உள்கட்சி பூசல், கடும் நெருக்கடிக்கு இடையே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து 1987 ஆம் ஆண்டு பாஜக கட்சிக்கு பிரவேசித்த மோடி, குஜராத் மாநில பாஜக ஒருங்கிணைப்புச் செயலர், பாஜக நிர்வாகி, பொதுச் செயலர் உள்ளிட்ட பதவி வகித்து தற்போது பிரதமர் வேட்பாளர் வரை உயர்ந்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு அத்வானி நடத்திய ரத யாத்திரையை நரேந்திர மோடி முன்னின்று வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானியின் ஆதரவுடன் மோடியை முதல்வர் வேட்பாளராக 2001 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்பு குஜராத் முதல்வராக கேஷூபாய் பட்டேல் பதவி விகித்தார்.
2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்தில் கரசேவர்கள் 59 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டார் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் நரேந்திர மோடி குற்றம்சாட்டப்பட்ட காரணத்தால் அவர் சர்ச்சையில் சிக்கினார். இந்த சம்பவத்துக்கு நரேந்தர் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கருத்து தெரிவித்தார்.
ஆனாலும், அத்வானியும், மறைந்த முன்னாள் அமைச்சர் பிரமோத் மஹாஜன் ஆகியோரின் ஆதரவால் நரேந்திர மோடி முதல்வர் பதவியில் நீடித்தார்.
அதன் பின்னர் சொராபுதின் ஷேக் என்கவுன்டர் சம்பவத்திலும் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது போன்ற காரணங்களால் நரேந்திர மோடி நாட்டை இரு துருவங்களாக்கும் தலைவர் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க அத்வானி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும், மூன்று முறை குஜராத் முதல்வராக மக்களால் மோடி தேர்வு செய்யப்பட்டதால் கட்சியில் அவருக்கு ஆதரவு பெருகியது.
கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் நரேந்திர மோடி தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்வானி கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து ராஜிநாமா செய்தார். இதையடுத்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலையிட்டு சமாதானப்படுத்திய பின்பு தனது ராஜிநாமாவை வாபஸ் பெற்றார்.
தேர்தல் பொறுப்பாளர் பதவி மோடிக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 17 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் பிரிந்து சென்றது. இது போன்ற பல்வேறு சவால்களுக்கு இடையே 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 17 ஆம் தேதி தனது 63 வது பிறந்த நாளை நரேந்திர மோடி கொண்டாட உள்ளார்.