.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 14 September 2013

அறிவுலக மேதையாகத் திகழ்ந்தவர் அண்ணா : ஜெயலலிதா புகழாரம்!




ஓர் அறிவுலக மேதையாகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா புகழாரம் செய்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மடலில், எண்ணற்ற தமிழர்களின் எண்ணங்களில் நீக்கமற வீற்றிருப்பவரும்; தாய்மொழியாம்  தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவரும்; தனது நாவன்மையாலும், எழுத்துத் திறமையாலும், ஜனநாயகப் பண்பினாலும் தமிழ் நாட்டில் மறுமலர்ச்சியை உருவாக்கியவருமான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 105-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதிலும், இந்த நன்னாளில் அவருடைய சிந்தனைகளை, பன்முக ஆற்றலை நினைவு கூர்ந்து அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும், உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் அளவில்லா ஆனந்தமும், மட்டற்ற மகிழ்ச்சியும் அடைகிறேன்.


இணையற்ற பேச்சாளர்; எழுச்சி மிகு எழுத்தாளர்; திறமையான நிர்வாகி; சிறந்த கவிஞர்; கண்ணியம் மிக்க அரசியல் தலைவர்; மாற்றாரையும் மதிக்கும் மனித நேயப் பண்பாளர்; ஏழைகளின் ஏந்தல் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா என்று சொன்னால் அது மிகையாகாது.

 
சுயமரியாதைச்  சிந்தனைகளை, முற்போக்கு கொள்கைகளை, சீர்திருத்தக் கருத்துகளை தன்னுடைய நாடகங்களின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பரப்பியவர் பேரறிஞர் அண்ணா.


பாமர மக்களும்  புரிந்து கொள்ளும் விதத்தில் பாடல்களை இயற்றியவர் மகாகவி பாரதி என்றால்,  பாமரரையும், படித்தவரையும் ஈர்க்கும் வகையில் மேடைப் பேச்சினை ஒரு கலையாக மேன்மைப்படுத்திவர் நம் பேரறிஞர் அண்ணா.


தமிழில் மட்டுமல்லாமல், அனைவரும் வியக்கும் வகையில் ஆங்கிலத்திலும் திறம்பட பேசக் கூடியவர் பேரறிஞர் அண்ணா. ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவிடம் சென்று because என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வரும் வகையில் வாக்கியம் அமைக்க முடியுமா? என்று கேட்டனர். 

 “No sentence can begin with because, because, because is a conjunction”


என்று உடனடியாக பதில் அளித்தார் பேரறிஞர் அண்ணா.


நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருவள்ளுவர் படத்தையும், திருக்குறளையும் இடம் பெறச் செய்தவர் பேரறிஞர் அண்ணா, ஒரு முறை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுந்து, 


“யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

என்று பேருந்தில் எழுதப்பட்டுள்ள குரல் யாருக்காக? ஓட்டுனருக்காகவா? அல்லது நடத்துனருக்காகவா? அல்லது பயணிகளுக்காகவா? என்று கேட்டார்.  இக்கட்டான சூழ்நிலையில் பேரறிஞர் அண்ணா சிக்கித் தவிக்க வேண்டும் என்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி இது.


ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்காக அந்தக் குரல் எழுதப்பட்டிருக்கிறது என்று சொன்னால் தொழிலாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.  பயணிகளுக்காக என்று சொன்னால் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டும்.  இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பேரறிஞர் அண்ணா அளித்த பதில் என்ன தெரியுமா?

 "நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதப்பட்டுள்ளது" 

என்று மிக நுணுக்கமாக பதில் அளித்தார்.  இந்த பதிலைக் கேட்டவுடன் அனைவரும் வியந்தனர். பேரறிஞர் அண்ணாவின் வாதத் திறமைக்கும், சமயோசித தன்மைக்கும், கூர்த்த மதியுடன் பதில் கூறும் அறிவாற்றலுக்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பேரறிஞர் அண்ணாவின் வாதத் திறமைக்கு இது போன்ற பல சான்றுகளை கூறிக் கொண்டே போகலாம்.


பேரறிஞர் அண்ணா அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, நடிப்புத் திறமை என பன்முகங்களைக் கொண்டு ஓர் அறிவுலக மேதையாகத் திகழ்ந்தவர்.  அரசியல் இயக்கத்தை ஒரு குடும்ப உறவாக, அதாவது தலைவர்-தொண்டர் என்ற நிலையை மாற்றி அண்ணன்-தம்பி என்ற உறவை நிலை நாட்டிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு, அவர் தோற்றுவித்த அரசியல் இயக்கம் குடும்ப இயக்கமாக மாறிவிட்ட நிலையில், பேரறிஞர் அண்ணாவால் நிலைநாட்டப்பட்ட உறவு முறையை கடைபிடித்துக் கொண்டு வரும் ஒரே இயக்கம் அண்ணாவின் இதயக்கனியாம் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கம் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" தான் என்பதை இந்தத் தருணத்தில் பெருமையுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.


பேரறிஞர் அண்ணாவின் பேச்சு, செயல் என அனைத்திலும் மனித நேயம் குடிகொண்டு இருக்கும்.  பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தடவை, அமெரிக்க நாட்டு அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார். அங்கு போய்விட்டு வரும் வழியில் வாடிகன் நகரத்திற்கு சென்று போப் ஆண்டவரை சந்தித்தார்.


போப் ஆண்டவரைச் சந்திக்கின்ற எல்லோரும் அவரிடம் ஏதாவது வரம் கேட்பது வழக்கம்.  அந்த வகையில், பேரறிஞர் அண்ணாவும் வரம் கேட்டார்.  என்ன வரம் கேட்டார் தெரியுமா?


“கோவா நாட்டு விடுதலைக்காகப் போராடிய காரணத்தால் கைது செய்யப்பட்டு போர்ச்சுக்கல் நாட்டுச் சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள ரானடே என்கிற சுதந்திரப் போராட்ட வீரரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கேட்டார்.


பேரறிஞர் அண்ணா அவர்களின் இந்த வேண்டுகோள் போப் ஆண்டவரை வியப்படையச் செய்துவிட்டது.  இதுவரை யாரும் இப்படிப்பட்ட ஒரு வரத்தை கேட்கவில்லையே! எங்கோ இருக்கிற ஒருத்தருக்காக சம்பந்தமே இல்லாத இன்னொருவர் வாதாடுகிறாரே! என்ற ஆச்சரியம்  போப் ஆண்டவருக்கு.
பேரறிஞர் அண்ணா கேட்ட அந்த வரம் அளிக்கப்பட்டது.  போர்ச்சுக்கல் சிறையிலே வாடிக் கொண்டிருந்த ரானடே விடுதலையானார். தன்னுடைய விடுதலைக்கு காரணமான பேரறிஞர் அண்ணாவுக்கு நன்றி தெரிவிக்க ரானடே சென்னைக்கு வந்தார். 


ஆனால், அவர் சென்னை வந்து சேருவதற்குள், பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த  உலக வாழ்க்கையில் இருந்தே விடுதலை ஆகிவிட்டார். அண்ணாவை ரானடேவால் பார்க்க முடியவில்லை. அவர் பிறந்த மண்ணைத் தொட்டு முத்தமிட்டு கண்ணீரைக் காணிக்கையாக்கி விட்டுச் சென்றார் ரானடே.
இப்படிப்பட்ட மனித நேயம் மிக்க பேரறிஞர் அண்ணா தோற்றுவித்த கட்சி, தீய சக்தியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது. 



மாநில சுயாட்சி, சுயமரியாதைக் கொள்கை ஆகியவற்றுடன் இளைய சமுதாயத்தினரிடையே தமிழ் உணர்வு ஏற்படவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்படவும், மூடப் பழக்கவழக்கங்கள் அகலவும், தமிழக அரசியலில்  தனிப் பாதையில் நடைபோட்டு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.


எந்தக்  கொள்கைகளை முன்வைத்து பேரறிஞர் அண்ணா ஆட்சியைப் பிடித்தாரோ, அந்தக் கொள்கைகளை புறந்தள்ளி விட்டு, தமிழ் நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்து, தன்னலத்திற்காகவும், அரசியலில் தனக்கு எதிராக உள்ளவர்களை அழிப்பதற்காகவும் காங்கிரஸின் காலடியில் சரணாகதி அடைந்திக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.


தமிழினத் துரோகி, தமிழக மக்கள் நலனை அடகு வைத்து தன்னலத்தை நிறைவேற்றிக் கொள்ளும் மனிதநேயமற்ற சுயநலவாதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மக்கள் விரோதப் போக்கை பட்டிதொட்டியெங்கும் பட்டியலிட்டு பரப்புவதோடு, அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று அவற்றை வாக்குகளாக மாற்றி, வருகின்ற நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் தி.மு.க. மண்ணைக் கவ்வும் வகையில் களப் பணியாற்ற வேண்டும் என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்த நாளில், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top