.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 14 September 2013

வன்முறை எண்ணத்தை தூண்டுமோ வானிலை மாற்றம்?


அண்மையில், பர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எட்வர்ட் மிகுவல் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான ஆய்வர் குழு, “வளிமண்டல வெப்பநிலை உயர்வு, மனிதர்களின் நரம்பு சார்ந்த உடற்செயலியல் நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, உலகில் போர் நிகழும் வாய்ப்புகளை அதிகமாக்கும்’ என்று கூறுகிறது.ஆம், வளி மண்டலத்தில் கரியமில வாயு போன்ற பசுங்குடில் வாயுக்கள் நிறைவதால் உலகளாவிய சூழல் வெப்பநிலை அதிகரித்து பல வகையான விபரீத விளைவுகளை உருவாக்கும்.


சாதாரணமாகவே கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கிறபோது அல்லது அலுவலக அறையில் குளிரூட்டும் கருவி பழுதாகி புழுக்கம் வதைக்கிறபோது அல்லது பயணிகள் நிரம்பி வழிகிற பஸ் அல்லது ரயில் பெட்டிக்குள் சிக்கிக்கொண்டு மூச்சு விடக்கூட முடியாமல் திணறுகிறபோது அல்லது சாலைப் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு காரை நகர்த்த முடியாமல் தவிக்கிறபோது – இதுபோன்ற நேரங்களில், எல்லாருக்குமே நிதானம் தவறி மனதில் எரிச்சலும் கோபமும் பொங்கியெழும். சம்பந்தாசம்பந்தமில்லாமல் எரிந்து விழுவது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, சின்ன விஷயத்துக்குக்கூட வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்பது, காது கிழியும்படி லாரி அல்லது காரின் ஊதுகுழலை அலற விடுவது போன்றவை அத்தகைய மனநிலையின் வெளிப்பாடுகள்.


sep 14 - climate and violence

 



மிகுவல் குழுவினரின் ஆய்வு முடிவு, பருவநிலை மாறுபாடுகளால் உலகளாவிய வளிமண்டல வெப்பநிலை உயர்வதற்கும் மனிதர்களின் உடல் நலம் மற்றும் மனநலக் குலைவுகளுக்குமிடையில் ஒரு நேரான இணைப்பு இருப்பதாகக் கூறுகிறது. சூழல் வெப்பநிலை உயரும்போது மனித மனங்களில் வன்முறை எண்ணங்கள் தோன்றுவதும் அதிகமாகிறது. அவ்வாறு ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பதை அந்த ஆய்வர்களால் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்ட முடியவில்லை.சூழல் வெப்பநிலை உயரும்போது தனி நபர்களின் நரம்பு மண்டலம் சார்ந்த உடலியக்கவியல் நடவடிக்கைகளில் தாக்கமுண்டாவதாக மிகுவல் ஊகிக்கிறார்.


மிகுவலின் ஆய்வர் குழு கி.மு. 8000 முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சண்டை சச்சரவுகளையும் வன்முறைகளையும் ஆராய்ந்து, முக்கியமான பல நூறு வன்முறை சம்பவங்களைப் பகுப்பாய்வு செய்து, பல்லாயிரம் தரவுகளைப் பதிவு செய்துள்ளது. அவற்றுக்கும் பருவ நிலை மாற்றங்களுக்குமிடையில் ஏதாவது நேர்கோட்டுப் பொருத்தம் தென்படுகிறதா என புள்ளியியல் தத்துவங்களின் அடிப்படையில் ஆய்வு செய்திருக்கிறார்கள். சில ஆயிரம் வாக்காளர்களிடம் விசாரணை செய்து அடுத்து எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்று அறிவிப்பதைப் போன்ற செயல்முறைதான் இது. எனினும் இதை அறிவியல் அங்கீகரிக்கிறது. பெரும்பாலான சமயங்களில் அத்தகைய ஜோசியங்கள் பலித்தும் விடுகின்றன.


2050-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய வளிமண்டல வெப்ப நிலையில் இரண்டு செல்சியஸ் டிகிரி வரை உயர்வு ஏற்படக்கூடும் என அனுமானம் செய்கிற விஞ்ஞானிகள், அது கோடை கால சராசரி வெப்ப நிலை உயர்வு, காலமில்லாத காலத்தில் பெரு மழைப் பொழிவு போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம் என ஊகிக்கிறார்கள். அது மட்டுமின்றி தற்காலத்தில் இனம், மதம், சாதி, கட்சி சார்ந்த சச்சரவுகள் பரவலாக நிகழ்ந்து கொண்டிருக்கிற நாடுகளில், குறிப்பாக வெப்ப மண்டல நாடுகளில், உள்நாட்டுக் கலகம், புரட்சி போன்ற சச்சரவுகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை உயரக்கூடும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.



எனினும் பருவ நிலை மாற்றத்துக்கும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கும் ஓர் இணைப்பு உள்ளதாக அவர்களால் சுட்டிக்காட்ட முடிந்த போதிலும், எந்த நாட்டில், எந்தப் பகுதியில், எந்தவிதமான சச்சரவு எப்போது வெடிக்கும் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு விதி அல்லது கோட்பாட்டை அவர்களால் உருவாக்க முடியவில்லை. ஆனால், பாதகமான பருவ நிலை மாற்றத்துக்கும் வன்முறை உணர்வுகள் தூண்டப்படுவதற்குமிடையில் ஒரு காரண காரிய இணைப்புள்ளது என்பதை அனுபவம் சார்ந்த சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.



வன்முறை என்பதில் கொலை, களவு, கற்பழிப்பு போன்ற தனி நபர் குற்றங்களும் குழுக்களுக்கிடையிலான சச்சரவுகளும் அடங்கும். மிகுவல் ஆய்வுக்குழு உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்த 27 வன்முறைச் சம்பவங்களைப் பகுப்பாய்வு செய்த பின்னர், அதிகரித்த வறட்சி, சராசரியைவிட கூடுதலான ஆண்டு வெப்பநிலை போன்ற பாதகமான பருவநிலை மாற்றங்கள் அந்தச் சச்சரவுகளுக்கு ஒரே மாதிரியான தூண்டு விசையாக அமைந்தன என்று முடிவு செய்தது. மனிதர்களின் நரம்பு சார்ந்த உடலியக்கவியல் செயல்பாடுகளில் ஏற்பட்ட தாக்கம் மட்டுமின்றி, விவசாயம் பொய்த்தது போன்ற பொருளாதார சீர்குலைவுகளும் பருவநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்பட்டுச் சச்சரவுகளுக்கு வித்திட்டிருக்கக்கூடும். வளர்ச்சியில் பின்தங்கியுள்ள நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் உணவுக்கும் வருவாய்க்கும் உள்நாட்டு விவசாய உற்பத்தியையே நம்பியிருக்கின்றனர். அதீதமான வறட்சி அல்லது பெருமழைப் பொழிவு விவசாய உற்பத்தியை பாதித்து வருவாயைக் குறைக்கும். அதன் காரணமாக மக்களிடம் விரக்தியும் ஏமாற்றமும் தோன்றி வன்முறைச் சம்பவங்களுக்கு வழிகோலும் என மிகுவல் கருதுகிறார்.



பண்டைய காலத்தில் மாயன் மற்றும் சீன சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சி முதல், அண்மைக்காலத்தில் இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் அதிகரித்த குடும்பச் சண்டைகள், அமெரிக்காவிலும் தான்சானியாவிலும் அதிகரித்த கொலைகளும் குற்றங்களும் ஐரோப்பாவிலும் தெற்காசியாவிலும் அதிகரித்த இனக்கலகங்கள், பிரேசிலில் மக்கள் அரசு நிலங்களை ஆக்கிரமித்தது, வெப்ப மண்டல நாடுகள் எல்லாவற்றிலுமே குடும்ப மற்றும் சொத்துத் தகராறுகள் அதிகரித்தது என்பன வரையான பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் மிகுவல் குழுவினரால் பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையிலேயே பருவ நிலை பாதிப்புகளுக்கும் மனித சமூகச் சச்சரவுகளுக்குமிடையில் ஒரு தொடர்பு இருப்பதாக மிகுவல் ஆய்வுக் குழுவினர் முடிவு செய்தனர். 



அந்தத் தொடர்பு எத்தன்மையது என்பதைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் தொடர்பு இருப்பதை யாரும் மறுதலிக்கவில்லை. அவருடைய ஆய்வர் குழுவில் தொல்லியல், குற்ற ஆய்வியல், பொருளியல், புவியியல், வரலாற்றியல், அரசியல், உளவியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் தாங்கள் சேகரித்த தரவுகளை, புள்ளியியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி, கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப நெளிவு சுளிவுகளை அனுமதித்து பகுப்பாய்வு செய்த பின்னரே முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.



எதிர்காலத்தில் வெப்பநிலை உயர்வு காரணமாக வேறு பல பாதக விளைவுகளுடன் உள்நாட்டுக் கலகங்களும் இனப்படுகொலைகளும், ஏன் மூன்றாவது உலகப் போரும்கூட மூளலாம் என்ற சாத்தியக் கூறும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. உலகளாவிய வெப்பநிலை உயர்வைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயமும் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top