.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 26 October 2013

அவ்வையின் நையாண்டி !


நமது பழந்தமிழ் புலவர்கள் பாடல் எழுதுவதற்கு எழுத்துகளை மட்டும் பயன்படுத்தவில்லை , எண்களையும் அதிலும் குறிப்பாக பின்னங்களையும் பயன்படுத்தி இருக்கின்றனர். இதற்கு அவ்வை பாடிய பாடல் ஒரு நல்ல உதாரணம். தன்னை நையாண்டி செய்த புலவர் ஒருவரை பார்த்து அவ்வை வசை பாடிய ஒரு வசைப்பாட்டை இப்போது பார்ப்போம்.


எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே,  முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!


இதில் முதல் வரியில் வரும் “ எட்டேகால்“ என்பதை எட்டு + கால் அதாவது 8 + 1/4 என்று பிரித்து படிக்க வேண்டும்.


அப்படி படித்தால் 8 என்பதற்கு உரிய தமிழ் எண் “ அ“ அதே போல் கால் 1/4  என்னும் பின்னத்துக்கு உரிய தமிழ் எண் “ வ “ . எட்டேகால் = எட்டு + கால் அதாவது அ + வ = அவ


அந்த பாடலின் முதல் வரியை படியுங்கள். ‘அவ‘ லட்சணமே என்று பொருள் வருகிறதா?


அடுத்த வரி, எமனேறும் பரியே - எருமை மாடே



3-வது வரி 'மட்டில் பெரியம்மை வாகனமே'  மூத்த தேவி என்னும் மூதேவியின் வாகனமான கழுதையே



'முட்டமேல் கூரையில்லா வீடே'  மேல் கூரையில்லா வீடு அதாவது குட்டிச்சுவரே




'குலராமன் தூதுவனே' - ராமன் தூதுவனே - அதாவது  குரங்கே



கடைசி சொல்லான ‘ஆரையடா சொன்னாயடா ‘ என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.




“ நீ ஆரைக் கீரையைத்தான் சொன்னாய் அடா! “ என்பது ஒரு பொருள்.



இதில் இப்போது ‘சொன்னாய்‘ என்பதை மட்டும் பிரித்தால்



‘சொன்னாய்‘ = சொன்ன + நாய் என்று நாயயையும் குறிக்கும்


அல்லது




யாரை பார்த்து சொன்னாய் என்று கேட்பது போலவும் குறிக்கும்.




எப்படி இருக்கிறது பாருங்கள், நம் புலவர்களின் நையாண்டி!

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top