.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 18 November 2013

இன்னும் 6 சுற்றுகள்; என்ன செய்யப் போகிறார் ஆனந்த்?

 

அடுத்தடுத்த சுற்றுகளில் தோல்வி அடைந்ததன் மூலம் கார்ல்ஸெனை விட 2 புள்ளிகள் பின் தங்கி உள்ளார் ஆனந்த். இன்னும் 6 சுற்றுகள் மட்டுமே மீதி உள்ளது. அதனால், அனுபவம் வாய்ந்த ஆனந்த் எத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற ஆவல் மேலோங்கி உள்ளது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) நடத்தும் இத்தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதுவரை முடிந்த 6 சுற்றுக்களின் முடிவில், நார்வேயின் கார்ல்ஸென் 4 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 5-வது மற்றும் 6-வது சுற்றுக்களில் அடுத்தடுத்து அவர் 2 வெற்றிகள் பெற்றதே இதற்கு காரணம்.

இத்தொடரில் 6.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். தரவரிசையில் முதல் இடத்திலுள்ள கார்ல்ஸென் இன்னும் 2.5 புள்ளிகள் பெற்றால், உலக சாம்பியனாகி விடுவார்.

ஓய்வுக்குப்பின் திங்கள்கிழமை 7-வது சுற்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆனந்த் தன் திறமையை நிரூபித்தாக வேண்டும். இந்த தொடர் தொடங்கும் முன், ஆனந்த் இவ்வளவு எளிதில் சரணடைவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல் நான்கு சுற்றுகள் டிராவில் முடிந்தபோது நம்பிக்கையுடன் இருந்த ஆனந்த், அடுத்தடுத்த தோல்வியால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். 6-வது சுற்றின் முடிவில் இது கண்கூடாகத் தெரிந்தது.

5-வது சுற்றின் தோல்வி, 6-வது சுற்று ஆட்டத்தில் எதிரொலித்தது என்று ஆனந்த் தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்த தோல்விகளைக் கையாளும் விதம் குறித்து நார்வே பத்திரிகையாளர் ஒருவர் ஆனந்திடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆனந்த், ""இன்னும் திறமையாக செயல்பட வேண்டும்'' என்றார்.

பதிலை விரிவாகத் தெரிவிக்குமாறு அந்த நிருபர் வலியுறுத்தினார். அதற்கு ஆனந்த், ""திறமையாக செயல்பட வேண்டும் என்பதற்கு அர்த்தம் திறமையாக செயல்பட வேண்டும் என்பதே. இந்த ஆங்கிலம் ஏன் உங்களுக்குப் புரியவில்லை எனத் தெரியவில்லை'' என்றார்.

இதற்கு முன்பும் தோல்விக்குப் பின் பத்திரிகையாளர்கள் இதுபோல ஆனந்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், ஆனந்த் அப்போதெல்லாம் நிதானம் இழக்கவில்லை.

7-வது சுற்றில் ஆனந்த் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாட உள்ளார். கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறக் காய்களிலும் கார்ல்ஸென் திறமையை நிரூபித்து விட்டார். குறிப்பாக, கருப்பு நிறக் காய்களுடன் காரோ கான் மற்றும் பெர்லின் தடுப்பு முறைகளில் ஆனந்துக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தார்.

புள்ளிகள் பட்டியல்

சுற்று ஆனந்த் கார்ல்ஸென்

1               0.5     0.5

2               0.5     0.5

3               0.5     0.5

4                0.5    0.5

5                    0      1

6                     0     1

* டிராவானால் தலா 0.5 புள்ளிகள்.

* வெற்றி பெற்றால் 1 புள்ளி.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top