.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 26 October 2013

களைப்பில்லாமல் களையெடுக்கலாம்!

சூரிய ஒளியில் இயங்கக் கூடிய களை எடுக்கும் இயந்திரம் ஒன்று  வடிவமைக்கப்பட்டுள்ளது

கண்டுபிடிப்பின் பெயர்: சோலார் ட்ரில்லர்
கண்டுபிடிப்பாளரின் பெயர்: எல்.முகேஷ் நாராயணன்


படிக்கும் பள்ளி: ஆத்மாலயா பள்ளி, கீழகாசாக்குடி,காரைக்கால்


கண்டுபிடிப்பின் பயன்: தற்போது பெரும்பாலான விவசாயிகள் களை எடுப்பதற்கு கோனோ வீடர் என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர். வயலில் தள்ளிச் செல்லும் அமைப்புள்ள  இந்தக் கருவி, சக்கரத்தின் சுழற்சிக்கேற்ப களைகளை நீக்கும். ஆனால் கோனோவீடரை அதிக நேரம் கையாளும்போது விவசாயிகள் களைப்படைகின்றனர். இதற்கு முற்றிலும் மாற்றாக இந்த சோலார் ட்ரில்லர் கருவி செயல்படுகிறது.

இதில் சூரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த இயந்திரத்தை எளிதாக விவசாயிகள் கையாள முடியும். களைகளை துல்லியமாகவும் அகற்ற முடியும். மேலும் இந்த ட்ரில்லரை  சிறிய அளவிலான விவசாய நிலங்களை உழுவதற்கு டிராக்டருக்கு மாற்றாகவும்  பயன்படுத்தலாம் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

கோனோவீடரால் துல்லியமாக களைகளை அகற்ற முடிவதில்லை. இதனால் விவசாயிகள் ஒருமுறைக்கு பல முறை கோனோவீடரை நிலத்தில் பயன்படுத்த வேண்டி  இருக்கிறது. இப்படிப் பலமுறை கோனோவீடரை நிலத்தில் தள்ளிச்செல்லும்போது உடல் வலி ஏற்படுவதாக விவசாயிகள் பேசிக் கொள்வதைக் கவனித்தேன்.

மேலும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக சில ஏழை விவசாயிகள் மற்றவர்களைவிட தாமதமாகவே தங்கள் நிலங்களில் விவசாயப் பணிகளைத் தொடங்குவர். இதனால் இவர்கள் தங்கள் நிலத்தை உழுவதற்கு முன்னரே அதைச் சுற்றியுள்ள நிலங்களில் விவசாய வேலைகள் முடிந்து பயிர்கள் வளரத் தொடங்கிவிடும். இதனால் உழவு செய்ய மாடுகளையோ, டிராக்டரையோ நடுவிலுள்ள அவர்களின் நிலத்திற்கு கொண்டுசெல்ல முடியாது. இதனால் தண்ணீர் இருந்தும்  விவசாயம் செய்யாத பல விவசாயிகளைப் பார்த்தேன். எனவே இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே கருவியின் மூலம் தீர்வு காண வேண்டும் என நினைத்து இந்தக் கருவியை வடிவமைத்துள்ளேன்.

25 வாட்ஸ் திறனுள்ள சோலார் தகடு இந்த இயந்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சோலார் தகட்டின் மூலம் பெறப்படும் மின்சாரம், சார்ஜ் கண்ட்ரோலரின் உதவியால் 12 வோல்ட் டி.சி. மின்சாரமாக பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்பட்ட மின்சாரம்  மூலம் டி.சி. மோட்டார் இயக்கப்படுகிறது. மோட்டாரை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஸ்விட்ச் பயன்படுத்தப்பட்டுள்ளது. களை எடுக்க மற்றும் உழவு செய்ய மோட்டாருடன் கியர் பாக்ஸ் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. நிலத்தின் அமைப்பிற்கேற்ப  இயந்திரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்" என்கிறார் முகேஷ் நாராயணன்.

இயந்திரத்தின் சுழலும் அமைப்பில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆன கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் துரு பிடிக்கும் பிரச்சினை கிடையாது. இதை எளிதாக தள்ளிச் செல்லலாம் என்பதால் மனித உழைப்பு அதிகம் தேவையில்லை. எரிபொருள் செலவும் இல்லை. சோலார் பேனல் மற்றும் பேட்டரியோடு இதன் விலை 15,000 ரூபாய். சோலார் பேனல் இல்லாமல் 3,750 ரூபாய். அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது விலை மேலும் குறையலாம்.

தொடர்புக்கு: 95666 68066

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top