தமிழ் திரையுலகின் நடிகைகளை பொருத்தவரையில், ரசிகர்கள் மனதில் மீண்டும் ராணியாக அமர்ந்தார் 'நயன்தாரா'. எல்லா வருடத்தையும் போலவே இந்த வருடமும் நாயகியை முன்னிலைப்படுத்தி நிறைய படங்கள் வெளிவரவில்லை. 'ராஜா ராணி' படத்தில் நயன்தாரா மற்றும் 'விடியும் முன்' படத்தில் பூஜா ஆகிய படங்களைத் தவிர நாயகிகளைத் முன்னிலைப்படுத்தி எந்த ஒரு படமும் வரவில்லை.
முன்னணி நாயகிகளான அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா ஆகியோருக்கு சொல்லிக் கொள்ளுமளவில் எந்த ஒரு படமும் அமையவில்லை என்பது மிகப்பெரிய சோகமே. லட்சுமி மேனன், நஸ்ரியா ஆகிய புதுமுக நடிகைகளும் தங்களது பங்களிப்பை அளித்தார்களே தவிர, அவர்களுக்கும் முன்னணி நாயகிகள் நிலைமை தான்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற ஒரு படத்தில் நாயகியாக நடித்ததின் விளைவு, ஸ்ரீதிவ்யா கால்ஷீட் டைரி 2014ல் ஃபுல்லாகிவிட்டது. 'ஊதா கலரு ரிப்பன்' பல படங்களுக்கான வாசலை ரிப்பன் வெட்டி திறந்துவிட்டது.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு முன்பு ஸ்ரீதிவ்யா நடிப்பில் 'காட்டுமல்லி', 'நகர்ப்புறம்' ஆகிய படங்கள் முடிந்தாலும் இன்னும் வெளிவரவில்லை. ஒரு படத்தின் ஹிட், 2014ல் ஜி.வி.பிரகாஷுடன் 'பென்சில்', அதர்வாவிற்கு ஜோடியாக 'ஈட்டி', விஷ்ணுவிற்கு ஜோடியாக 'வீர தீர சூரன்' என ஸ்ரீதிவ்யா பயங்கர பிஸி.
'ராஜா ராணி' படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தார் நயன்தாரா. ’மெளன ராகம்’ படத்தின் நிழல் தான் என்று அனைவரும் கூறினாலும் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து நாயகியாக நடித்தாலும், இவரது மார்கெட் குறையாதது இவரை மேலும் சந்தோஷமாக ஆக்கியது. 'ராஜா ராணி' படம் வெளிவருவதற்கு முந்தைய தினம் ட்விட்டர் தளத்தில் இவரது பெயர் இந்தியளவில் டிரெண்டானது தான் ஹைலைட்.
அஜித்துடன் நடித்த 'ஆரம்பம்' படமும் வசூலை குவிக்க நயன் மவுசு குறையவே இல்லை. 2014ல் பாண்டிராஜ் - சிம்பு படம், ஜெயம் ரவி - ஜெயம் ராஜா படம், 'கஹானி' தமிழ், தெலுங்கு ரீமேக்கான 'அனாமிகா' என நயனின் பட புக்கிங்களும் ஃபுல் ஸ்டாப் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
எதார்த்தமான பாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் லட்சுமி மேனன், அதே பாணியை தொடர்வாரா அல்லது தனது பாணியை மாற்றிக் கொள்வாரா என்பது போகப் போகத் தெரியும்.
2014ல் நாயகிகளை முன்னிலைப்படுத்தி அதிகமான படங்கள் வெளிவருமா என்பது கேள்விக்குறியே.