது உதவி இயக்குனர்களுடன் கொல்கத்தா சென்று ஷூட்டிங்கை நடத்துவதற்கான பிரதான இடங்களை தேர்வு செய்து வருகின்றார். இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்க உள்ளார்.

சூர்யாவுடன் கூட்டணி அமைக்கும் சூரி!



சூர்யா நடிக்கும் புதிய படத்தில் சூரி நடிக்கிறாராம்.


சிங்கம் 2 வெற்றிக்குப் பிறகு சூர்யா, லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.


சூர்யா-சமந்தா முதன் முறையாக இணையும் படம் இது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்தப் படம் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் காமெடி நடிகர் சூரி, லிங்குசாமி படத்தில் நடிக்கவுள்ளாராம். சூர்யா-சூரி நடிக்கும் காட்சிகள் வருகிற 2014 ஆம் ஆண்டில் தொடங்கவுள்ளன.


சூரி இந்த ஆண்டில் தயாரிப்பாளர்களின் விருப்பத் தேர்வாக மாறியிருக்கிறார். ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கும இவர் அதைத்தொடர்ந்து மற்றொரு மாஸ் ஹீரோவான சூர்யாவின் படத்திலும் நடிக்கவுள்ளார்.

கொண்டாடப்படும் 'என்றென்றும் புன்னகை' : சந்தோஷத்தில் படக்குழு!





டிசம்பர் 20ம் தேதி வெளியான படங்களுள் அஹ்மத் இயக்கத்தில் ஜீவா நடித்த 'என்றென்றும் புன்னகை' மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஜீவா, த்ரிஷா, வினய், சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் டிசம்பர் 20ம் தேதி வெளியான படம் 'என்றென்றும் புன்னகை'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, அஹ்மத் இயக்கியிருந்தார். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

டிசம்பர் 20ம் தேதி 'பிரியாணி' மற்றும் 'தலைமுறைகள்' படத்துடன் 'என்றென்றும் புன்னகை' வெளியானது. 'பிரியாணி' படத்திற்கு மிகப்பெரியளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டது. வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் என்பதால் முதல் வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது.

'பிரியாணி' படத்தோடு ஒப்பிடுகையில் 'என்றென்றும் புன்னகை' படத்திற்கு பெரியளவில் விளம்பரங்கள் செய்யப்படவில்லை. படத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக வெற்றி தான் என்று வெளியிட்டார்கள்.

முதல் வாரத்தில் கம்மியான அளவிற்கே கூட்டம் இருந்தது. ஆனால் படம் நன்றாக இருக்கிறது என்று விமர்சனங்கள் வர ஆரம்பித்ததால், கூட்டம் அதிகரித்தது.

இரண்டாம் வாரத்தை பொருத்தவரை, 'பிரியாணி' படத்தை விட மக்கள் கூட்டம் 'என்றென்றும் புன்னகை' படத்திற்கு அதிகரித்து இருக்கிறது. தற்போது பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. சென்னை மாயாஜால் திரையரங்கில், முதல் வாரத்தில் 14 காட்சிகள் திரையிடப்பட்ட 'என்றென்றும் புன்னகை', இரண்டாவது வாரத்தில் 28 காட்சிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளலான இசை, சந்தானத்தின் காமெடி, ஜீவா, த்ரிஷா இடையேயான காதல் காட்சிகள் என இளைஞர்களின் புன்னகையாக மாறியிருக்கிறது 'என்றென்றும் புன்னகை'

Monday 30 December 2013

சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல்-2’ ஜோடி அமலாபால்!




சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மான் கராத்தே’ படத்திற்கு பிறகு ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.


 வழக்கம்போல் நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் இப்படத்திற்கு வழக்கம்போல் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அனேகமாக ‘எதிர்நீச்சல்-2’ என பெயர் வைக்கப்படலாம்


 மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறாராம். ஹன்சிகாவுடன் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், மீண்டும் முன்னணி நடிகையான அமலாபாலுடன் ஜோடி சேர்ந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இப்படம் முழுக்க முழுக்க ஆக்சனை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் வருகிறாராம்.


 இப்படத்தில் நடைபெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக குங்பூ என்ற தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள இருக்கிறாராம். வில்லன் ஒரு குங்பூ வீரன் என்பதால் அவருடன் சண்டை போடுவதற்காக இந்த பயிற்சியை பெறுகிறாராம்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top